சர்வ கட்சி பிரநிநிதிகள் குழுவின் தீர்வு யோசனையை நிறைவு செய்வதில் நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக பொது இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக குழுவின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். எனவே, கூடிய விரைவில் தீர்வு யோசனையை தயாரித்து முடித்து விட முடியுமென நம்பிக்கை வெளியிட்ட பேராசிரியர் விதாரண, எனினும் அதற்கு காலவரையறையொன்றை கூற முடியாதென்றும் குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினை தொடர்பில் அரசியல் தீர்வு யோசனையொன்றை தயாரித்து பரிந்துரை செய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை நியமித்திருந்தார். இந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலிருந்து ஏற்கனவே பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது அக் குழு நூறாவது சந்திப்பையும் தாண்டி கூட்டங்களை நடத்தி வருகிறது.
தீர்வுயோசனையை தயாரிப்பதில் ஏற்கனவே 90 சதவீதமான விடயங்களில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுவிட்டபோதிலும் 10 சதவீதமான விடயங்களில் இணக்கப்பாடு காணப்படவில்லையென கடந்த காலங்களில் கூறப்பட்டு வந்த நிலையில் தீர்வு யோசனை தயாரிப்பு பணிகளின் தற்போதைய நிலைமை குறித்து அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கேட்டபோது;
பிரச்சினைக்குரியதாக இருந்த அனைத்து விடயங்களிலும் தற்போது பொது இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கிறது. இதற்கமைய ஒவ்வொரு விடயங்களாக கலந்துபேசி தீர்வு யோசனையை தயாரிக்கும் பணிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. எனவே, நீண்ட காலம் செல்வதற்குள் தீர்வு யோசனையை தயாரித்து முடித்துவிட முடியுமென நம்புகிறேன்.
எமது இந்த யோசனை தயாரிக்கப்பட்டதும் முதலில் (பிரதான எதிர்க்கட்சியான) ஐ.தே.க.விடம் அதை முன்வைத்து கலந்துபேசிய பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சிகளுடனும் இந்த தீர்வு யோசனை குறித்து கலந்துபேச எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்குறித்த கலந்தாலோசனைகளின்போது ஏதேனும் திருத்தங்கள், புதிய யோசனைகள் முன்வைக்கப்படுமாயின் அவை குறித்தும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் கலந்தாராயப்பட்டு அனைவரது பொது இணக்கப்பாட்டையும் எட்டக்கூடிய வகையில் ஏற்புடைய திருத்தங்கள் உள்வாங்கப்படும்.
இறுதியான தீர்வுயோசனை அறிக்கை குறித்து சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் அவ்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று அமைச்சர் பதிலளித்தார்.
msri
என்ன இணக்கம் கண்டுள்ளீர்கள்! தமிழ்த்தேசிய இனத்தை அழித்து எப்படி இனச்சுத்திகரிப்பு செயவதென்றோ!?