நோர்வேயின் ஆயுதச் சந்தையும் சமாதானச் சதுராட்டமும்: நக்கீரா

Pigeon_&_Peaceஇக்கட்டுரை டிசம்பர் மாதம் காசாவினுள் இஸ்ரேலியப் படைகளின் பிரவேசத்தின் போது எழுதப்பட்டது. இந்த பிரவேசத்தின் போது பாவிக்கப்பட்ட ராக்கேட்டுக்களின் லேசர் கயிடட் ராக்கெட்டுக்கள் (Laser guided Heads for the rocket) நோர்வேயிலேயே தயாரிக்கப்பட்டவைகளாகும்.

._._._._._._.

500 ஆண்டுகளுக்கு மேல் உதிரத்திலும், மரபணுக்களிலும், உயிரணுக்களிலும், வெள்ளையரை உயர்ந்தவன் என்று ஏற்று, அடிமை வாழ்வை மனதார மணந்துகொண்ட, ஏமாற்றப்படவே பிறந்த இனமாகி, பின் தன்னைத் தானே ஏமாற்றும் பண்பில் பழகிப்போன என்தமிழினத்தை நொந்துகொண்டு, ஏமாற்றங்களை, எமக்கு இழைக்கப்பட்ட வஞ்சக, துரோக நினைவுளைச் சுமந்து கொண்டு இதை எழுதத் தொடங்குகின்றேன்.

பலமுள்ளதும், வலுவுள்ளதும், ஆதிக்கவெறியும், அதிகாரவலுவும் உள்ள இனம்தான் வாழ்வது என்ற மிருகங்களின் வாழ்வியலை நியமப்படுத்தும் முகமாக நடந்து கொண்ட நோர்வேயின் முகத்திரையை கிழித்து, பின்புல நிகழ்வுகளை, நிதர்சனங்களை வெளிச்சத்தில் காட்ட வேண்டிய கடமையும் கடைப்பாடும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கு உண்டு.

அணுக்குண்டு தயாரிப்பதற்குப் பாவிக்கப்படும் பாரநீர் அதனுடைய இரசாயனக் குறியீடு எச்2ஓ2 நோர்வேயின் வடபகுதியில்தான் உள்ளது. இதை தன்வசப்படுத்துவதற்காகவே கிட்லர் இரண்டாம் உலகயுத்தத்தில் நோர்வேயை தனது கைக்குள் கொண்டுவந்தான். உயரமும், மஞ்சள் தலைமுடியும், நீலக்கண்களுமுடைய யேர்மனியர் நோர்வேயிலும் வாழ்கிறார்கள் என்று பறைசாற்றி உயர்சாதியில் இவர்களையும் சேர்த்துக்கொண்டான். ஆனால் கிட்லரோ இதற்கு முற்றிலும் முரணான உருவ அமைப்பைக் கொண்டவன். தன்னைத்தானே வெறுத்ததால் தான் தற்கொலை செய்து கொண்டானோ என்னவோ?

இந்தப் பாரநீரானது எப்படி ராஜிவ்காந்தி பாரதப் பிரதமராய் இருந்த காலத்தில் இந்தியாவுக்கு விற்கப்பட்டிருக்கிறது? உலக அழிவுக்கே வித்திடும் பாரநீர் எப்படி இந்தியாவை அடைந்தது? நோர்வேயின் வெளிநாட்டு அரசியலின் சாசனம் இதை ஒத்துக்கொண்டதா? இவர்கள் விற்கும் கொலைக் கருவிகளை மற்றைய நாடுகள் மூன்றாமுலக நாடுகளுக்கு விற்கலாமா? ஆயுத விற்பனையில் அறுதி அத்தாட்சிப் பத்திரம் கைச்சாத்திடும் போது விற்பனை செய்யும் நாடுகள் அந்த ஆயுதங்களை வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறை. சமாதானப் புறாவை சாப்பிட்டு ஏப்பம் விட்டு கொண்டு தம்மைச் சமாதானப் பிரியர்களாகக் காட்டிக் கொள்கிறது நோர்வே. அறுதி அத்தாட்சிப் பத்திரம் பற்றிய சர்ச்சை நோர்வேஜிய நாடாளுமன்றத்தில் நீண்ட காலமாகவே எடுக்கப்பட்டது, எடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அறுதி அத்தாட்சிப் பத்திரத்தை சர்ச்சையாய் ஆட்சியில் இல்லாத போது எடுத்துக்கொண்ட சிவப்பங்கிக்காரர்கள் (எரிக் சூல்கெயும் கட்சி) இன்று ஆளும் கட்சியில் வந்தபின் மௌனிகளாகிப் போயினர். ஏன் அதை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி மகளே.

நோர்வேயின் ஆயுதப்பட்டடையில் தயாரிக்கப்பட்ட இராக்கட்டுகள், மெசையில்ஸ்கள் சுடுகலன்கள் நாட்டோயூடாக நிக்கராகுவா கெரில்லாக்களை அடைந்தது எப்படி? இது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக நோர்வேஜியப் பத்திரிகையில் வந்தபோது ஊதி ஊதி எரிப்பதற்குப் பதிலாக அணைத்தார்கள். நோர்வேயுடன் சேர்ந்து நாட்டோ எப்போ ஆயுத வியாபாரியானது? நாட்டோவுடனும், அமெரிக்காவுடனும் இணையக்கூடாது என்று தொழிற்கட்சியில் இருந்து பிரிந்து போன சோசலிச இடதுசாரிகள் (சூல்கெய்மின் கட்சி) ஏன் கண்ணை மூடிக்கொண்டிருந்தார்கள். இதைத் தடுப்பதற்கு என்ன செய்தார்கள்?

அழிவாயுதங்களைத் தயாரிப்பது மட்டுமல்ல அதை விற்பனை செய்யும் நாடான நோர்வேக்கு சமாதானத்தைப் பற்றிப் பேசுவதற்கு என்னதான் அருகதை இருக்கிறது? ஆயுதமே சமாதானத்தின் விரோதி. இது தெரியாதா?

2008 மார்கழியில் இருந்து காசாவை ஆக்கிரமிக்கப் படை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும், அன்று நாசிகளால் ஈன இனமாகக் கருதப்பட்டு துவம்சம் செய்யப்பட்ட யூதர்கள் இன்று பாலஸ்தீனரை அழிப்பதற்காக சுடுகலங்கள், போர் விமானங்கள், கெலிக்கொப்டர்கள் இருந்தும் ஏவப்படும் கெல்ஸ் வயர் எனும் ரொக்கட் நோர்வேயிலேயே தயாரிக்கப்படுகிறது. ஆதாரம்: ரிவி2 நியூகெத்தர் (ரிவி2 செய்திகள்) 10.01.2008 நிகழ்ச்சி கொறொஸ்பொன்டான்ச. இதைப்பற்றி வெளிநாட்டமைச்சிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது பூசி மெழுகினார்கள். இப்படி: ”நாங்கள் செய்வதில்லை அதில் ஒரு பகுதியை மட்டுமே செய்கிறோம்” என்று ஆத்தாக்கொடுமையில் அலம்பினார்கள். விழுந்தாலும் மீசையில் மண்பட விடமாட்டார்கள்.

கெல்வ்வெயர் ஏ ஜி எம் 144எம்

நோர்வேயில் தயாரிக்கப்படும் உதிரிப்பாகத்தின் (கொம்பொனட்) தொழில் என்ன? லாசர் கதிர்நோக்கி ஊடு இதை குறிபாத்துச் செலுத்தலாம். 0,5 கிமீ இருந்து 8கிமீ வரை குறிதவறாது பாயக்கூடியதும், பேரழிவைக் கொடுக்கக்கூடியதும் ஆகும். இதை தாங்கி எதிர்ப்பு ஏவுகளைகளாலும் செலுத்தலாம்.

கிளாசபொம்

இலங்கையில் அரசினால் இனவழிப்புக்காக் போடப்படும் கிளாசபொம் பின் உதிரிப்பாகங்கள் நோவேயிலும் செய்யப்படுவதாக அறியப்படுகிறது. இது வானத்தில் வெடித்துச் சிதறி, பின் பரவி விழுந்து சின்னாபின்னமாகச் சிதறும் தன்மை கொண்டது. அது மட்டுமல்ல உடனடியாக வெடிக்காது சில மணித்தியாலங்கள், கிழமைகள், மாதங்கள் கழிந்தும் பிரிந்த துண்டுகள் வெடித்துச்சிதறும். இது ஒரு குறிப்பிட்ட ஒரு முகாமையோ, நபரையோ அழிப்பதற்குப் பயன்படுத்த இயலாது. ஒரு பகுதி நிலப்பரப்பிலுள்ள உயிர் வாழ்வனவற்றையும் கட்டிடங்களையும் அழிக்க வல்லது. இக்குண்டுகள் தயாரிப்பதன் நோக்கம் என்ன? இதை இனவழிப்புக் கருவி என்பதை விட வேறு எப்படிச் சொல்லலாம். ஒரு குண்டானது 250 அலகுகளை (யூனிட்டுக்களை) கொண்டது. அதாவது ஒரு குண்டைப்போட்டால் 250 குண்டுகளை கொட்டியதற்குச் சமனானது.

ஆடு நனைகிறது என்று ஓநாய் விழுந்து விழுந்து அழுதது போல் நோர்வே, 64 நாடுகளை தலைநகர் ஒஸ்லோவிற்கு ஓரிரு மாதங்களுக்கு முன் அழைத்து ஒருமகாநாடு நடத்தி கிளாசபொம் தடைசெய்வது என்று கைச்சாத்திட்டார்கள். மகாநாட்டுக்கு வந்திருந்த போலந்து, ரோமானிய, யப்பான் கையொப்பமிட மறுத்தன. 2ம் உலகயுத்த அழிவின்பின்பும் யப்பானுக்கும் போர் வெறியா? தன் படையை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில்லை என்ற வெளிநாட்டுக் கொள்கையைத் தளர்த்தி இராக்குக்கு யப்பான் படை அனுப்பியது. ஐ.நா வின் ஐயா அக்காசியார் இருக்கும் போதே இப்படி ஒரு கையொப்ப மறுப்பு. இம்மகாநாட்டின் சிறப்பு என்ன என்றால் இக்கிளாச பொம்பை தயாரிக்கும் முக்கியமான நாடுகளான அமெரிக்கா, இரஸ்சியா, இஸ்ரேல் கலந்து கொள்ளவில்லை. இனி நோர்வே இவற்றை தயாரிக்கும், மற்ற நாடுகள் மக்கள் தலையில் இவற்றைக் கொட்டலாம்.

அதேவேளை இலங்கையில் நோர்வேயின் நடுவத்தால் உருவாக்கமடைந்த புரிந்துணர்வு சாமாதானம் கந்தலாகி சிங்கள அரசால் தமிழர்கள் மேல் கிளாசபொம் போடப்படுகிறது. இதை எப்படி நோர்வே மறந்து போனது? இதை நினைவுபடுத்த ஊர்வலமாய் சென்று திரண்டார்கள் ஒஸ்லோவாழ் தமிழ் மக்கள். இது கருத்தில் கொள்ளப்பட்டதா? இதற்குப்பின் இருமாதங்கள் முடியுமுன்னரே நோர்வே தயாரிப்பான கொல்ஸ் வயர் பாலஸ்தீனர்கள் தலையில் வெடித்துச் சிதறியது. எங்கே சமாதானம்? எங்கே உடன்பாடு? நோர்வேஜியர் சமாதானப் பிரியரா? இரத்த வெறியரா?

