வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருக்கும் மக்களின் பெறுமதி மிக்க நகைகள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாத்துக் கொடுப்பதற்கு அரசாங்க வங்கிகள் பாதுகாப்புப் பெட்டகங்களை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறினார்.
தமிழர்கள் பெரும்பாலும் தமது பணத்தை தங்க ஆபரணங்களில் முதலீடு செய்வது வழக்கம் என்பதால், இடம்பெயர்ந்த மக்களின் பெறுமதிவாய்ந்த ஆபரணங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
வளையல்கள், தாலி போன்ற ஆபரணங்களையே கூடுதலாகப் பாதுகாப்புப் பெட்டகங்களில் மக்கள் வைத்துள்ளனர். தற்பொழுது வங்கிகள் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பாதுகாப்பு பெட்டகங்களை வழங்க ஆரம்பித்துள்ளன என்றும் அவர் கூறினார்.
அதேநேரம், அரசாங்க வங்கிகள் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தமது வங்கிக் கிளைகளையும் திறந்துள்ளதாகவும் சார்ள்ஸ் கூறினார். இடம்பெயர்ந்த மக்கள் அரசாங்க வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களில் 165 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாக வடபகுதி மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான இணைப்பதிகாரி, முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னான்டோ கூறியுள்ளார்.