மன்னார் – பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் 83 கிலோமீற்றர் நீளமான ஏ-32 பிரதான வீதியை மூவாயிரம் மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் பிரேமசிரி தெரிவித்தார்.
எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள முதற்கட்ட பணியின்போது 48 கிலோ மீற்றர் நீளமான வீதியே புனரமைக்கப்படவுள்ளதாகவும், சுத்திகரிக்கப்பட்டதற்கான அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் எஞ்சியுள்ள வீதியை வெகுவிரைவில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ். குடாநாட்டிற்கு இலகுவாக செல்லும் 280 மீற்றர் நீளத்தைக் கொண்ட சங்குப்பிட்டி பாலம் நிர்மாணிக்கும் பயணிகள் இன்னும் ஒரு மாதகாலத்திற்குள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட வட மாகாணத்தில் வெகு விரைவில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்குத் தேவையான சகல வசதிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏ-32 பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள அதே சமயம், யாழ் – கண்டி- கொழும்பு ஏ-9 பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகளும் 12 கிலோ மீற்றர் நீளமான சிலாவத்துறை- முருங்கன் வீதி, 40 கிலோ மீற்றர் நீளமான புத்தளம் – மன்னார் வீதியின் புனரமைப்பு பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேசமயம், மேலும் இந்தப் பகுதியிலுள்ள வீதிகளும், பாலங்களும் புனரமைப்பதற்கான திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக பொது முகாமையாளர் ரஞ்சித் பிரேமசிறி மேலும் தெரிவித்தார்.