பாலஸ்தீன சமாதான உடன்படிக்கை, இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பவற்றிடையில் பல ஒற்றுமைகளைக் காணலாம்

· யசீர் அரபாத்துக்கும், இஸ்ரேலிய சீமன் பெரஸ்கும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கி தாஜா பண்ணப்பட்டது. அதே போன்று அன்ரன் பாலசிங்கத்துக்கு சிறுநீரகம் மாற்றப்பட்டது. இன்று சிறுநீர் கழிக்கவே வழியற்றுப்போனது தமிழ்ச் சமூகம்.

குறிப்பு: இதே சீமன் பேரஸ் இன்று அரசில் இருந்து கொண்டு பாலஸ்தீனர்களைக் கொல்வதற்கும் நாடுபிடிப்பதற்கும் படையனுப்பியுள்ளார். இவருக்கு நோர்வே சமாதானத்துக்கு நோபல் பரிசு கொடுத்தது. நோவேஜியக் கொடியில் சரிந்து கிடக்கிறது சிலுவை. இன்னுமேன் இது உலகத்திற்குப் புரியவில்லை. ஏமாற்றப்படவே பிறந்த தமிழ் இனத்துக்குத்தான் இது புரியவில்லை, மற்றவர்களுக்குமா?

·மேற்கூறியதை எடுத்து நோக்கினால் தனிமனிதத் துதிபாடல்கள் என்னத்தை எமக்குத் தெரிவிக்கிறது? பெரும் போராட்டமும், மனித அழிவுகளும் ஒருசில தனி மனிதர்களிலேயே தங்கியிருக்கிறது என்பதையும், அனைத்து ஏகாதிபத்தியத்தாலும் ஒடுக்கப்படும் மக்கள் கூட்டம் துணிந்து போராட முயன்றால் மட்டுமே சமாதானம் என்பது சாத்தியமாகும்.

·இரண்டு ஒப்பந்தங்களும் ஒஸ்லோவில்தான் கைச்சாத்திப்பட்டன. முடிவு எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் தான் பார்க்கிறீர்களே.

·இந்த ஒப்பந்தங்களுக்குப் பின்பும் நோர்வேஜிய ஆயுதங்கள், போர்க்கருவிகள், வெடி பொருட்கள் இந்நாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளன. அவை பயன்படுத்துப்பட்டுமுள்ளன.

·ஒப்பந்தங்கள் கைச்சாத்து இட்டபின் இன்நாடுகளின் தலைவிதிகள் அமெரிக்காவிடமே ஒப்படைக்கப்பட்டது.

·தறிய றோலாசன் (பாலஸ்தீன ஒப்பந்தம்) எரிக் சூல்கெயிம் (இலங்கை ஒப்பந்தங்கள்) முடிந்த கையுடன் அமெரிக்கா பறந்ததை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். நோர்வே அமெரிக்காவின் கைப்பொம்மையாகிப் போனதும், அமெரிக்கா தன் விரல் நுனியசைவில் நோர்வேயை வைத்து பொம்மலாட்டம் புரிவதும் ஏன் இன்னும் புரியவில்லை?

·இரு ஒப்பந்தங்களும் கைச்சாத்திட்ட மேசையின் கீழேயே நோர்வேஜிய கொலைக்கருவிகள் வலிமையுள்ள பக்கத்தாருக்கு விற்கப்பட்டுள்ளது. ஆதாரம்: உயிர்மெய்யில் சியாமளாவின் கட்டுரையும், ரிவி-2 கொரெஸ்போன்டன்ஸ். கேவலம் சமாதானப் பேச்சுவார்த்தை என்பதே ஆயத விற்பனையாகிவிட்டது.

·இருபக்கங்களிலும் முறுகல் நிலை ஏற்படும்போது அயல்நாடான எகிப்துக்கும், இந்தியாவுக்கும் தடிகொடுத்து ஓடுகிறார்கள். பேசவேண்டியது பிரச்சனைக்குரியவர்களுடனேயே தவிர, இவர்களோடல்லவே.

ஒரு பூனைக்குக் கால்முறிந்ததும் கூயோ மாயோ என்று குளறியடித்து ஒடித்திரிந்து ஆயிரக்கணக்கில் செலவு செய்து தொலைக்காட்சிகளில் முகம் துலைக்கும் நோர்வேக்கு, இலங்கை அரசு புலிகளை வெல்வதாய் என்று உலகுக்கு காட்டாப்புக் காட்டிக்கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தையே குலையோடு கொய்தெறியும் படையெடுப்பைத் தொடங்கியுள்ளது என்பது புரியாமலில்லை. ”இந்த இன அழிப்பு நோர்வேக்குப் புரியவில்லையா…?” இப்படியொரு நினைப்பு நமக்கு ஏற்படுமாகில் பச்சை முட்டாள்கள் நாமேயன்றி வேறாருமல்ல. இந்தக் கள்ளப் பூனை இப்படியேதான் பாசாங்கு காட்டும். இது நோர்வேஜியப் பூனை.

இன்றுவரை நோர்வே ஈடுபட்ட சமாதான நடவடிக்கைகளில் வெற்றிகரமாய் நடந்து முடிந்து, மக்கள் அமைதியாக வாழும் ஒரு நாட்டைச் கூறுங்கள் பார்க்கலாம்? குவாத்தமாலா என்கிறீர்களா? அங்கும் நோபல்பரிசு கொடுக்கப்பட்டது. பிரச்சனை முடிந்ததா? தீர்ந்ததா? விடமாட்டார்கள் சமாதானப் பிரியர்கள்… சமாதானத்தைப் பிரிப்பவர்கள்.

இங்கே வேடிக்கை என்னவென்றால் இலங்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் முறுகல்நிலையில், முறியும் தறுவாயில் அல்லாடும் போது திரு எறிக் சூல்கெய்ம் அவர்கள் ”நேபாளம் விரும்பினால் தாம் தரகராக இருக்கத் தயார்” என்று சர்வதேச ஊடகங்களுக்கு இலங்கைத்தரகர் எரிக் சூல்கெம் கூறியதை உலகமக்களே வாய்பொத்திச் சிரித்தார்கள், தம்நாடுகளிலும் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு சமாதானத்துக்கு வந்துவிடுவார்களோ என்ற பயம்தான்.

இலங்கையில் ”புரிந்துணர்வு ஒப்பந்தம்” என்பது எவ்வளவு சாத்தியம் என்பதை நாம் பெரிய பெரிய ஆய்வுகள் செய்துதான் விளங்கிக்கொள்ள வேண்டிய எந்த அவசியமுமில்லை. எவ்வளவோ பொருள், உயிர், உடைமை அழிவுகளின் பின்பும் உணர்ந்து புரிய முடியாதவர்களிடம், புரிந்து உணருங்கள் என்றால் இது எப்படிச் சாத்தியமாகும். சாத்தியமாகா ஒன்றை பேச்சுவார்த்தை மேடைக்குக் கொண்டுவருவது என்பது வெறும் கண்துடைப்பு மட்டுமல்ல பெருலாபம் ஈட்டக்கூடிய ஆயுதக் கடைவிரிப்புத்தான். சமாதான மேசையை ஆயுதச்சந்தையாக மாற்றவல்ல அனுபவம் வாய்ந்தது நோர்வே போன்ற நாடுகள் என்பது ஒன்றும் அதிசயமான விடையமல்ல.

அரசியல், பொருளாதார, கலாச்சார, சரித்திரப் பின்னணிகளைப் புறம்தள்ளி பேச்சு வார்த்தைக்கு அழைப்பது என்பது வெறும் ஆயுதச்சந்தைப்படுத்தலே. இலங்கை ஒப்பந்தத்தில் மேற்குறிப்பிட்ட எதுவுமே கருந்தில் கொண்டதாக தெரியவில்லை. பலவகையான சமாதானங்கள் உலகில் உண்டு. அமைதி என்பது பலவழிகளில் ஆக்கப்படலாம். இரு சமூகங்களும் ஒன்றை ஒன்று சமமாக மதிப்பதூடும், சுயநிர்ணய உரிமையுடனும், மற்றை அல்லது ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பில்… இப்படிப் பலமுறைகளில் பலநாடுகள் பல்லினக்கலாசார சமூகங்கள் சேர்ந்து வாழுகின்றன.

இன்னுமொரு அமைதியான சமாதான வாழ்வும் உண்டு என்பதை இலங்கை அரசாங்கம் மட்டுமே உணர்ந்துள்ளது. ஒரு இனத்தை முழுமையாக அழிப்பதூடும், வாய்மூடி மௌனியாக்குவதூடும் சாமாதானத்தை ஏற்படுத்தலாம் என்பதை இலங்கையரசு நன்கறியும். காரணம் கையாலாகாத தமிழ்சகோதரங்கள் அயல்நாட்டில் வாழ்வதும், காசைமட்டும் கொடுப்பதால் சமாதானத்தை வாங்கிவிடலாம் என்று கனவுகாணும் புலம்பெயர் சமூகம் இருப்பதுமேயாகும். தமிழ்நாடு துப்பித்தள்ளினால் இலங்கையில் சுனாமி ஏற்படும் என்ற நிலையிருந்தும், தமிழக மீனவர்கள் கன்னாபின்னமாக பாவத்தின் ஒரு கண்ணீர்துளியாய் காட்சியளிக்கும் இலங்கையின் இராணுவத்தால் சுடப்பட்டபோதும் கண்மூடிக் கிடந்தது இந்திய மத்திய அரசம், மாநிலஅரசு? கொடிபிடிக்கலாம், ஊர்வலம் நடத்தலாம் முடிவு என்ன என்பதே முக்கியமானது. தள்ளாத வயதிலும் தளராத ஆசையுடன், கெட்டுப்போன கண்ணுக்கு கறுப்புக்கண்ணாடி போடும் கிழவனால் எப்படித் தன் மக்களைக் பார்க்க முடியும். இப்படிப்பட்டவரிடம் எம்மக்கள் மதிப்பும், மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தார்களே என்பது வேதனைக்குரியதுதான்.

இந்தியத் தமிழர்களே! சிந்திப்பீர்களா? உங்கள் கடற்கரைகளில் பிணமாய் மிதந்து எண்ணின உயிர்களுக்கு கொடுக்கப்பட்ட விலை என்ன? கித்துல் மரங்களில் கள்ளு இறக்கியவர்களை இராணுவத்தில் சேர்த்து எம்மினத்து இந்தியகரைஞர்களை கொன்று கடலில் விதைத்தார்களே…. உங்கள் விலை என்ன என்பது புரிகிறதா? ஈழப்போராட்டம் உண்மையிலேயே தமிழ்நாட்டிலேயே மையம் கொண்டிருக்க வேண்டும்…. நடந்தா? ஏன் இன்னும் இல்லை. கெடுகிறேன் பிடிபந்தம் என்றால் நாம் என்ன செய்வது?

