நேரம் நெருக்குகின்றது! புலிகள் யாரிடம் சரணடைவது? : த ஜெயபாலன்

LTTE LOGOஇன்று வெளியாகி வருகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியிலேயே தேசம்நெற் இது தொடர்பான பல கட்டுரைகளை எழுதி மனித அவலத்தை நிறுத்துமாறு யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பையும் வலியுறித்தி இருந்தது. பாரிய தோல்விகளைச் சந்தித்த தமிழீழ விடுதலைப் புலிகளை இறுதிநேரம் வரை காத்திருந்து மனித அவலத்தை ஏற்படுத்தாமல் பல மாத்ங்களுக்கு முன்னதாகவே சரணடைய வேண்டும் என்றும் கேட்கப்பட் இருந்தது. ஆனால் இன்று அனைத்தும் காலம்கடந்தவையாகி உள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அதன் புலம்பெயர் ஆதரவாளர்களினதும் அரசியல் எப்போதும் கண்கெட்ட பின் சூரிய நம்ஸ்காரமாகவே இருந்துள்ளது.

”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

”எமது மக்களது பாதுகாப்பின் நிமிர்த்தமே ஆயுதம் தரித்தோம், ஆகையால் அவர்கள் பேரில் அவற்றினை களையவும் தயாராக இருக்க வேண்டும்.” : ரவி சுந்தரலிங்கம்

”எல்ரிரிஈ இன் சரணடையும் கோரிக்கை மிகவும் காலம் தாழ்த்தியே வந்தது. முன்னரே சரணடைந்து இருந்தால் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும்” எரிக் சொல்ஹைம்

சரணடைந்தவர்கள் சித்திரவதைக்கு உட்பட்டு படுகொலை செய்யப்பட்ட பல தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் மே 17 2009ல் பதிவிடப்பட்ட இப்பதிவை மீண்டும் மீள்பதிவிடுகிறோம்.

._._._._._.

May 17 2009

நேரம் நெருக்குகின்றது! புலிகள் யாரிடம் சரணடைவது?

புலிகளின் ‘பிளக் சற்றடே’ ஆக அமைந்த நேற்றைய தினம் (மே 16 2009) எல்ரிரிஈ இன் பிளக் சற்றடே – Black Saturday : இந்தியா தேர்தல் முடிவு : த ஜெயபாலன், முதல் பல்வேறுபட்ட ஊர்ஜிதமற்ற செய்திகள் பரவலாக வெளிவருகின்றன. புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் வெளியிட்ட வேண்டுகோளுக்கு அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகம் இதுவரை சாதகமான சமிஞைகள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை எனத் தெரிகிறது. புலிகளின் சர்வதேச இணைப்பாளரின் வேண்டுகோள் வன்னியில் உள்ள தலைமைத்துவத்துடன் தொடர்பு கொண்டு வெளியிடப்பட்ட வேண்டுகோள் என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே இவ்வாறான முயற்சிக்கு இந்திய சம்மதித்திருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இறுதி நேரத் திருப்பங்களில் மிகுந்த நம்பிக்கையுடைய புலிகள் அவ்வாறான திருப்பத்திற்கு காத்திருப்பதாகவே நம்பப்படுகிறது.

நேற்றைய இந்தியத் தேர்தல் முடிவுகளால் மிகுந்த ஏமாற்றமடைந்த புலிகள் தங்கள் தோல்வியை ஏதோ ஒரு வகையில் தங்கள் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் கடைசி முயற்சிகளில் இறங்கி உள்ளனர். அதன் இறுதி நடவடிக்கையாகவே ஒபாமா நிர்வாகத்திற்கு புலிகளின் சர்வதேச இணைப்பாளர் விடுத்த வேண்டுகோள் அமைந்து உள்ளது. இலங்கை இராணுவத்திடம் புலிகளின் தலைமை சரணடைவது அவர்களுடைய கடந்த மூன்று தசாப்த போராட்டத்தையும் அர்த்மற்றதாக்கி அவர்களது வரலாறும் களங்கப்பட்டுவிடம் என்பதை சரியாகவே உணர்ந்து உள்ளனர். அதனால் இலங்கை இராணுவத்திடம் சரணடையாமல் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்திடம் சரணடைவதன் மூலம் தங்கள் முகத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும் எனக் கருதுகிறார்கள்.

