புலிகளுக்கும் எங்களுக்கும் இலக்கு ஒன்று அணுகுமுறை தான் வேறு – ஈபிடிபி
ஈபிடிபி ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் சிறிகாந் யாழ் ஊடகவியாளர் சந்திப்பில், ‘புலித் தலைமையும் எமது செயலாளர் நாயகமும் ஒரே கொள்கைக்காக போராடியவர்கள். அவர்களுடைய அணுகுமுறைகள் தான் வெவ்வேறானவை. இலக்கு ஒன்றேயாகும். எமது செயலாளர் நாயகமும் பூகோள அரசியல் யதார்த்த சூழ்நிலைகளை புரிந்து கொண்டு விட்டுக் கொடுப்புக்களூடாக எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம்’ என நம்பினார். ‘மாறாக புலிகள் தலைமை எவ்வளவு இழப்புக்களை கொடுத்தாலும் எந்த விட்டுக் கொடுப்பும் செய்யாமல் எம் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முயன்றனர். இதனால் ஏற்பட்ட பாரிய அழிவுகளை எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாநந்தா எப்போதும் வெளிப்படையாக எதிர்த்தும் கண்டித்தும் வந்துள்ளார்.
புலிகளின் தியாகங்களை வைத்து அரசியல் செய்பவர்கள் எமது செயலாளர் நாயகத்தின் கருத்துக்களை வெட்டியொட்டி ஈபிடிபிக்கு எதிராக பரப்பி வருகின்றனர்’ எனக் குற்றஞ்சாட்டினார் பன்னீர்செல்வம் சிறிகாந். தேர்தல்காலங்களில் எப்போதும் இவ்வாறான விசமத்தனமான வீடியோ பிரச்சாரங்கள் வைரலாவதாகவும் ஆதங்கப்பட்டார். இறுதியாக ‘புலிகளும் நாங்களும் ஒரே இலக்கில் வெவ்வேறு பாதைகளில் பயணித்த போராளிகள்’ என முடித்தார்.