சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இதுவரை இழுபறியாகவிருந்த பிரச்சினைகளுக்கு பொது இணக்கப்பாடு ஏற்பட்டுவிட்டதாக குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
இதன்படி குழு நடத்திவந்த கலந்துரையாடல்கள் நிறைவுக்கு வந்துள்ளதாகவும், இனி தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு, கடந்த இரண்டு வருடங்களாக, நூற்றுக்கும் மேற்பட்ட தட வைகள் கூடி ஆராய்ந்து வந்தது. அண்மைய நாட்களில் 95% விடயங்களுக்குப் பொது இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் இந்த வாரம் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமுகமாக இணக்கம் காணப்பட்டு விட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதனையடுத்து, தீர்வுத் திட்டத்தை பிரிவு பிரிவாகத் தயாரிக்கும் பணியை ஆரம்பித்து விட்டதாகவும் பெரும்பாலும் அடுத்த மாத ஆரம்பத்தில் தீர்வுத் திட்டத்தைத் தயாரித்து நிறைவு செய்ய முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத்திட்டத்தின் கீழ் மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும் உள்ளடக்கப்பட்டு தீர்வு வரைவு தயாரிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தப் புதிய தீர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் புதிய அரசியலமைப்பொன்று அவசியமானதென்றும் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும்.
அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரத்தை அவர் பெற்று செயற்படுத்துவாரென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.