இலங்கையின் வடக்கே இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும், யுத்த நிறுத்தமொன்றுக்கு பல்வேறு நாடுகள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கின்ற போதிலும், அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் அபயவர்தன தெரிவித்தார்.
விடுதலை புலிகளின் இலக்குகளை நோக்கிப் பாதுகாப்பு படையினர் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இன்று வியாழக்கிழமை 1000 பொதுமக்கள் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிவந்து இராணுவத்தின் 59 ஆம் படையணியிடம் சரணடைந்துள்ளதாகவும், இவர்கள் மீது விடுதலை புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, “பல நூற்றுக்கணக்கான உயிர்களையும், மருத்துவமனைகளையும் பலிகொண்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை அரசாங்கம் நிறுத்த வேண்டும். அத்துடன் மோதல் பகுதியில் சிக்கியுள்ள மக்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கான உதவிகளை வழங்க வேண்டும்” என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒபாமா அறிக்கை விடுத்து சில மணிநேரத்தில் இடம்பெற்ற ஷெல்வீச்சில் மோதல் பகுதியிலுள்ள வைத்தியசாலை ஒன்று தாக்குதலுக்கு இலக்கானதுடன்,50 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக ஏ.பி. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு ஆர்ட்டிலறி ஷெல்கள் பிற்பகல் 1.00 மணியளவில் வைத்தியசாலை மீது வீழ்ந்ததாகவும், இதில் பலர் காயமடைந்துமுள்ளதாக டாக்டர் வீ.சண்முகராஜா தொலைபேசி வாயிலாக தமக்குத் தெரிவித்துள்ளதாக அசோசியேட் பிரஸ், செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், “அரசாங்க டாக்டர் சண்முகராஜா என்பவரை மேற்கோள்காட்டியே சர்வதேச ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.டாக்டர் சண்முகராஜா புலிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாக இவ்வாறு பேசியிருக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? இதனை ஏன் சர்வதேச ஊடகங்களும் ஐ.நா. பேச்சாளரும் புரிந்துகொள்ளவில்லை?” என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.