இனி இலங்கைக்கு வருவோம். அன்ரன் பாலசிங்கத்துக்கு சிறுநீரகம் மாற்றி புலிகளிடம் நன்மதிப்பைப் பெற்று பின் தமிழரின் சிறுநீரகங்களை எடுப்பதற்காக சமாதானம் பேசிக்கொண்டு ஆயுதவிற்பனையை மேற்கொண்டது நோர்வே. கேட்டுப் பாருங்கள் நாம் எங்கு விற்றோம் என்பார்கள். செக்கியா, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளுக்கு அறுதி அதிகாரசாசனம் இன்றி ஆயுதங்களை விற்றது யார்? இன்று கூட அறுதி அதிகாரசாசனம் இன்னும் கைச்சாத்திடப் படவில்லை. நோர்வேயால் தன்கொடியில் சரிந்து கிடக்கும் சிலுவையை நிமிர்த்தி, நெஞ்சில் கைவைத்து தம் ஆயுதங்களால் உலகில் எவரும் சாகவில்லை என்று கூறமுடியுமா?

இலங்கைக்கு இரஸ்சிய ஆயுதங்களையும், இரஸ்சிய பழங்கிடவல் மிக்-29 போன்ற போர் விமானங்களையும் இலங்கைக்கு விற்பனை செய்தது உக்கிரேனியா? இரஸ்சியா நாட்டேவில் இல்லையா? இதே நாட்Cவில்தானே நோர்வேயும் இருக்கிறது. இந்த நாட்டோவைத்தானே வேண்டாம் என்று புறக்கணித்து புதிய சோசலிச இடதுசாரிகள் உருவானார்கள் (எரிக் சூல் கெய்மின் கட்சி)

நடுவர்களாகவோ, இணைப்பாளர்களாகவோ, தொடர்பாளராகவோ இருப்பவர்களுக்கு குறைந்த பட்சம் அந்நாட்டுப் பின்னணிகள் தெரிவதுடன் அம்மக்கள் மேல் அக்கறையும் அபிலாசைகளும் இருப்பது முக்கியமானது. ஏரிக் சூல்கெய்ம் கொம்பனிக்கு இந்த அக்கறைகள் இருந்ததாக யாராவது சொல்லட்டும்…? அப்படி அக்கறை இருந்திருந்தால், இரு தரப்பினரும் ”ஒப்பந்தத்தை நீதான் முதல் முறித்தாய், இல்லை நீதான் முதலில் மீறினாய்”; என்று ஒருவரையொருவர் சாட்டுச் சொல்லிக்கொண்டு சுடுபட்டதுமல்லாமல் உடன்படிக்கையை முறித்து, மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையையும் சிதைத்து, இரு பக்கமும் அடி வாங்கும் மத்தளத்தின் நிலைக்கு மக்களை மரணத் தீயில் தள்ளி போரை முதன்மைப் படுத்திய போது குறைந்த பட்சம் எரிக் சூல்கெய்ம் அமெரிக்காவுக்கு முதுகு சொறியவாவது போயிருக்கலாம். போனாரா? அது எமக்குத் தேவையுமல்ல. பத்திரிகையில் பார்த்தேன் நோர்வேயின் அறிக்கை ஒன்றை ”பெரிதாகச் சண்டை பிடியாதீர்கள்” என்றிருந்தது. கொலை என்று வந்தபின் அதில் பெரிதென்ன, சிறிதென்ன?

புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிவடைந்து, இனவழிப்புப்போர் உக்கிரமடைந்தும் நோர்வே வாய் மூடி மௌனியாக இருந்தது ஏன்? செஞ்சோலையில் சிறுவர்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார்களே, உலகெங்கும் தமிழ் வானெலிகள், இணையங்கள், சகல ஊடகங்களும் கண்ணீர் விட்டதே, நோர்வே மட்டும் கண்மூடிக்கிடந்தது ஏன்? சரி அரசு சொல்வது போல் புலிப்பிள்ளைகளாவோ அன்றி புலிக்குட்டிகளாகவோ இருக்கட்டுமே. நோர்வேயின் அக்கறை என்ன ஆனது? உயிர்களின் விலை என்ன? நோவேயிய தெருப்பூனையின் விலையை விடக்குறைவுதான்.

புலிகளின் தரப்பிலிருந்து செய்திகளைக் காவிவந்த தமிழ்ச்செல்வன் சமாதானத்தின் முகமாக உலகுக்கு காட்டப்பட்டு வந்தார். இந்த முகம் சிதைக்கப்பட்டபோது இந்த ஒப்பந்ததைத்தை எற்படுத்திய நடுமக்குழு யாருக்கு சிறுநீரகம் மாற்றிக் கொண்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக இவர்களிடமிருந்து வெளிவந்த காத்திரமான கண்டனமோ, கனமான கவலைகளோ, குறைந்தபட்ச கேள்விகளோ இல்லை. வந்தோம், பார்த்தோம், கதைத்தோம், விற்றோம், சண்டை பிடிக்கப் போறோம் என்றீர்கள் விட்டுவிட்டோம். இச்சமாதானக்குழுவை நடுமக்குழு என்பதா? தரசர்கள் குழு என்பதா? சமாதானத்தின் பெயரில் பொழுது போக்கும் சுயலாபக்குழு என்பதா?

சமாதான ஒப்பந்த காலத்திலேயே பல அறிவாளிகளையும், அப்பாவிப் பொது மக்களையும் துரோகிகள் என்ற முத்திரையை முகத்தில் குத்தி உயிர்களைக் கிழித்துப் போட்டார்களே அவற்றையும் இந்தக் எரிக் சூல்கெய்ம் கொம்பனி கண்காணித்துக் கொண்டு பேசாமல்த்தானே நின்றது. அக்கறை அக்-கரையானதேன்? அக்கறை ஆயுத விற்பனையில் இருக்கும் போது உயிர்களைப் பற்றி ஏன் இவர்கள் அக்கறை கொள்ளப்போகிறார்கள். புலிகளுக்கு நவீன தொலைத் தொடர்புசாதனச் சாமான்கள் கொஞ்சத்தைக் கொடுத்துக் குளிரப் பண்ணிவிட்டு, மறு கதவால் சர்வதேச நாடுகளால் தடை செய்யப்பட்ட சமூக அழிவுப் போராயுதங்களை இலங்கைக்கு வியாபாரம் செய்த இவர்களின் அங்கிடு தத்தங்களை எந்த நீதியின் தராசில் வைத்துத் தீர்ப்பிடுவது.

Pigeon_&_Peaceசமாதானத்தைப் பயன்படுத்தி புலிகளை அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசும், நோர்வேயும் நினைத்த வெற்றியை ஈட்டியுள்ளனர் என்பதே நிதர்சனம். இதற்கு ஒரு உதாரணத்தை வைக்க விரும்புகிறேன். தமிழ் செல்வனுடனான குழு தம்பிரச்சினைகளையும், அரசாங்கத்தின் அத்துமீறல்களையும் நோர்வேயிடம் கூறுவதற்காக வந்திருந்தபோது, பின்கதவால் சிங்கள அரசை அழைத்துவந்து பேசும்படி திணித்தது நடுமக்குழு. தமிழ்செல்வன் குழுவினர் முன்கூட்டியே நடுமக்குழுவுக்கு அறிவித்திருந்தார்கள் நாம் வருவது நோர்வேயுடன் கதைப்பதற்கே அன்றி இலங்கையரசுடன் அல்ல என்பதை.

சமாதான உடன்படிக்கை இழுபறிப்படும்போது எறிக் சூல்கொயும் எங்கே போனார்? அவர் தனது பிள்ளையையும் புதுமனைவியையும் அழைத்துக்கொண்டு சீனாவுக்கு உல்லாசப்பயணம் போயிருந்தாராம். அங்கும் ஆயுதவிற்பனையோ யாருக்குத் தெரியும். அவ்வளவென்ன இன்னும் எவ்வளவோ நடத்தும் நோர்வே மௌனம் சாதிப்பதில் இருந்து என்ன தெரிகிறது? ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கைச்சாத்திடும்போது, மீறுபவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பதை குறிப்பிட்டிருந்தார்களா? குறிப்பிட்டிருந்தால், மீறியவர்கள்மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டதா…? ஏன் எடுக்கப் படவில்லை. ஒப்பந்தத்தில் அப்படி எதுவும் குறிப்பிடப்படாமல் இருந்திருந்தால் இது வெறும் அரசியல் உல்லாசப் பொழுது போக்கும், ஆயதக் கடை விரிப்புமே. நோர்வேயின் சமாதானத்தின் மேலுள்ள நேர்மை, நோக்கம், மனிதநேயம், இரட்டைவேடமும் கபடத்தனமும் என்பன புலனாகிறது.

நோர்வே இதைத்தான், இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்த அபிப்பிராயமும் சொல்லாதாம், (ஒரு தரப்புக்கு சாதகமானதொரு சிறு அபிப்பிராயத்தைச் சொல்லப்போய், மற்றைய தரப்பின் மனஸ்தாபத்தை உண்டாக்கி, ஏன்தான் வீணாக ஆயுத மார்க்கெற்றை அநியாயமாக்குவான்) எதையும் திணிக்காதாம், மிகவும் நல்ல பிள்ளையாம், புலிகளும் அரசும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வருவதற்கு நோர்வே இருசாராரையும் அழைத்து வந்து வட்டமாய் குந்தியிருந்து கதைக்க மட்டும் ஏற்பாடு செய்யுமாம். என்றால் இதற்கு நோர்வே எதற்கு? ஒரு கொட்டேல் பணியாளர் போதுமே. 1948ல் இருந்தே இரு தரப்பும் பேசிக்கொண்டு தானே இருந்தன. பேசிப் பேசிக் கொண்டேதான் இருக்கின்றன. எடுக்கப்பட்ட முடிவுகள் சரியாக நடைமுறைப்படுத்தப் படுகின்றனாவா? அப்படி நடக்காவிட்டால் முடிவு என்ன?, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எனும் நிறைவேற்று அதிகாரமோ, அன்றி உலக அரங்கிற்கு இந்தப் பிரச்சனையை காவிச் செல்லும் வலுவோ, வல்லமையோ இல்லாத நோர்வேக்கு எதற்கு இந்த சாமாதான வேசம். இருபகுதியினரையும் தட்டிக்கேட்க திராணியற்ற நோர்வேக்கு எதற்கு இந்த தரகு வேலை.

சமாதானத்தரகு வேலைக்கு முன் எம்அடிப்படை பிரச்சனைகள் அலசி ஆயராயப்பட்டிருந்தால் தரகர்குழுவுக்கு புரிந்திருக்கும் இரு இனத்துக்கும் ஆணிவேரிலேயே துவேசம் ஏறிக்கிடக்கிறது என்று. இதைக் கழுவித் துடைத்தபின்பே ஒற்றையாட்சியையோ, அதிகாரச் சமபயிர்வையோ கதைக்கலாம். இலங்கையின் அமைதிக்கான எந்தவித அடிப்படை வேலைகளையும் செய்யாமல் காடுகளில் கட்டவிழ்த்து நின்ற முரட்டு மாடுகளை எழுத்துவந்த வண்டியில் கட்டினால் அவை எப்படி வண்டியை இழுக்கும். இழுக்கும். முரண்டுதான் பிடிக்கும். எலியையும் பசியுடன் இருக்கும் பூனையையும் பிடித்து வந்து ஒருவரை ஒருவர் கதைத்துக் கொண்டிருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விட்டால் என்ன நடக்குமே அதுவே நடந்தது. இது கூடத்தெரியாமல் என்ன பேச்சுவார்த்தை வேண்டியிருக்கிறது?

