மட்டக் களப்பு மாவட்டத்தில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை பெற்றோர்களும், பாதுகாவலர்களுமே அழைத்து வரவேண்டும். இதைத்தவிர மூன்றாம் நபர்கள் அழைத்து வரக்கூடாதென மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் பாடசாலை மாணவி தினூக்ஷிகா கடத்திப் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பட்டிருப்பு கல்வி வலய அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளுடனான உயர்மட்ட பாதுகாப்பு மாநாடு பட்டிருப்பு தேசிய பாடசாலை மண்டபத்தில் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் நடைபெற்றது.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமந்த டி சில்வா, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி. டி. த. சில்வா, பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர். 122 பாடசாலைகளின் அதிபர்களும், ஆசிரியர்களும் பங்குகொண்டனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒவ்வொரு பாடசாலையிலும் பாதுகாப்புக் குழுக்கள் அமைத்தல் இக்குழுக்களில் கிராமசேவை அதிகாரிகள், அதிபர், ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பொலிஸார் ஆகியோர் அங்கம் வகிக்கவுள்ளனர். இம்மாநாட்டில் போரதீவு, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, கல்லாறு, அம்பலாந்துறை, செட்டிப்பாளையம் ஆகிய பொலிஸ் நிலைய, உப பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரிகளும் சமுகமளித்திருந்தனர்.