யாழ் டிப்பர் விபத்துகளில் இருவர் உயிரிழப்பு !
யாழ்ப்பாணம் தின்னவேலிப் பகுதியில் டிப்பர் சாரதியின் கவனயீனத்தால் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியோரத்தில் டிப்பர் வாகனத்துக்கு அருகாக நடந்து சென்ற மூதாட்டியை அவதானிக்கமால் சாரதி டிப்பரை எடுத்ததில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நேற்று இரவு இடம் பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல் ஏற்றிவந்த ரிப்பர் வாகனமொன்று மிக மெதுவாக சென்றுகொண்டிருந்தபோது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் ரிப்பர் மீது மோதியதில் விபத்து இடம் பெற்றுள்ளது.
கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகள் வடக்கில் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. ஆனாலும் செலுத்துனர்களோ, பொதுமக்களோ இவை தொடர்பில் அவதானமற்று அசமந்தமாக செயற்படுவதால் தொடர்ந்தும் இழப்புகள் பதிவாகி வருகின்றன. இதேவேளை போக்குவரத்துப் பொலிஸார் கனரக வாகனங்கள் தொடர்பில் சட்டங்களை உரியமுறையில் நடைமுறைப்படுத்த தவறுவதே இவற்றுக்கான அடிப்படைக்காரணம் என மக்கள் குற்றஞ்சாடுகின்றனர்.
நாட்டில் நாளாந்தம் 30 முதல் 35 வரையான, விபத்து மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் 10,000 முதல் 12,000 பேர் வரை வருடாந்தம் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் வருடாந்தம் விபத்துகளால் பாதிக்கப்பட்ட 1.3 மில்லியன் பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அந்த எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.