வேலிக்கு ஓணான் சாட்சி’ போல பிள்ளையான் வழக்கிற்கு சட்டத்தரணியாக உதய கம்பன்பில !
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் ரவீந்திரநாத் சிவசுப்பிரமணியம் வழக்கில் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கைதாகியுள்ளார். தற்சமயம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு விசாரணை கைதியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த வழக்கு தவிர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலும் பிள்ளையான் கைதாகி 5 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஆதாரங்கள் இல்லை என காரணம் காட்டி விடுதலை செய்யப்பட்டும் இருந்தார். அத்துடன் ஈஷ்டர் குண்டுத் தாக்குதலிலும் பிள்ளையானின் பங்களிப்பு இருப்பதாக குற்றஞ் சாட்டப்படுகிறது. இது தொடர்பிலும் பிள்ளையான் இரண்டு தடவைகள் விசாரிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இனவாதியான பிவித்துரு ஹெல உறுமய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில பிள்ளையானின் பிரத்யேக சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிள்ளையானுக்கு உதய கம்பன்பில வழக்கறிஞராகியுள்ளமை பிரச்சினையின் தீவிரத்தை காட்டுகின்றது என என்பிபி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கண்டியில் நடந்த கூட்டத்தில் மக்கள் மத்தியில் தெரிவித்தார்.
கடந்தகாலங்களில் இடம்பெற்ற கொலைகள், ஊழல்கள் மற்றும் மோசடிகள் எவ்வளவு பாரதூரமானவையாக இருந்தால் கம்பன்பில மூக்கை நுழைத்திருப்பார் என்று நளிந்த ஜயதிஸ்ஸ அச்சம் வெளியிட்டார். உதய கம்பன்பில இதுவரை எந்தவொரு வழக்குகளிலும் ஆஜராகி பார்க்கவில்லை என மேலும் தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் இப்போது சுறுசுறுப்பாக செயற்பட ஆரம்பித்திருக்கிறது. நீதிமன்றம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் வழக்குகளை பதிந்து விசாரிக்க ஆரம்பித்து விட்டது எனவும் கூறி நளிந்த ஜயதிஸ்ஸ ஊழல், மோசடி மற்றும் குற்றவாளிகளின் வயிற்றில் புளியை கரைத்தார்.