“அர்ச்சுனா ஆணாதிக்க சீழ் பிடித்த யாழ்ப்பாண சிந்தனையின் ஒரு துளி விஷம்” – அருண் சித்தார்த் ஆவேசம் !
அண்மையில் எம்.பி அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் பெண் ஒருவரை பெயர் குறிப்பிட்டு விபச்சாரி என சுட்டியது தொடர்பில் மௌபிம ஜனதா கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், யாழ் மையவாத, சாதிய, சனாதன, பழைமைவாத, ஆணாதிக்க சீழ் பிடித்த மூளையின் அசிங்கமான சிந்தனைமுறை வெளியே துப்பிய புழுக்களாக இந்த சொற்களை நான் கருதுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் குறிப்பிட்ட அருண் சித்தார்த், விபச்சாரி என்னும் சொல் காட்டுமிராண்டிகளின் சொல். ஏனென்றால் அது ஆணைக் குற்றவாளியாக அறிவிப்பதில்லை. அச்சொல்லுக்கு ஆண்பால் கிடையாது. ஒரு விளிம்புநிலைப் பெண்ணை அவளது பெயர் விலாசத்துடன் இந்நாட்டின் உயரிய சபையான சட்டவாக்கும் சபையில் முழு உலகும் பார்க்க விபச்சாரி என்று சொல்லும் தைரியத்தை இந்த நபருக்கு வழங்கியது யார் அல்லது எது? மன வலிமை குறைந்த ஒரு சமான்ய பெண்ணாக இருந்தால் அவளைத் தற்கொலைக்குத் தூண்டும் மிக மோசமான (statement) பேச்சு இது. அவளை நேசிக்கும் சகோதரர்களும் ஆண்களும் இருந்தால் இதைச் பேசிய நபரைக் கொலை செய்யத் தூண்டும் மிகக் கேவலமான கீழ்த்தரமான பேச்சு இது. என தெரிவித்துள்ளார்.