ஒன்றை ஒன்று வி(பி)ராண்டத் தொடங்கியபோதும் நடுமக்குழு பார்த்துக் கொண்டுதான் இருந்தது. நோர்வே பார்த்துக்கொண்டுதான் இருந்தது. இவர்கள் பார்த்துக்கொண்டு மட்டும் தான் இருப்போம் என்று தானே சொன்னார்கள். அப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது என்றால் பேச்சு வார்த்தையின்றி போரைப்புகைய விட்டுவிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கலாமே. என்ன புலிகளை வலுவிழக்கச் செய்திருக்க இயலாது. ஆயுதங்களும் கைமாறியிருக்காது. அன்று புலிகள் மிகப்பலத்துடன்தான் இருந்தார்கள்.

புலிகளை விரட்டுகிறேன் சிங்கக்கொடி தேசம் எங்கும் பறக்கும் நாளை விரைவில் எதிர்பாருங்கள் என்று மகிந்த குதிக்கிறார். இதை நோர்வேதான் தேடித்தந்தது என்பதை சிங்களமக்கள் என்று உணர்வார்களோ? நோர்வேயின் சதுரங்கதைத்தைப் புலிகள் எப்போ புரிவார்களோ?

புரிந்துணர்வு ஒப்பந்தம் 6 மாதம் ஒரு வருடத்துக்கு மேல் இழுபடுமானால் இது புலிகளைப் பலவீனப்படுத்துவதுடன் போருக்கே வழிவகுப்பும் என்று தன்னைத்தான் புலியா பிரமைகாட்டுபவரின் கூறியபோது அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. நீங்கள்தான் அறிவாளிகள் அங்குள்ளவர்கள் எல்லாம் முட்டாள்களா என்றார். இன்று நடந்தது என்ன? நாம் கொடுத்த உயிர்கள் என்ன? விலைகள் என்ன?….? மனமுவர்ந்து இருபகுதியும் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தால் தீர்வுக்கு ஒரு மணிநேரம் போதும். எதையும் விட்டுக்கொடுக்க விரும்பாதவர்களும், நடுமையாய் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் கூடிக்கதைத்தால் சாவது சனங்கள் தான். இப்படி இழுபட்ட பேச்சுவார்த்தைகாலம் பெரும் போருக்கான, மனிதஅழிவுக்கான தயார்படுத்தல் காலமாகவே இருந்திருக்கிறது. இங்கே அழிந்ததும் அழிந்து கொண்டிருப்பதும் தமிழ், சிங்கள மக்கள் மட்டும் தான். நோர்வே பார்த்துக்கொண்டுதான் இருக்கும். முடிந்தால் கண்ணாடி வாங்கிக் கொடுங்கள் இன்னும் வடிவாகப் பார்க்கட்டும்.

சுனாமி வந்து இலங்கையைத் தின்றது, 60 000 மேற்பட்டோரைக் கொன்றது. இதில் தமிழர்களே அதிகம். ஆனால் நோர்வேயின் உதவிப்பணம் யாரைப்போய் சேர்ந்தது? ஆழிப் பேரலையால் அழிந்து அல்லற்படும் மக்களை அந்தப் பணம் போய்ச் சேர்ந்ததா?, அப்படி சேர்ந்தால் அனுப்பப்பட்ட பணத்தில் எத்தனை சதவீதம் அந்த மக்களைச் சென்று சேர்ந்தது போன்ற கேள்விகளை ஒருபுறம் தள்ளி வைப்போம். இந்த சந்தர்ப்பத்தில் நடந்த சில சம்பவங்களை அறியும்போது நமக்குச் சிறுபிள்ளைத் தனமாகத் தெரியலாம், ஆனால் அதன் பின்னணியில் பொதிந்துள்ள அரசியல் இனம் இனத்தோடு என்பதுபோல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பேரினவாதம் பேரினவாதத்தோடு கை குலுக்கி தனது காதலை வெளிப்படுத்தும். அதாவது ஒரு சிறு சம்பவத்தைப் பாருங்கள்: சுனாமியில் அழிக்கப்பட்ட புத்தவிகாரை ஒன்றை நோர்வே தாம் திருத்தித் தருவதாக செய்தி பத்திரிகைகளில் வந்தது. எத்தனையோ கோவில்கள், தேவாலயங்கள் அழிக்கப்பட்டனவே நோர்வேக்கு அவை ஏன் புலப்படவில்லை. இதையெல்லாம் சிலாகித்து எழுதும் அளவிற்குப் பெரிய விடயமா எனும் கேள்வி உங்களுக்கு எழலாம். நான் இதை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. ”நான் உன் மீது காதலும் பாசமும் கொண்டனான்தான் கண்ணா, என்னையும் வெள்ளைப் புலியாக்கி கொடும்பாவி கொழுத்தாதே…” என்று சிங்களப் பேரினவாதத்திடம் தன் லவ்வை வெளிப்படுத்தும் ஒரு சென்ரிமென்ற் உளவியல் நடவடிக்கை என்பதுதான் உண்மை.

எத்தனை துரோகங்களைச் சந்தித்தது ஈழத்தமிழினம், ஆனால் நோர்வே செய்தது போன்ற துரோகத்தையோ, ஈனச்செயலையோ எவரும் இந்த இனத்துக்கு இழைத்ததில்லை.

உலகப் பேரினவாத அரசுகள் தத்தமக்குள் ஒன்றுசேரும், உறவாடும் என்பதுவே சர்வதேசிய யதார்த்தம். இந்த சர்வாதிகார அரசுகளால் அடக்கி ஒடுக்கப்படும் மக்களை இவர்கள் ஒன்றுசேர விடாமல் தடுக்கும் பணியையும் கூட்டுச் சேர்ந்தே செய்வார்கள். இதற்குத்தானே இனம் மதம் சாதி குலம் கோத்திரம் என்று எண்ணிலடங்கா வகைகளில் பிரித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் பேரினவாதிகளும், சர்வாதிகாரிகளும் இவற்றையெல்லாம் தாண்டி ஒன்று சேர்வார்கள். உதாரணம் இந்திய மத்திய அரசு, அமெரிக்கா, பாக்கிஸ்தான் நோர்வே….

தமிழ்மக்களின் மக்கள் தொகையைவிடக் குறைந்த கொசோவோ, மெந்தோநீகரோ, எரித்திரியா, கிழக்கு திமோர் போன்ற நாடுகள் தனியாக, தனித்துவத்துடன் வாழப் பிரிந்து போகலாம் என்பதை ஏகோபித்து மானசீகமாக அங்கீகரிக்கும் இவர்கள் இலங்கைத் தமிழர்கள் பிரிவினையில் மட்டும் விதிவிலக்காக நடக்கிறார்களே ஏன்? (ஈழப் பிரிவினைதான் ஒட்டுமொத்த இலங்கைப் பிரச்சனைக்குமான ஒரே தீர்வு என்ற கருத்தியலோடு இயங்கிய பலர் இப்போ புலிகளைப்போல் அதை மறு பரிசீலனை செய்தார்கள். தனித்தமிழீழம் இப்போ தேவையா இல்லையா என்ற வாதப் பிரதிவாதங்கள் ஒரு புறமிருக்கட்டும் அதை இன்னொரு கட்டுரையில் பேசுவோம். ஒரு கண்ணுக்கு எண்ணையும் இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் போடும் இந்த சர்வதேச பெரும்பான்மைப் பயங்கரவாத அரசுகளின் பக்கம்சார் நடவடிக்கைக்காகவே இதை இங்கே குறிப்பிடுகின்றேன்.)

நோர்வேயிலும் சிறுபான்மை இனமாக வாழ்ந்து வரும் சாமர் எனும் இனத்தவர் நோர்வேஜியரால் அடிமைகளாக நடத்தப்பட்டனர், உரிமைகள் மறுக்கப்பட்டனர். தாயிடம் பால் குடிக்கும் விலங்குகளுக்கு உரிய உரிமை கூட சாமர் இன மக்களுக்கு மறுக்கப்பட்டது. இந்தச் சாமர் தான் நோர்வேயின் ஆதிக்குடி என்பது உணரக்கடவது. இவர்கள் தமது மொழியான சாமிஸ்கை பேசும் உரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் குடும்பங்களை சிதைத்துச் சுக்கு நூறாக்கப்பட்டது. தாயின் முலையில் பால்குடித்துக் கொண்டிருந்த சாமர் குழந்தைகள் நோர்வேஜியப் பணக்கார வீட்டுக் கல்யாணத்துக்கு பரிசுப் பொருளாக, வீட்டு வேலைக்காரராக, குழந்தைத் தொழிலாளர்களாக கொடுக்கப்பட்டு அடிமைகளாக தம்வாழ்நாள் முழுவதையும் வாழ்ந்து தீர்த்தார்கள். இச்சாமரைப்பற்றி தொடர்ந்து எழுதினால் இதுவே ஒருதனிப் புத்தமாகி விடும்.

நோர்வேஜியர்களும் ஆதிக்கவாதிகளே, அதிகார வெறியர்களே. அயல் நாடுகளைக் கொள்ளையிட்டு தம்மை வளர்த்த வீக்கிங்குள் எனும் கடற்கொள்ளையர் இனமே இந்த நோவேஜிய இனம். இன்றும் இவர்களது அடிமன அரசியலில் சாமர் இன மக்களை இழிவானவர்களாக, கீழானவர்களாக நோக்கும் தன்மையைக் காணலாம், சட்டம் இறுக்கமாக இருந்தாலும் கூட. இவர்களிடம் இருந்து சமாதானத்தையும் ஒருமைப்பாட்டையும் எதிர்பார்த்த எம்மை என்னத்தால் அடிக்கலாம் சொல்லுங்கள்.

இந்தச் சாமர் மக்களும் நோர்வேஜிய அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து போராட்டம் செய்தார்கள். தங்களுக்கென்று தனிப் பாராளுமன்றமும், கொடியும், தேசியப் பெருநாளும் (மாசி 6) அமைத்துக் கொண்டார்கள். ஆயினும் அவர்களால் வெல்லப்படாத இன்னும் பல உரிமைகள் விடுபட்ட படியேதான் இருக்கின்றது. தனது நாட்டிலுள்ள சிறுபான்மை இனத்தின் தார்மீக உரிமைகளையே மறுக்கும் இந்த நோர்வே எமது பிரச்சனையில் சுத்தமான மத்தியஸ்தம் வகிக்கும் என்று எதிர்பாக்கும் எமது தலையில் எதைக் கரைத்து ஊற்றுவது சொல்லுங்கள்.

._._._._._.

இது ஒரு கட்டுரை மட்டுமல்ல வேறுவழியின்றி இந்நாட்டில் இருப்புக் கொண்டதால் எற்பட்ட வலியும், வேதனையும் மனச்சாட்சியின் தண்டனையுமே இந்தக் கட்டுரை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

25 Comments

  • santhanam
    santhanam

    இந்த கட்டுரை நோர்வேயின் உண்மை முகத்தை தாங்கிவந்துள்ளது. நன்றி நக்கீரா.

