அரசாங்கத்தின் எறிகனை தாக்குதல்களினால், பாதுகாப்பு வலயத்தில் 400க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக கூறப்படுவது தொடர்பில் நேர்மையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை ஒன்றிலேயே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டறிக்கைக்கு, ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அதன் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் மற்றும் சிறிலங்கா சுதந்தி கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்தின் மீது இவ்வாறானதொரு குற்றச் சாட்டினை முன்வைக்கும் போது, அதில் இருந்து விடுபட வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதன் பொருட்டு அரசாங்கம் ஒரு நேர்மையான விசாரணையை நடத்தி, தம்மீது குற்றம் இல்லை என்றால் அதனை உலகுக்கு நிரூபிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.இவ்வாறான குற்றச் சுமத்தல்கள் மூலம், சர்வதேச ரீதியாக இலங்கையை தலைகுனிய செய்ய முனையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக பிரசாரங்களை முறியடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்