மலையக மக்களுக்கு கடல் கடந்த இந்தியப் பிரஜை அந்தஸ்தை மோடியிடம் கோரிய எம்பி மனோ கணேசன்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் எம்பியுமான மனோ கணேசன் “மலையக மக்களுக்கு கடல் கடந்த இந்தியப் பிரஜை அந்தஸ்து“ வழங்க கோரியதாக ஹிரு செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. மனோ கணேசனின் அக் கோரிக்கையை மோடி பரிசீலப்பதாக கூறினார் என மனோ கணேசன் ஹிரு செய்திச் சேவைக்கு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது மலையக மக்களின் சமூக மற்றும் கல்வி அபிவிருத்தியை முன்னிறுத்திய கோரிக்கைகைகளை முன்வைத்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
சந்திப்பு தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாங்கள் அரசியல் கோரிக்கைகளை இந்தியாவிடம் திணிக்கமாட்டோம். இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்புச் செயல்முறையை ஆரம்பிக்கும் போது எங்கள் அரசியல் யோசனைகளை சமர்ப்பிப்போம்.
இந்தியப் பிரதமர் மோடியினுடனான சந்திப்பில் அறிவியல், கணிதம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் பாடப்பிரிவுகளில் ஆசிரியர்களை உருவாக்கும் சிறப்பு ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் பெண்களுக்கான தாதியர் பயிற்சி நிலையம் அமைக்க இந்திய உதவியை கோரியதாகவும் குறிப்பிட்டார். இந்திய உயர்கல்வி நிறுவனத்துடன் இணைந்துள்ள ஒரு வளாகத்தை உருவாக்கும் நோக்கத்தையும் பகிர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.