அர்ச்சுனா ஒரு குழப்படிகாரப் பொடி: அர்ச்சுனா குரைக்கின்றார் என்பதற்காக பொறுப்பானவர்கள் குரைக்கக் கூடாது !

அர்ச்சுனா ஒரு குழப்படிகாரப் பொடி: அர்ச்சுனா குரைக்கின்றார் என்பதற்காக பொறுப்பானவர்கள் குரைக்கக் கூடாது !

பள்ளிக்கூடங்களில் எல்லா வகுப்பிலும் ஓரிரு சிறுபிள்ளைத்தனமான குறளிவித்தை செய்யும் மாணவர்கள் இருப்பார்கள். அவ்வாறான மாணவர்களை பக்குவமாகக் கையாள்வது ஆசிரியருடைய பொறுப்பு . அதேபோல கூட்டத்தில் குழப்பம் விளைவிப்பவர்களை கையாள்வது சபையின் முதல்வருடைய பொறுப்பு. அர்ச்சுனா ஒரு சமூகம் பற்றிய புரிதல் அற்ற உளவியல் பிரச்சினைகள் கொண்ட குறளிவித்தைக்காரன். அர்ச்சுனா கூட்டங்களில் குரைக்கின்றார் என்பதற்காக மற்றவர்களும் குரைப்பது அவ்வளவு ஆரோக்கியமானது இல்லை என்பதற்கு நல்லூர், வேலனை பிரதேசசபைக் கூட்டங்கள் மற்றும் யாழ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் என்பன நல்ல உதாரணங்கள். யாழில் நேற்றைய தினம் நடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் குழப்பத்தில் முடிவடைந்தது. இந்த விவகாரம் தொடர்பில் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்திருந்தார்.

வரவு செலவுத்திட்டத்தில் வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை கணக்காய்வு செய்யும் மற்றும் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திதிட்டங்கள் தொடர்பாக யாழில் நேற்று அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அக்கூட்டத்தை வினைத்திறனாக நடத்த விடாமல் சில நபர்கள் குழப்பங்களை ஏற்படுத்தினார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இருந்தபோதும் வடக்கிற்கு கொண்டுவரப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தாங்கள் கலந்துரையாடி உள்ளோம் என்றார். கூட்டம் குழப்பத்தில் முடிந்தாலும் வடக்கில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து என்பிபி அரசாங்கம் பின்வாங்கப்போவதில்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சூளுரைத்தார். கூட்டத்தை குழப்பிய பாராளுமன்ற அர்ச்சுனாவையே அமைச்சர் இவ்வாறு சாடியிருந்தார்.

பாராளுமன்ற சம்பளத்தைவிட யூரியூப் மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரை உழைப்பதாகத் தெரிவிக்கும் அர்ச்சுனா தன்னுடைய வெளிநாட்டில் உள்ள பார்வையாளர்களை கிளுகிளுப்பாக வைத்திருக்க பல்வேறு குறளிவித்தைகளையும் காட்டி வருகின்றார். அதற்காக அவர் எந்தக் கீழ் நிலைக்கும் செல்லத் தயங்கப் போவதில்லை.

கடந்த ஆறுமாதங்களில் அர்ச்சுனா தன்னை யார் என்பதை மிகத் தெளிவாக அடையாளப்படுத்தி உள்ளார். அதனால் அவருடைய நிலையை உணர்ந்து தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருடைய உளவியல் வலைக்குள் சிக்காமல் அறிவுபூர்வமாகச் செயற்பட வேண்டும். அர்ச்சுனா குரைக்கின்றார் என்பதற்காக என்பிபி பாராளுமன்ற உறுப்பினர்களும் பதிலுக்குக் குரைத்து மக்களுக்கு செய்ய வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகளை பிற்போடக் கூடாது. பா உ ரஜீவன் தலைமையில் நடந்த நல்லூர் பிரதேசசபைக் கூட்டத்தை ரஜீவன் ஓரளவு அவதானமாகச் செய்திருந்தாலும் ஊசி அர்ச்சுனாவுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கக்கூடாது.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளான ஆளும் கட்சி எம்பி இளங்குமரன் கருணாநாதன் எதிர்க்கட்சி எம்பியுமான அர்ச்சுனா இராமநாதன் இருவரும் கண்டபடி வார்த்தைகளை அள்ளி வீசி மோதிக் கொண்டனர். அரசாங்க அதிகாரிகள் மற்றும் மக்கள் முன்னிலையில் முக்கியமான பிரச்சினைகளை கதைக்க வேண்டிய நேரத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் தனிப்பட்ட விடயங்களை இழுத்து பரஸ்பரம் சேற்றை வாரியிறைத்து கூட்டத்தை நாறடித்தனர்.

கிழக்கில் நடைபெறுகின்ற அமைதியான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு மாறாக வடக்கில் அர்ச்சுனாவின் யூரியூப் வியூஸ்க்காக பெரும்பாலும் உருப்படியற்ற கலாட்டா கூட்டங்களே நடைபெறுகின்றது. பொதுவாகவே ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள் காரசாரமான வாதப்பிரதி வாதங்களால் அதகளப்படுவது அவ்வப்போது நடைபெறுவது உண்டு. முக்கியமான விடயங்கள் கலந்துரையாட வேண்டிய கூட்டத்தை கேலிக்கூத்தாக்க முடியாது. தனிநபர் வசை பாடல்களை தவிர்க்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறலாம்.

அர்ச்சுனா தன்னை நோக்கி என்ன கேள்வி வந்தபோதும் தேய்ந்துபோன றெக்கோட் (Record) போல் நான் எம்பிபிஎஸ் படித்தனான் நீ என்ன படிச்சனி என்பதில் வந்து நிற்கின்றார். பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும் தன்னளவுக்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் படித்தவராம் அதனால் தான் தான் கூட்டுச்சேர்ந்தவர் என்கிறார். தலைவர் பிரபாகரன் எட்டாம் வகுப்பை தாண்டாதபடியால் தன்னளவிற்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் படித்த அன்ரன் பாலசிங்கத்தை மதியுரைஞராக வைத்திருந்தவராம். தன்னளவுக்கு இல்லாவிட்டாலும் அன்ரன் பாலசிங்கம் என்ற படித்தவர் இல்லாவிட்டால் பிரபாகரனின் நிலையும் பரிதாபம் என்று நினைக்கின்றார் ஊசி அர்ச்சுனா.

இப்படியான வேண்டத்தகாத மற்றும் நேரத்தை விரயமாக்கும் குழறுபடிகளை தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகளை முற்கூட்டியே திட்டமிட வேண்டும். நிகழ்ச்சி நிரல் முறையாக தயாரிக்கப்பட்டு அதன்படியே ஒருங்கிணைப்பு கூட்டத்தை கொண்டு நடத்த வேண்டும். நடந்த குழப்பங்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திறமையாக சமாளிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களை அவர் மிகத் திறமையாக கையாண்டிருந்தார். எதிர்காலத்திலும் அவர் திறமையாகக் கையாள்வார் எனக் கொள்ளலாம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *