அரசியல் நரிகள் எங்கள் பரப்புரைகளைத் தடுக்க முடியாது ! அமைச்சர் சந்திரசேகர்
நீர்வேலி வாய்க்கால் தரை பிள்ளையார் கோவில் வளாகத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டம் தேர்தல் விதிமுறைகளை மீறியது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல் திணைக்களத்துக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய வேட்பாளருமான தியாகாராஜா நிரோஸ் முறைப்பாடு செய்துள்ளார்.
ஆலய வளாகத்தை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியமை, அரச திணைக்களங்களுக்குரித்தான வாகனங்களை பயன்படுத்தியமை, ஆலய வளாகத்தில் பரப்புரைக்கான பதாதைகளை ஒட்டியமை போன்ற குற்றச்சாட்டுகள் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை பரப்புரைக் கூட்டத்தில் இது குறித்து உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர், இங்கிருக்கும் அரசியல் நரிகள் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறுகின்றனர். நாங்கள் நேர்மையான அரசியல்வாதிகள். நிரோசின் மீது எனக்கு மரியாரை இருந்தது. ஆனால் அவரது அரசியல் பாதை சாக்கடையானது. கூட்டத்தை தடுக்க கீழ்த்தரமான வேலைகளை செய்ய வேண்டாம் என்றார்.