இலங்கையில் செய்தி சேகரிக்கச் சென்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சி செய்தியாளர் குழு ஒன்றை திருப்பி அனுப்பியது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் ஏமாற்றம் தெரிவித்துள்ளது.
இலங்கை படையினரின் அந்தஸ்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்ட 3 பிரிட்டிஷ் தொலைக்காட்சி செய்தியாளர்களை, இலங்கை அரசாங்கம் நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.
இலங்கை படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் தப்பி முககாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்கள் மோசமாக நடத்தப்படுவது, மற்றும் அவர்கள் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்படுவது ஆகியவை குறித்த குற்றச்சாட்டுக்கள் பற்றிய செய்திகளை சேகரிப்பதற்காக சென்ற இவர்கள் மூவரும் பிரிட்டனின் ”சனல் 4” தொலைக்காட்சியை சேர்ந்தவர்களாவர்.
சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்ட இவர்கள் இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
தாம் சில தவறுகளை செய்ததாக இவர்கள் ஒப்புக்கொண்டதாக, இலங்கை பாதுகாப்பு தகவல் மையத்தைச் சேர்ந்த லக்ஸ்மன் ஹுலுகல்ல அவர்கள் கூறியுள்ளார்.
இலங்கையில் ஒரு பெரிய அளவிலான வெளிப்படைத்தன்மை தேவை என்ற நிலைமை இருக்கின்ற நிலையில், இவர்களை திருப்பி அனுப்புவதற்காக இலங்கை எடுத்த முடிவு தமக்கு ஏமாற்றத்தை தருவதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.