    Reply
  • மாயா
    மாயா

    இக்கட்டுரை அப்பம் பிரித்துக் கொடுத்த குரங்கின் கதை போல ஆக்கியுள்ளதற்கான பல ஆதாரங்களை முன் வைத்துள்ளது. கட்டுரையாளருக்கு நன்றி.

    இலங்கையில் மகிந்த அரசு வந்ததும் நோர்வேயை சமாதான பேச்சு வார்த்தையிலிருந்து மட்டுமல்ல , தமது நம்பிக்கையிலிருந்தும் வெளியேற்றியது. அதுவே இன்றைய வெற்றிக்கு முதல் வழியை அமைத்துக் கொடுத்ததாக ஜேவீபீயின் விமல் வீரவங்ச சிங்கள தொலைக் காட்சி பேட்டியொன்றில் தெரிவித்தார்.

    நோர்வேயை ஓரங்கட்டிய மகிந்த அரசு, மொத்தமாக ஓரம் கட்ட புலிகளின் அண்மைய இலங்கை தூதுவராலயத் தாக்குதல்கள் வழி அமைத்துக் கொடுத்தது. அது புலிகளது தாக்குதலா அல்லது புலிகள் போல் ஊடுருவிய சிறீலங்கா அரசினால் எவரையாவது பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலா என்பது கேள்விக்குறியே?

    மகிந்த அரசு நோர்வேயை புரிந்து கொண்ட அளவு , தமிழர்கள் நோர்வேயைப் புரிந்து கொள்ளவே இல்லை. அங்குள்ள மட்டுமல்ல புலத்தில் உள்ள புண்ணாக்குகளுக்கும் அனைத்து வெள்ளைக்காரன் நல்லவன் என்ற மனது இருக்கிறது. தமிழர்கள் புலி வாலைப் பிடிக்கப் போய் விட முடியாமல் போனது போல, புலிகள் நோர்வேயின் வாலைப் பிடித்த பின் விடுபட முடியாமல் ஆனார்கள். நோர்வேயின் கைப்பிள்ளையாக புலிகள் கனகாலம் இறுகி இருந்ததன் விளைவே கடைசி வரை புலிகளோடு எரிக் சொல்கெய்ம் தொடர்பில் இருந்துள்ளார் என்பதை அவரே சொல்வது. புலிகளது அழிவுக்கு நோர்வே பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. விரைவில் கேபீயை கைதுசெய்யவிருப்பதாக சீறீலங்கா தெரிவித்துள்ளது. அந்த துணிவு கேபீ குறித்த ஒருவரால் அல்லது ஒரு நாட்டால் சிறீலங்காவுக்கு உள்ள நம்பிக்கையையும் , உறுதி மொழியையும் கொண்டதாக தெரிகிறது.

    Reply
  • sivaji
    sivaji

    நோர்வே கடந்தகாலங்களில் பாலஸ்தீனத்திற்கும் பின்னர் தமிழர்க்கும் துரோகம் செய்துள்ளது இதில் உள்ள முக்கிய விடயம் என்ன என்றால் புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் இதை புரிந்து கொள்ளாதது வெள்ளைத்தோலை நம்புவது இருக்கும் மட்டும் நாங்கள் அடிபட வேண்டியது தான் இந்த நோர்வேயின் தலையீட்டுக்குப் பின்னால் கிறீஸ்தவ ஊடுருவலும் உள்ளது நான் இப்போ சொல்லும் போது இதை சந்தேகிப்பீர்கள் இதையும் சில நாட்களில் விளங்குவீர்கள்

    Reply
  • indiani
    indiani

    இந்தியாவை நோர்வேயையும் கேட்கத் தொடங்கியது வரவேற்க வேண்டியதே – புலம் பெயர் நாடுகளில் அரசுக்கு வேலை செய்யும் நபர்களையும் இணையத்தளங்களையும் பார்க்க கூடியதாக உள்ளது இந்தியாவை நோர்வேயை என்ன செய்தாய் எமது போராட்டகாலங்களில் என்று துணிந்து இணையத்தளங்கள் கேட்க வேண்டும்.

    பிரபாகரன் தனது சாதாரண குணாம்சத்துடன் மற்றவர்களை நம்பாலே இருந்திருந்தால் இன்றும் அசைத்திருக்க முடியாதவரே புலம் பெயர் தமிழர்களும் இதன் பின்னால் வந்த நோர்வேயும் இவற்றுக்கு பின்னால் பெரிய கத்தியுடன் இருந்த இந்தியா எல்லாளன் குதிரையிலிருந்து விழும்தருணம் பார்த்து கொலை செய்தார்கள்.

    தமிழர்க்கான தீர்வு என்ன? என்று பொறுத்திருப்போம்? புலம் பெயர் தமிழர்கள் வி.புலிகளின் ஆதரவாளர்களும் ஒன்று சேர தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்க்கு பாரிய ஊர்வலங்களை ஆர்ப்பாட்டங்களை செய்ய தம்மை தயார்ப்படுத்த வேண்டும்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இந்தகட்டுரையில் புதுவிதமாக ஒன்று சொல்லப்பட்டதாக ஒன்றுமே இல்லை. நீண்ட காலத்திற்கு முன்பே இலங்கை இராணுவத்திற்கு இராணுவபயிற்சி ஒரு பக்கத்திலும் தமிழ்போராளிக்குழுவிற்கு மறுபக்கத்திலும் இராணுவபயிற்ச்சி வழங்கியதாக இஸ்ரவேல் மீது குற்றச்சாட்டு உள்ளது. பழைமையான குடிகளை அழித்தொழித்தவர்கள் நோர்வே மேற்குடியர்கள் அல்ல.
    செவ்விந்தியர்களை அழித்தொழித்தவர்கள் யார்? அவுஸ்ரோலிய பழம்குடியை அழித்தொழித்தவன் யார்?

    இந்த இடத்தில் தான் எமக்கு சமூகவிஞ்யானம் தேவைப்படுகிறது. இறுதியாய்வில் வல்லமையுள்ளது எல்லாம் உயிர் வாழும். டார்வின் வல்லமையை அதாவது அறிவுசக்தியை….. சமூகசக்தி தொழியாளர் வர்கத்தின் கூட்டுமுயற்சியும் போராட்டமே என்றார்.(தயவு செய்து போராட்டத்தை பிரபாகரன் அர்த்ததில் புரிந்து கொள்ளாதீர்கள் அது இன்னும் அவலமாக நடந்து முடியும்.) நடப்பது என்னவோ இனப்பிரச்சனையாக தோன்றினாலும் நடப்பது வர்கப்போராட்டம்.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    சந்திரன் ராஜா! எங்கிருந்து எழும்பி வருகிறீர். இவ்வளவு காலமும் என்ன செய்தீர். வர்க்கப்போராட்டம் பற்றிக் கதைக்கும் நீர் தெற்கிலுள்ள வர்க்கப்பாகுபட்டுக்கு எதிராக உள்ள சக்திகளுடன் இணைந்து போராடியிருக்கலாமே. சமூகவிஞ்ஞானமும் போராட்டமுறைகளும் காலத்துக்கு ஏற்ற மாறிக்கொண்டே இருக்கிறன்றன. மாற்றம் என்பது மாறாது என்பதை ஏற்றுக்கொண்டு இடதுசாரிகள் மாற்றத்தை ஏன் விரும்புவதில்லை என்பது தான் புரியவில்லை. காலமாற்றம் இடதுசாரித்துவத்தைப்பின்பற்றிய கி.யேமனியை உடைத்து இணைத்தது. சோவித்யூனியன் சிதைந்தது. பழைய யுகோசிலாவியா சிதறியது. மாற்றத்தை எதிர்கொள்ள விரும்பாது போன புலிகளுக்கு என்ன நடந்தது என்பதை யாவரும் அறிவர். தத்துவங்கள் தத்துவங்களாக இருக்கட்டும் நடைமுறைக்குதவாத தத்துவத்தை கூழ்காச்சித்தான் குடிக்க முடியுமா?

    Reply
  • Nackeera
    Nackeera

    கட்டுரை பெரிதாக இருப்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்து விட்டு சந்திரன் ராஜா பின்நோட்டம் எழுதியிருக்கிறார் என்று எண்ணுகிறேன். //நீண்ட காலத்திற்கு முன்பே இலங்கை இராணுவத்திற்கு இராணுவபயிற்சி ஒரு பக்கத்திலும் தமிழ்போராளிக்குழுவிற்கு மறுபக்கத்திலும் இராணுவபயிற்ச்சி வழங்கியதாக இஸ்ரவேல் மீது குற்றச்சாட்டு உள்ளது.// இதற்கும் இக்கட்டுரைக்கும் என்ன தொடர்பு? சாமர் பற்றி சரித்திரம் எங்வளவு ராஜாவுக்குத் தெரியும் என்பது என் கேள்வி.

    சத்திரன் ராஜா! தயவுசெய்து கட்டுரையை சரியாக வாசிக்கவும்//பழைமையான குடிகளை அழித்தொழித்தவர்கள் நோர்வே மேற்குடியர்கள் அல்ல.// இதை எதற்காக இங்கு எழுதினீர். கட்டுரையில் எங்குமே நோவேயியர்கள் அழித்தார்கள் என்று சொல்லப்படவில்லையே? பின்நோட்டத்தின் பின்பகுதியில் வர்க்கப்போராட்டத்தை வலியுறுத்தும் நீர் நோர்வேயிய மேற்குடிக்கு ஏன் வக்காளத்து வாங்குகிறீர். இக்கட்டுரையில் எங்குமே நோவேயிய மேற்குடிகள் பற்றிக் கதைக்கப்படவில்லையே.

    Reply
  • மாயா
    மாயா

    //indiani on May 23, 2009 9:16 am
    தமிழர்க்கான தீர்வு என்ன? என்று பொறுத்திருப்போம்? புலம் பெயர் தமிழர்கள் வி.புலிகளின் ஆதரவாளர்களும் ஒன்று சேர தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்க்கு பாரிய ஊர்வலங்களை ஆர்ப்பாட்டங்களை செய்ய தம்மை தயார்ப்படுத்த வேண்டும்.//

    புலத்தில் பணம் புடுங்குவதைத் தவிர வேறு எதையும் இனி செய்யப் போவதில்லை. இறந்த தனது தலைவனையே பொறுப்பேற்கவோ அது குறித்து உண்மையை ஏற்றுக் கொள்ளவோ முதுகெலும்பில்லாத தமிழினம் இனி நிமிர்ந்து பேசப் போவதில்லை. பிரபாகரன் இருந்த துணிவிலும் பிரபாகரனின் மேல் இருந்த பயத்திலும் பேசியவர்களே ஈழத் தமிழரில் அதிகம்.இன்று புதைக்க நினைத்த பிரபாகரனது உடலை எரித்து கடலில் கரைத்து விட்டதாக இறுதி செய்தி வருகிறது. பிரபாகரன் புதைத்த இடத்தில் மரியாதை செய்ய என ஒரு கூட்டம் திரளும் என இந்த எரிப்பும் கலப்புமாம். பிரபாகரனது உடலை பெற எவருமே முன்வரவில்லை என அரசு தெரிவித்தும் உள்ளது. உண்மைதான்? யாரும் இல்லை. உங்களுக்காக ஒரு போராட்டம் ?

    உண்மையான புலி விசுவாசிகளை விட பொய்யான புலி விசுவாசிகளே உலகெங்கும் அதிகம். பெரும்பாலானவர்கள் சுயநலத்துக்காக புலிகளானார்கள். அடுத்து உயிர் பயத்தில்தான் ஏகப்பட்டவர்கள் தலையாட்டும் பொம்மைகளாக வாழ்ந்தார்கள். கற்றோர்கள் பேசவும் இல்லை , சேரவும் இல்லை. புலிகளிடத்தில் கற்றவர்களை விட கயவர்களுக்கே இடமிருந்தது. அடுத்தவனை துரோகி என சொல்ல துணிவுள்ளவர்கள் புலத்து தலைவர்கள் ஆனார்கள். இன்று கடத்தல்காரன் தலைவராக்கப்பட்டுள்ளான். அவன் குரலே புலிகளின் குரலாகக் கேட்கிறது. தனிப்பட்ட விரோதங்களுக்காகவும் கூட அமைதியாக இருந்தோரை புலி எதிர்ப்பாளர்களாக்கினார்கள். நாட்டில் செய்த அதே குணத்தை , புலத்தலிருந்தும் காட்டினார்கள். இங்கு எதிர்ப்பவன் குடும்பத்தை , அங்கு கடத்தினார்கள். கொன்றார்கள். பணம் புடுங்கினார்கள். இல்லாவிட்டால் அங்கு சென்றவனை கடத்தி பணம் பறித்தார்கள். அல்லது கொன்றார்கள்.

    ஆகக் குறைந்தது தனி ஒரு மனிதனால் ஒரு கலை நிகழ்ச்சியைக் கூட செய்ய புலத்து புலிகள் விடவில்லை. ஒன்று அதை செய்ய விடாது பண்ணுவார்கள் அல்லது அதே தினத்தில் அங்கேயே இன்னொரு நிகழ்ச்சியை செய்து அவனை அழித்துவிடுவார்கள். உலகமே தேசியமாக்கப்பட்டது.

    தான் ஒன்று செய்வதை விட அடுத்தவன் செய்து கொண்டிருக்கும் ஒன்றைப் புடுங்குவதையே புலத்து புலிகள் கொள்கையாகக் கொண்டிருந்தனர். தாயகத்தில் போர் தொடங்குமுன் ஓடி வந்தவர்களும், புலத்தில் துண்டும் நோட்டீசும் கொடுத்தவர்களும் புலத்தில் தலைவர்கள் ஆனார்கள். அங்கே தாயகத்தில் போராடிவிட்டு புலத்துக்கு´வந்தவர்களெல்லாம் இங்கே துரோகிகளானார்கள். காசு புடுங்குவதையும், பேசியதையே திரும்பி மேடையில் பேசுவதையும், கேட்கும் கேள்விகளுக்கு அண்ணனுக்கு எல்லாம் தெரியும். தலைவர் திட்டம் வைத்திருக்கிறார். அதை வெளியில் சொல்ல முடியாது எனும் புண்ணாக்குகளுமே இங்கு தலைவர்கள். கையெழுத்து வைக்கத் தெரியாதவர்கள் புலிகளின் பள்ளி நடத்துனர்கள்? கேவலம்.

    அங்கும் தமிழர்கள் இளைஞர்கள் மூலமாகவே அழிவை கொண்டு வந்தார்கள். புலத்திலும் இளைஞர்கள் மூலமாகவே அழிவைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இன்று புலத்து புண்ணாக்கு தலைவர்களுக்கு இளைஞர்களிடம் உண்மை சொல்ல பயமாம்? இளைஞர்கள் வன்முறையில் இறங்கினால் தங்கள் இருப்பும் இல்லாமல் போயிடுமாம். அதனால் பிரபாகரன் இருக்கிறார் எனும் தமிழ்நெட்டின் செய்தியோடு பம்பாத்து வாழ்வு நடத்துகிறார்கள். இன்னும் இருப்பதை பினாமிகளிடமிருந்து சுருட்ட கேபீயும் புலத்து புண்ணாக்குகளும் தமிழ்நெற்றில் பிரபாகரனை வாழவைத்துக் கொண்டிருக்கிறனர். உங்கள் முகங்கள் உலகத்துக்கு தெரியும் போது நீங்கள்தான் உண்மையான துரோகிகள். பந்து மீண்டும் திரும்பி வரும் எனும் நியதி பொய்யாகாது.

    அரச படைகளைத் தவிர தனிமனிதர்களோ அல்லது குழுக்களோ அல்லது பாதாளக் கோஸ்டியோ ஆயுதங்களை வைத்திருக்காதவாறு அரச படை 5 வருடங்கள் திட்டத்தின் அடிப்படையில் புணரமைக்கப்பட்டு வருகிறது. அதாவது ஆயுதக் குழுக்கள் களையப்பட உள்ளன என்பதை சரத் பொண்சேகா தெரிவித்துள்ளார். 1981ம் ஆண்டு ஒரு இராணுவவீரன் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டான். அந்த வீரனின் கொலையை விட்டு வைத்ததனால் 2009 வரை போராட வேண்டிவந்தது. 30 வருட போரட்டத்தில் முப்படைகளிலும் 23´790 வீரர்கள் உயிர் துறந்துள்ளனர் என்பதையும் இனி அது நடைபெற அனுமதியோம் என பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளார். புலி போர்வையில் உதவிகள் வழங்கிய அனைத்து தமிழரும் இலங்கை சர்வதேசம் என கண்காணிக்கப்டவிருக்கிறது. அதன் முடிவு ?

    ஆனால் புலத்தில் நடத்த நினைக்கும் ,உங்கள் ஊர்வலங்களும் போராட்டங்களும், தாயகத்திலும், முகாம்களுக்குள்ளும் உள்ள உங்கள் உறவுகளின் உயிர்களுக்கு விலைபேசவே பிரயோசமாகும் என்பதை மறக்க வேண்டாம். பிரபாகரன் குழு நடத்திய அதே பாணியை அரச படைகளால் பின்பற்றுகின்றன. அது இப்போதைக்கு மேலும் தொடரும் சாத்தியம் அதிகம்.

    அங்கு எஞ்சியுள்ள மக்களையாவது வாழவிடுவதா அல்லது சாகடிப்பதா எனும் முடிவு புலம் பெயர் தமிழர்கள் கையில் நிறையவே உண்டு.

    Reply
  • Nades
    Nades

    என்னவோ போங்கப்பா! என்ன நடக்குதன்றே தெரியவில்லை. நோர்வே போன இடத்தில் சமாதானம், நல்ல விடயங்கள் எல்லாம் “நோ வே”.

    முடியல! தலைவரை மலை போல நம்பி இருந்தன். எல்லாம் சேர்ந்து முடிச்சிட்டாங்கள். மக்கள் பாவம். பேசாமல் எல்லாரும் நீர்கொழும்பார் மாதிரி சிங்களவரா மாறியிருக்கலாம். இனியாவது உந்த நெடுந்தேசியவாதிகள் எதாவது மக்களுக்கு செய்யுங்ஙோ. புலி தானே இப்ப இல்லை.

    Reply
  • rohan
    rohan

    வருத்தப் படாதேங்கோ நடேஸ், எங்கட 21 பேர் குழு இதற்கெல்லாம் ஒரு வழி பாக்கும்.

    Reply
  • palli.
    palli.

    சரியாய் போச்சு. தொடங்கீட்டாங்கையா சிவப்பு சட்டைகாரர் வெள்ளை புறாவின் விரல் எண்ண? குடிக்க தண்ணியில்லை கோலாவுக்கு ஆராட்ச்சி நடக்கட்டும்.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    ரோகான்! நோர்வேக்குப் போனவங்கள் எல்லாம் நோ வே இல்லாமல் போனவங்கள் தானே.
    அது என்ன 21?

    பல்லி! நீங்கள் எண்டைக்கும் இடையூறாய்தானே சொல்லிக் கொண்டிருக்கிறயள். இடையூறாய் சொன்னலும் கெட்டது நடக்காமல் பார்த்துச் சொல்லலாம் தானே

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    தலைவர் தளபதிகள் என்று அரசு மரண விசாரணைகளை நடத்தி குற்றவியல் விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வந்து உள்ளது.

    அடுத்து எம்முன் உள்ளகடமை ‘தமிழீழ விடுதலைப் போராட்டம்’ என்ற பெயரில் இயக்கங்கள் குறிப்பாக விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டம் பற்றிய முழுமையான ‘மரண விசாரணை’ ஒன்று அவசியம். அது விடுதலைப் புலிகளை தூற்றுவதற்காக அல்ல. கடந்து வந்த பாதையின் சரிகளையும் பிழைகளையும் கண்டு இனி அமைக்கப் போகும் பாதையை செப்பனாக அமைக்க வேண்டும்.

    இது தொடர்பான ஆக்கங்களை குறிப்பாக சர்வதேசத்துடன் தொடர்புபடுத்தி ஆராய வேண்டியது அவசியம். அந்த வகையில் நக்கீராவுடைய இந்த ஆக்கம் மிக நல்ல முயற்சி. இது போன்று பல்வேறு விடயங்கள் ஆராயப்பட வேண்டும். விவாதிக்கப்பட வேண்டும்.

    கதைத்துக் கொண்டு எழுதிக்கொண்டு இருப்பதை விட்டுவிட்டு ஏதாவது செய்கிற வழியைப் பார்க்கச் சொல்வது போன்ற விமர்சனங்கள் பற்றி அவதானமாக இருக்க வேண்டும். செயலில் காட்டுகிறோம் செய்த காட்டுகிறோம் என்று துப்பாக்கி வாங்கியவர்கள் இரவோடு இரவாக அழிந்து போனார்கள். மக்கள் மூன்று தசாப்தத்திற்குப் பின்னால் கொண்டு சென்று தள்ளப்பட்டு உள்ளார்கள். இவ்வளவு காலமும் ஏதாவது எழுதிக் கொண்டும் கதைத்துக் கொண்டும் இருந்திருந்தால் இரவோடு இரவாக அழிகின்ற நிலை வந்திருக்காது.

    அதற்காக எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதல்ல. கதைத்து எழுதி விவாதித்து செய்வோம். செய்த பின்னரும் கதைத்து எழுதி விவாதித்து நிதானமாக நகருவோம்.

    த ஜெயபாலன்.

    Reply
  • Nackeera
    Nackeera

    நன்றி ஜெயபாலன். உங்களின் கருத்துடன் இன்னுமொன்றைச் சேர்க்க விரும்புகிறேன். இப்ப கூட புலிகள் சுயவிமர்சனம் செய்வதும்; விடுதலை என்பது மக்களுக்குரியது என்பதை அறிவதும்; வரட்டுக்கெளரவங்களை தூக்கி எறிந்து விட்டு மக்களுக்காக மக்களாக ஒன்றுபடுவதும் மிக முக்கியமானது. ஒன்றுபடுவது என்பது போராட மட்டுமல்ல எம்மக்களின் மீள்கட்டமைப்புக்கும் இது அடித்தளமாக இருக்கும் இது தோல்வியல்ல வெற்றியின் படிக்கட்டாகவும் இருக்கலாம். இதை தோல்வியாக்குவதும் வெற்றியாக்குவதும் மக்களின் கைகளிலும் புலம்பெயர் சமூகத்தின் கைகளிலே தான் இருக்கிறது. இந்தத் துக்கவியலை நாம் எம்மக்களின் உண்மையான விடுதலைக்கான புதிய உந்துசக்தியாய் ஏன் பயன்படுத்தக் கூடாது. இன்று வரையும் மக்கள் பார்வையாளராக இருந்தே கொல்லப்பட்டார்கள். பாலாற்காரத்தினாலேயே பலர் பங்காளிகளானார்கள். தங்கள் விடுதலைக்குரிய தேவையை மக்கள் உணர்வதும் உணத்துவதும் சுயமாகப் போராடத்தூண்டுவதும் எமது பணியாகட்டும். எமக்குப் பசிக்கும் போது அந்த உணவை நாமே தேடி உண்ணவேண்டும். இது சாதாரண மிருகத்துக்குரிய பண்பு இதைக்கூட மனிதர்களாகிய நாம் செய்யவில்லையானால் இப்பூமியில் நாம் வாழ்வதில் பயன் ஏது.

