இலங் கையில் விடுதலைப் புலிகளின் அனுபவத்தின் மூலம் தாங்கள் பாடம் கற்றுள்ளதாக இந்தியாவின் பயங்கரவாதக் குழுக்களின் பட்டியலில் உள்ள அமைப்பான மக்கள் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது. எமது இலக்கை வென்றெடுக்க இராணுவ பலம் மட்டும் போதாது. ஆதலால் எமது போராட்டத்தை நாம் முழு அளவில் சர்வதேச மயப்படுத்தவுள்ளோம். அத்துடன் இந்தியமக்களின் ஆதரவையும் திரட்டி வருகின்றோம் என்று மக்கள் விடுதலை இராணுவத்தின் உப தலைவர் மனோகர் மயூன்நுகோபா நிருபர்களிடம் தெரிவித்ததாக “ரெலிகிராப்’ பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை இராணுவத்தின் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணியின் பயிற்சிக்கட்டளை தலைமையகத்தில் வியாழக்கிழமை இக் கருத்தை மனோகர் மயூன் கூறியுள்ளார். மணிப்பூர் மியன்மார் எல்லையில் இத்தலைமையகம் அமைந்துள்ளது.
மோதலுக்கு தீர்வு காண அரசியல் பேச்சு வார்த்தையின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட மனோகர் மயூன், அதேசமயம் நிகழ்ச்சி நிரலானது “இறைமை’யாக இருக்காவிடின் மக்கள் விடுதலை இராணுவம் புரட்சிகரமான மக்கள் முன்னணி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாது என்று உறுதியாகக் கூறியுள்ளார். மணிப்பூரில் தனிநாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் 1978 செப்டெம்பரில் மக்கள் விடுதலை இராணுவம் உருவாக்கப்பட்டது.