படையினரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள்ளிருக்கும் முல்லைத்தீவு, சரவாத்தோட்டம் பிரதேசத்தைக் மீண்டும் கைப்பற்றுவதற்காக விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை மேற்கொண்ட முயற்சி இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை நீடித்த இந்த முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மூன்று தற்கொலைப் படகுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் சில படகுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. இதில் புலிகள் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது சரவாத்தோட்டம் பகுதியில் நிலைக்கொண்டுள்ள படையினரின் பாதுகாப்பு அரணைத் தகர்த்து அந்தப் பகுதியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியிலேயே விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை முயற்சித்தனர். இதில் நான்கு தற்கொலைப் படகுகள், 15 தற்கொலைக் குண்டுதாரிகள், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று இரவு 9 மணிமுதல் அதிகாலை 1.30 வரையான சுமார் நான்கு மணிநேரமாக இடம்பெற்ற படையினரின் இந்த முறியடிபபுத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.