    Reply
  • palli.
    palli.

    //பல்லி! நீங்கள் எண்டைக்கும் இடையூறாய்தானே சொல்லிக் கொண்டிருக்கிறயள்//
    ஆமா சொல்லிக்கொண்டேதான் இருப்பேன். எம்மை அறிவு பொட்டகங்களாக காட்ட பல வழி உண்டு அதுக்காக தமிழரின் வாழ்க்கை தேவையில்லை. என்னை பொறுத்த மட்டில் இத்த கட்டுரை கூட ஒரு வணங்கா மண் கப்பல்தான். சில காலத்துக்கு முன்பு ஜெயபாலன் அவதிபடும் பிள்ளைகளை கரை சேர்க்க ஏதாவது செய்யலாமென ஒரு கட்டுரை எழுதினார். அதில் பலர் கலந்து அது பற்றி பேசினார்கள். எழுதினார்கள். ஆனால் எதிர்பார்த்த எந்தவித செயல்பாடும் தேசம் தவிர்ந்த நபர்களால் நடப்பதாக தெரியவில்லை. எது எம்மால் முடியுமோ அதை பற்றி எதுவும் சிந்த்திக்க மறுக்கும் நாம் எமக்கு தெரியாத அத்திய அவசிய விடயங்களை முன்னுக்கு பின் மாறாக சொல்லுவதில் ரயாகரனுடன் போட்டியாக செயல்படுகிறோம். ஜெயபாலன் எமக்கு தற்ப்போது தேவை புலிகளின் அறுவை சிகிச்சை அல்ல. அரசின் ஏவுகணைகள் இனியும் எமது இனத்துக்கு மேல் பாயாமல் இருக்க அவர்களையும் இனம் காட்ட வேண்டியதுதான். புலிமீது ஏன் இத்தைனை விமர்சனங்களை வைத்தோமோ. அதை எம்மக்கள் மீது இன்று அரசு செய்யும் தவறையும் அரக்கதனத்தையும் செய்ய மறப்போமானால் நாமே உலகில் மிக தெளிவான துரோகிகள்.

    குசும்பு பல்லி எப்போதுமே இடையூறு செய்வதே தொழிலாக செய்யுது. உன்மைதான் பல்லியை பொறுத்த மட்டில் உங்களது கருத்துக்கு (வேகதடை ) தடையாக அல்ல தடங்கலாகவே இருக்கிறேன். அத்துடன் ஏன் எனக்கு நக்கீரன் மீது விமர்சனமெனில் இப்படி திறைமையானவர்களும் பல்லியை போல் இறந்த காலத்தை சிதைப்பதை விட எதிர்காலத்தில் எம்மினத்துக்கு வாழ வழியென்ன என்னும் நிலமைகளை கட்டுரைகளாகவோ அல்லது பின்னோட்டமாகவோ விடாமல் இப்படி இறந்த காலத்து சதிராட்டங்களை இன்று போரட்டவடிவில் பேசுவதாலோ தெரியவில்லை.

    Reply
  • Nackeera
    Nackeera

    முக்கியமாக பல்லியின் பின்னோட்டத்துக்கு நன்றி சொல்லிக் கொண்டு. இக்கட்டுரையானது பலமாதங்களுக்கு முன் எழுதப்பட்டது என்பதும்; காசாவில் அதாவது பாலஸ்தீனத்திலும் நோவேயிய நாடகத்தை அம்பலப்படுத்தும் முகமாக மட்டுமல்ல வேதனையினதும் மனச்சாட்சியினதும் தண்டனையாகவே இது வெளிவந்தது. இது இப்பகூடப் பொருத்தமானது என்பதால்தான் தேசம் இதை வெளியிட்டுள்ளது. எமது விடுதலைப்பாதையை சிறிது திரும்பிப்பார்த்தால் செய்த பிழைகளையே தொடர்ந்து செய்து வந்திருக்கிறோம். நம்பிக்கை மோசடி; விசுவாச இன்மை; தனிநபர் துதிபாடல்கள் அல்லது பக்திவாதம் என்று புரையோடிப்போய்தான் கிடக்கிறது எமது கடந்தகாலம். இவற்றைச் சீர்தூக்கிப்பார்த்து எதிர்காலத்தை சரிசெய்வதும் வழிப்படுத்துவதும் தான் எமது இன்றைய கடமை.இல்லை என்று சொல்லப்போகிறீரா பல்லி./ எம்மை அறிவு பொட்டகங்களாக காட்ட பல வழி உண்டு. அதுக்காக தமிழரின் வாழ்க்கை தேவையில்லை./ இக்கட்டுரையில் நோவேயின் முகம்தான் வெளிக்கொணரப்பட்டது. இங்கு தமிழர்கள் வாழ்க்கை பற்றி என்ன பிழையாகக் குறிப்பிட்டுள்ளேன்? பல்லியவர்களே! நீங்கள் அவலை நினைத்து உரலை இடிக்கிறீர்கள். நோர்வேயின் பின்புலத்தில் இவ்வளவு நடந்தேறியிருக்கிறது. ஏன் இவர்களின் முகங்கள் இனம்காட்டப்படவில்லை? கடசி நிமிடம் வரை நோர்வேயை நம்பியிருந்தார்களே என்ன நடந்தது. அநாதையாச் செத்தார்கள் எங்கள் பிள்ளைகள். புலிகள் செய்தது சரியோ பிழையோ அவர்களும் என்னினத்தவர்கள்தான். இக்கட்டுரை நான் எழுதிய காலத்தில் இது பிரசுரிக்கப்பட்டிக்குமானால் யாரோ ஒருவனின் மனத்தில் கபடநாடகங்கள் புரிந்திருக்கச் சாத்தியம் இருந்திருக்கும். இதை தேசமாவது இப்ப செய்ததே என்பதில் மகிழ்ச்சி.

    Reply
  • Nackeera
    Nackeera

    பல்லி சொல்வது போல் எமது மக்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகே இருக்கிறது. அப்படித்தான் இது இருக்கும். இப்போதுதான் எம்மக்கள் மிக மிக அவதானமாக இருக்கவேண்டும் தவித்த முலயடிக்கப் பலர் வருவார்கள். இன்று எம்மக்களுக்குரிய தேவை உணவு> உடை> உறையுள். விடுதலை போராட்டம் பற்றிக்கதைக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பதும் முக்கியமில்லை. இந்த நீண்ட போர் எமக்குத்தந்த பாடம் என்ன? சிறுபான்மையினம் பேராடக்கூடாது? இவர்கள் குரல்வளைகள் என்றும் நசுக்கப்படுமா? இவையெல்லாம் வயிற்றுப்பசியின் முன் நிற்காது. இங்கு நான் எழுதுவது இக்கட்டுரை சம்மந்தம் இல்லாததுதான். இருப்பினும் எழுதுகிறேன். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதா? முக்கியமாக அரசு என்ன அரசியல் தீர்வை எமக்கு வைக்கப்போகிறது? இதுவே இன்றைய கேள்வி. அதன் பின்புதான் அங்குள்ள எம்மக்களின் விருப்பையும் வெறுப்பையும் நாம் அறிய முடியும். எம்மக்களின் விடுதலையில் அங்குள்ள மக்களே பங்காளிகள் புலம்பெயர் தமிழர்கள் உதவியாளராகவே இருக்கவேண்டும். அங்குள்ள மக்களைத் தீர்மானிக்க விடுங்கள். முடித்தால் அங்குள்ள மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்து உதவிசெய்யுங்கள் அன்றேல் பேசாமலே இருந்து விடுங்கள். தயவு செய்து திணிக்காதீர்கள். அங்குள்ள மக்களின் பொருளாதார; புவியியல்; உளவியல் காரணிகளைப் பொறுத்து அம்மக்கள் தம்தலைவிதியை அரசியல் அபிலாசைகளை தீர்மானிக்கட்டும். அங்குள்ள மக்களை முடமாக்கி விடாதீர்கள் என்பதை மட்டும்தான் என்னால் இப்போதைக்குச் சொல்ல முடியும்.
    குசும்பு! தயவுசெய்து ஏன் பல்லியைக் கிளறிவிட்டுக் கூத்துப்பார்க்கிறீர்.

    Reply
  • palli
    palli

    உன்மைதான் நக்கீரா பல்லி அவலை நினைத்துதான் உரலை இடிக்கிறது. காரனம் அவல் என்னும் (எம்மின வாழ்வு) விடயம் பகல் கனவாக இருப்பதால் அப்படி இடிக்கிறேன்.நோர்வே இமது இன போராட்டத்தில் ஒரு சிறிய பங்குதான். அதுவும் புலிகளின் நேசத்தாலோ அல்லது அமெரிக்காவின் தலையீட்டாலோ தடக்குபட்டு எமது பிரச்சனையில் மூக்கை நுளைத்ததுதான். அதனால் எமது போராட்டங்கள் தடுமாறவில்லை. மாறாக புலி அழிப்புக்கு அது விதையாக அரசுக்கு பிரயோசனபட்டிருக்கலாம். ஆனால் நாம் இந்த போராட்ட கால வாழ்வில் கடந்த வந்த பாதை மிகவும் கொடூரமானது.

