தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி பிழைக்கும் மலையக அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்

sri-lanka-upcountry.jpgமலையக தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி பிழைக்கும் மலையக அரசியல்வாதிகளுக்கு நல்லதொரு பாடத்தை தொழிலாளர்கள் புகட்ட வேண்டுமென சுகாதார போஷாக்கு நலன்புரி பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் பசறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரதியமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்; வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸில் தொழிலாளர்களிடமிருந்து அறவீடு செய்யும் ஒருமாத சந்தாப் பணத்தை அனுப்புவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளப்படுகிறது. ஒருநாள் வேதனத்தை அனுப்ப வேண்டிய தேவை கிடையாது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதாரத் துறையில் மிகவும் பாதிப்படைந்து காணப்படுகின்றனர். ஒருசில மலையக அரசியல்வாதிகள் தெரிவிப்பது போன்று ஒருநாள் வேதனத்தை வழங்கக் கூடிய நிலையில் தொழிலாளர்கள் தற்போது இல்லை. மிகவும் சிரமத்திற்கு மத்தியிலே தொழிலாளர்கள் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் அவர்களுடைய வேதனத்திலிருந்து ஒருநாள் சம்பளத்தை பாதிக்கப்பட்டுள்ள வன்னி மக்களுக்கு அனுப்ப வேண்டுமென ஒரு சில மலையக அரசியல்வாதிகள் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மலையக தலைமையென தம்பட்டம் அடிப்போர் இன்னும் தொழிலாளர்களை சுரண்டிப் பிழைக்கும் வேலையிலிருந்து விடுபடவில்லை. இவ்வாறான வேலையில் ஈடுபடும் மலையக அரசியல்வாதிகளுக்கு நல்லதொரு பாடத்தை புகட்ட வேண்டும் என்பதற்காகவே எமது சங்கத்தின் தொழிலாளர்களின் வேதனத்திலிருந்து அறவீடு செய்யும் ஒருமாதச் சந்தாப் பணத்தை வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டோம். தொழிலாளர்களிடமிருந்து ஒருநாள் சம்பளத்தை அறவீடு செய்வதை பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்று பௌத்த அமைப்பு. முஸ்லிம் அமைப்பு அதேபோல் தமிழ்மக்களும் உதவி வருகின்றனர். அரசாங்கமும் முடிந்தளவு மக்களுக்கு நிவாரணங்களை வழங்குகிறது. அதற்குமேலாக வெளிநாட்டு சமூக அமைப்புகளும் உதவிவருகின்றன. இம்மக்களுக்கு மலையக மக்களுடைய பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதாலே மலையக மக்கள் சார்பாக அவர்களுடைய சந்தாப்பணத்தை அனுப்பிவைக்கிறோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *