அர்ச்சுனா திருந்த வேண்டும் ! சுமந்திரன் சூழ்ச்சி செய்கிறார் ! தையிடிக்கு வழக்குப் போட்டால் அரசியல் செய்ய முடியாது ! பா உ கஜேந்திரகுமார்
“பா உ அர்ச்சுனா தையிட்டி விவகாரத்தில் தவறான முடிவை எடுத்திருக்கின்றார். அது சட்டவிரோதமான விகாரை. உடைக்கப்பட வேண்டும். எங்களுடைய கட்சிக்கு என்று பண்புகள் இருக்கின்றது. நாங்கள் பெண்களை மதிக்கின்றோம், எங்களுடைய கட்சி சாதி, பிரதேச வேறுபாடுகள். பார்ப்பதில்லை. ஏனைய மதங்களை மதிக்கின்றோம். பா உ அர்ச்சுனா இந்த விடயங்கள் பற்றி பேசிய விடயங்கள் திருத்தப்பட வேண்டும்’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். யாழில் இருந்து வெளிவருகின்ற ஜப்னா கலரி காணொலி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்து இருந்தார்.
பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தமிழரசுக் கட்சி மீதும் அதன் பொதுச்செயலாளர் மீதும் காட்டமான விமர்சனத்தையும் அங்கு வெளியிட்டு இருந்தார். எம் ஏ சுமந்திரனின் கட்டுப்பாட்டில் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சி இருப்பதாகவும் எம் ஏ சுமந்திரனுக்குப் பயந்து மற்றவர்கள் செயற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அரசயலமைப்புப் பற்றி அரசாங்கம் அறிவிக்கும்வரை தமிழ் கட்சிகள் தங்களுக்குள் உரையாடி அவசியமில்லை என்பது அடி முட்டாள்தனம் என அவர் அதனை வர்ணித்தார். இலங்கைத் தமிழரவுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரனை சூழ்ச்சிக்காரன் எனறும் கஜேந்திரகுமார் காட்டமான விமர்சனத்தை முன் வைத்தார்.
மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள தையிட்டி விவகாரத்தில் இதற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பௌர்ணமிப் போராட்டங்களை நடத்துவதில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார் தற்போது யாழில் வாழ்கின்ற சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன். இவர் டான் தொலைக்காட்சியின் ‘எது சரி எது பிழை’ நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்ற போதே அங்கு மேலும் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
சட்டத்தரணி ரெங்கன் அங்கு மேலும் தெரிவிக்கையில், அந்த விகாரைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அது மட்டுமே இப்பிரச்சினையைத் தீர்க்கும் ஒரே வழியென்பதையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் தமிழ் தேசியக் கட்சிகளில் சட்டத்தரணிகளுக்குப் பஞ:சமில்லை. அப்படி இருக்கையில் அவர்கள் ஏன் இதுவரை தையிட்டி காணி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேட்டார்.
இதனை மறுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி காண்டிபன் அரசியல் நடவடிக்கைகள் மூலமாகவே இதனை நகர்த்த வேண்டும் என வலியுறுத்தினார். அங்கு கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வலிகாமம் உப தவிசாளர் சுகிர்தன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி விகாரை தவிர்ந்த ஏனைய காணிகளை விடுவித்து மக்களிடம் கையளிக்கும் முயற்சிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தடுப்பதாகக் குற்றம்சாட்டினார்.
டான் தொலைக்காட்சியில் முன்வைக்கப்பட்ட இதே கேள்வி ஜப்னா கலரியில் கேட்கப்பட்ட போது அதற்குப் பதிலளித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், இதற்கு நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனை வைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். நீதிமன்றத்தின் விசாரணையிலிருக்கும் விடயத்திற்கு போராட முடியாது. அதனை வைத்து அரசியல் நடவடிக்கைகளும் செய்ய முடியாது போகும் என்பதை ஜப்னாகலரியில் ஒத்துக்கொண்டார்