    இயக்கங்கள் ஆரம்பிக்க பட்டதில் இருந்து அவை அழிந்து போனதுவரை ஏதோ சிறிது அளவாவது தங்களுடன் என்னால் விவாதிக்க முடியும். ஆனால் அது தேவையற்றதும் அதனால் எமக்கு ஏதும் பலன் இல்லை என்பதும் உன்மை. ஆனால் எமது போராட்டம் அனைத்தும் இன்று அழிக்கபட்டு. அரசியல் அமைப்புகள் கூட சிங்கள கட்ச்சிகளுடன் தமது கட்ச்சிகளை கலைத்து அவர்களுடன் அற்ப (பதவி) சந்தோசத்துக்காக இனையும் போதுநாம் கிளி சாத்திரம் பார்ப்பது போல் அந்த பிரச்சனை அப்படி போச்சு இது இப்படி போச்சு என பளய கழககாரர் மாதிரி பேசுவதுக்கு இது நேரம் அல்ல. புலி எப்படி வளர்ந்தது எப்படி அளிந்தது பிரச்சனையல்ல ஆனால் எனி ஒரு புலியோ பூனையோ உருவாகாமல் இருக்க எம்மால் ஏதும் செய்ய முடியுமா?? அதைதான் உங்களிடம் எதிர்பார்த்து பல்லியின் பாணியில் அப்படி எழுதினேன். உங்கள் கட்டுரை தவறு என நான் வாதிடஇல்லை. சரி இப்படி நடப்பதெல்லாம் பல்லியின் பின்னோட்டத்தில் சகசமப்பா.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நவீன ஆயுதங்களை கையாளுவது கொலைகளில் கஞ்சத்தனத்தை காட்டாமல் இருப்பது நேரகாலம் அனுகூலமாக வந்தால் ஐயர் என்ன? போராளி என்ன? போட்டுத் தள்ளு… இப்படியான வேலைத்திட்டங்கள் தமிழ்மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. ஓகோ என்றும் ஓடியது வெள்ளி விழாவும் கொண்டாடியது. காலமும் நேரமும் சரியாக இருந்தால் எதைப்பற்றி எழுதினாலும் ஒரு வரவேற்ப்பு ஒன்று இருந்து கொண்டேயிருக்கும் ஞானமும் தேவையில்லை தத்துவமும் தேவையில்லை. போகிற இடத்தில் பிழைப்பு தேடுகிற இனமாக மாறிப்போன தமிழ்இனத்திற்கு வேறு என்ன தேவை இருக்கிறது. சாதிப் பிரிவினையாலையோ பிளவுண்டுகிடக்கிற இந்தியா பற்றியோ தமிழனை தமிழன் கொடுமையாக நடத்திய நடத்துகிற மலையகமக்களைப் பற்றி சிந்திக என்ன தேவை இருக்கிறது?

    சமார் இனத்தைப்பற்றி பற்றி எழுதலாம் இன்னும் கொஞ்சம் பனிமலை ஏறினால் எக்ஸிமோவர் பற்றியும் ஆய்வு செய்யலாம். தமிழ்மக்களை பற்றி ஆய்வுசெய்வது எல்லாம் “வேஸ்ட்”. ஜெயபாலன் சொன்னதையே திருப்பிச் சொல்லுகிறேன்; சிங்கள மக்களின் போராட்டம் களனி ஆற்றில் கிள்ளியெறியப்பட்டது. தமிழரின் போராட்டம் நந்திக்கடலில் கிள்ளியெறியப்பட்டது. இந்த இடையில் இருப்பது தான் என்ன? அரசுபற்றிய கேள்வி இல்லையா?.

    Reply
  • Nackeera
    Nackeera

    என்றும் பல்லியின் பின்நோட்டத்துக்கு நன்மதிப்புண்டு. பிரபாவின் அழிவு வேதனைதான் என்றாலும் சிலவேளை சில நல்வழிகளைத் திறக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும் தவித்த முயல் அடிப்பவர்கள் விடவா போகிறார்கள். என்கணிப்பில் அரசு எமது பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வுவைக்காது. காரணம் எமது மக்களின் அவலத்தை கொழும்பில் கொண்டாடினார்கள். இன்னுமொரு கிழக்கை வடக்கில் கொண்டுவரவே எண்ணுவார்கள். எந்த ஒரு தனிமனிதனது தலைமையில் ஏற்படும் எந்த அமைப்பையும் மக்கள் இனங்கண்டு தவிர்ப்பது முக்கியம். கே.பி யின் போட்டியில் நான் அதிர்ந்துபோயிருந்தேன். தலைவர் சொன்னாராம் போராட்டத்தை எடுத்து நடத்துமாறு. எமது மக்கள் என்ன ஆடு மாடா இவர்கள் நினைத்தது போல் எடுத்துச் சென்று விலைபேசி விற்பதற்கு. நான் இப்ப உடன் எண்ணுவது என்ன வென்றால் உடனடியாக கே.பி யை மக்களுக்கு சரியாக அடையாளம் காட்டுவது முக்கியமானது. யாராவது இவரைப்பற்றி நன்கறிந்தவர்கள் இப்பணியைச் செய்ய வேண்டும். தற்போதையை நிலையில் நாம் செய்யக்கூடியது எம்மக்களுக்கு என கிடைக்கவிருக்கம் நிவாரணங்களை அரசியல்வாதிகளின் பைகளில் போகாமல் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையுமாறு பார்த்துக் கொள்ளவது அவசியம். ஒரு சின்ன எதிர்வைக் கூறி முடிக்கிறேன். அரசு உடனடியாக தமிழருக்கான சரியான முறையான அரசியல் தீர்வை முன்வைப்பதுடன் முழுஆயுதங்களும் களையப்பட்டு ஆயுதம் தாங்கியுள்ள அமைப்புக்கள் தடை செய்யப்பட்ட வேண்டும். இதை அரசாங்கம் செய்யாது போனால் இலங்கை இதைவிட பெரிய ஆயுதப்போராட்டத்தையோ மனித அழிவையோ பிற்காலத்தில் சந்திக்க நேரிடும்.

    Reply
  • Nackeera
    Nackeera

    சந்திரன் ராஜா சொன்ன ஒருவிடயத்தை நாம் கருந்தில் கொள்வது முக்கியமானது. நாம் எம்முள்ளே எம்மக்களையே தீண்டத்தகாதவர்களாய் துவேசித்துக் கொண்டு சிங்களவன் துவேசிக்கிறான் என்பது எந்தவகையில் நியாயம்? இதை இப்ப கதைக்கப்போனால் புலிகளின் பாடலையே திருப்பிப்பாடுவார்கள் ” இதைப்பற்றிப் பேசுவதற்கு இதுவா நேரம்?” இப்படி அப்படிச் சொல்லியே நடக்கவேண்டியவை எல்லாம் நந்திக்கடலில் போட்டாயிற்று. சமூகமாற்றம் என்பது தென்னிலங்கையிலும் தேவைப்படுகிறது என்பதும் சுட்டிக்காட்டலுக்குரியது.

    Reply
  • palli.
    palli.

    நன்றி நக்கீரா. இப்படி ஒரு சில விடயம் தெரிந்தவர்கள் பிரச்சனைகளை மக்களுக்கு சுட்டி காட்டி அது பற்றி கலந்துரையாடும் போது அந்த மக்களுக்கு ஒரு சிறு நம்பிக்கையாவது துளிர்க்கும். அதைவிட்டு ஒரு பயஙரவாத அமைப்பை அழிப்பதாக சொல்லி ஒரு இனத்தையே அழித்து விட்டு அதை அரசே தலைநகரில் கொண்டாடும் போது இவர்கள் எமக்கு ஒரு சுயவாழ்வு தருவார்களென எந்த பாமரனும் நினைக்க மாட்டான். மீண்டும் கே பி போன்ற ஓடுகாலிகளின் பின் போக வய்ப்பு உள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதார்த்த வாழ்வை வாழகூடிய அதுக்கு தேவையான நடைமுறைகளை கட்டிரையாக எழுதவும்.

    Reply
  • Nackeera
    Nackeera

    சமூகநோக்கும் நேர்பார்வையும் கொண்ட பல்லியவர்கள் தனியப் பின்நோட்டத்துடன் நின்றுவிடாது ஏன் எமக்கு நல்ல அறிவு பூர்வமான எம்மக்கள் நலனுக்காக கட்டுரைகளை தேசத்தில் எழுதக்கூடாது. இது நீங்கள் சிலமாதங்களுக்கு முன் என்முன்வைத்த கேள்வியை உங்கள் முன் திருப்பி அன்புடனும் பணிவுடன் வைக்கின்றேன். செய்வீர்களா?

    Reply
  • palli
    palli

    நக்கீரா நல்ல யோசைனைதான். ஆனால் தற்ப்போது எந்த ஒரு ஊடகமும் ஏதோ ஒரு பக்கம்சாய்வது போல்தான் உள்ளது. சிலது தமது கருத்தை மட்டும் மல்லாக்க படுத்துகொண்டு துப்புவது போல் எழுதுகிறது. ஆனால் தேசம் மட்டும் அமைப்புகளை கடந்து நட்புகளை கூட தவறான போக்காகபட்டால் விமர்சிக்கும் வல்லமையை கொண்டுள்ளது.

    சில காலங்களுக்கு முன்பு பல்லியை தேசத்தில் வருவதையே தடுக்கும்படி தேச நிர்வாகத்துக்கு நிர்வாகத்தின் நண்பர்கள் கட்டளை போட்டார்கள். அதுக்கு தேசம் இனங்காததால் தனியாக சின்ன வீடு(ஊடகம்தான்) போன கதைகள் எல்லாம் உண்டு. ஆகவே பல்லியின் எழுத்து பலருக்கு கோபத்தை ஊட்டும் என்பதில் பல்லிக்கு சந்தேகமே இல்லை. ஆனால் ஒரு கட்டுரையாளன் எழுதுவது அனைவரும் படிக்க வேண்டும். அது பின்னோட்டம் போல் எடுதேன் கவிட்டேன் என எழுத முடியாது. நீந்த தெரிந்தவனை குளிக்க சொல்லலாம். ஆனால் குளிக்க தெரிந்தவனை நீந்த சொல்லலாமா? ஆகவே அந்த ஆற்றல் பல்லியிடம் இல்லை. அது தங்களை போன்றோரிடம் இருப்பதால் தங்களுக்கு(எழுத்துக்கு) எப்போதும் பல்லியின் ஆதரவு தொடரும். அத்துடன் கட்டுரை எழுதுபவர் தேச நிர்வாகத்துடன் தொடர்பு உடையவராக இருக்க வேண்டும். காரணம் கட்டுரையில் நிர்வாகம் சில திருந்தங்களை செய்வதானால் அந்த தொடர்பு முக்கியமல்லவா? ஆக அந்த வழியிலும் பல்லிக்கும் கட்டுரைக்கும் வெகு தூரம். ஆனாலும் பல்லி தங்களது (அனைவரது) கருத்துக்களையும் சேகரித்து கொண்டுதான் இருக்கிறேன். வரலாறு என யாராவது தம்பட்டம் அடித்தால் அவர்களையும் குழப்ப வேண்டாமா..

    Reply
  • Nackeera
    Nackeera

    நன்றி தன்னடக்கம் என்றும் உயர்ந்தது தான். ஏதோ எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். எனக்கு தாங்கள் யார் என்றோ எங்குள்ளீர்கள் என்பதோ எதுவும் தெரியாது. ஒன்றுமட்டும் சரியாகத் தெரிகிறது. எம்மக்கள்பால் கருசனையுடையவர் என்பது திண்ணம். தேசத்தைப் பொறுத்தவரை நான் அறிந்தது என்னவெனில் நல்லகருத்துக்களை ஏற்று முடிந்தளவு சரி செய்து வெளிக்கொணர்கிறார்கள். மேலும் பின்னோட்டங்களுடாக விவாதங்களுக்கு அனுமதிக்கிறார்கள். இது பத்திரிகா தர்மத்தின் கண் அதியுயர்வான நிலையல்லவா? உண்மையைக் கூறுகிறேன் தேசத்தின் நிர்வாகத்திலுள்ள ஒருவரின் முகம் கூட எனக்குத் தெரியாது. அதை அவர்களும் எதிர்பார்ப்பதில்லை. நான் உங்களை அழுத்தத்துக்கு உட்படுத்தவில்லை. ஏதோ தோன்றியது சொன்னேன் அவ்வளவுதான்.

    Reply