ஆனால் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் தனது வேண்டுகோளை இந்தியாவை நோக்கி விடுத்து இருந்தால் இந்த யுத்தத்தைப் பின்னணியில் இருந்து நடாத்தும் இந்தியா அதற்கு சம்மதிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆனால் பிராந்திய வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த முயலும் இந்தியா தனது கொல்லைப்புறத்தில் அமெரிக்க யுத்தக் கப்பல் வந்து அதனிடம் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவதை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. புலிகளுக்கு இந்தியாவிடம் சரணடைவதில் உள்ள முக்கிய பிரச்சினை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் பொட்டம்மானுக்கும் இந்தியா விதிதத்து உள்ள பிடியாணை. இவ்விருவரும் இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பகுதியினுள் இருந்தால் இந்தியாவிடம் சரணடையும் முடிவை எடுத்திருக்க இயலாது. அவ்வாறு சரணடைந்து இந்தியாவை அரசியல் சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ள வைக்கும் அரசியல் வல்லமை புலிகளிடம் இல்லை. அவர்களிடம் உள்ள முரட்டுத்தனமான ஈகோ அவர்களது உயிருக்கும் ஆபத்தாகி உள்ளது.

இன்று (மே 17 2009) அதிகாலை முள்ளிவாய்க்கால் களமுனையில் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு தப்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பாரிய தாக்குதலில் நூற்றுக் கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும் அச்செய்தி தெரிவிக்கின்றது. இத்தாக்குதல் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆளில்லாத விமானங்கள் தாள்வாகப் பறந்து வேவு பார்த்ததில் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்ட பகுதியினுள் இருப்பதாகவே இராணுவம் நம்புவதாக உறுதிப்படுத்த முடியாத மற்றுமொரு செய்தி தெரிவிக்கின்றது.

இன்றைய தாக்குதலைத் தொடர்ந்து இராணுவம் சுற்றுவளைக்கப்பட்ட பகுதி தொடர்பாக இறுதியான சில முடிவுகளை எடுக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. ஏற்கனவே இராணுவம் தற்போது சுற்றி வளைக்கப்பட்ட பகுதியில் இருந்து கடந்த 72 மணித்தியாலங்களில் 50 000 மக்கள் வெளியேறி உள்ளதாகவும் அப்பகுதியில் பொது மக்கள் இல்லை எனவும் தெரிவித்து உள்ளது. பொது மக்கள் அங்கு உள்ளார்களா? அல்லது அனைவரும் வெளியேறிவிட்டார்களா? என்பதனை சுயாதீனமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் பொதுமக்கள் யாவரும் வெளியேறிவிட்டார்கள் என்று இராணுவம் கூறி இருப்பது கடுமையான இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இராணுவம் தயாராகலாம் என்பதையே வெளிப்படுத்துகிறது.

இராணுவம் புலிகளின் தலைமையை உயிருடன் கைது செய்வதையோ அல்லது அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து தங்களிடம் சரணடைவதையோ பெரும்பாலும் விரும்புகின்றது. வெளியேறி வருகின்ற மக்களுக்கும் இடப்பெயர்வு முகாம்களுக்குமே சர்வதேச பொது ஸ்தாபனங்களை அனுமதிக்காத இலங்கை அரசு புலிகள் ஆயுதங்களை அமெரிக்காவிடமோ அல்லது சர்வதேச அமைப்பு ஒன்றிடமோ ஒப்படைக்க அவ்வளவு இலகுவாக சம்மதித்து விடாது. அதற்கான நெருக்குதல்களே பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுணின் ‘பின் விளைவுகளை இலங்கை சந்திக்க நேரும்’ என்பது போன்ற அச்சுறுத்தல்கள். இது சர்வதேச அமைப்புகள் மூலமும் இலங்கை அரசுக்கு எதிராக முன்வைக்கப்படலாம்.

ஆனால் மீண்டும் இந்தியாவின் பாத்திரம் இதில் மிகவும் முக்கியமானது. இந்தியா புலிகளை தன்னை நோக்கி மண்டியிட முயற்சிக்கும் என்றே நம்பலாம். அதனால் இலங்கை அமெரிக்காவினதும் சர்வதேசத்தினதும் அழுத்தங்களுக்கு பணியாமல் இருப்பதற்கு இலங்கைக்கு பக்க பலமாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளது.

2002ல் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் இந்தியா உங்களுக்கு பிடியாணை பிறப்பித்து உள்ளது பற்றி புலிகளின் தலைவர் வே பிரபாகரனை நோக்கி கேட்கப்பட்ட கேள்விக்கு பிரபாகரன் அப்போது மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்துக்கூடாகக் கூறியது, ‘அண்ணை நடக்கிறதை கதைக்கச் சொல்லுங்கோ’ என்ற வகையில் பதிலளித்திருந்தார்.

ஆனால் புலிகள் அடுக்கடுக்காக விட்ட அரசியல் தவறுகள் இன்று அவர்களது மரணம் வரை அவர்களைத் துரத்துகின்றது. ‘அரசன் அன்று கொல்வான். இந்தியா நின்று கொல்லும்.’ என்பது பொருத்தமாகிவிட்டது.

இலங்கை அரசாங்கம் சரணடையும் தருவாயில் உள்ள புலிகள் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதோ அல்லது அப்பகுதி மீது விமானத் தாக்குதல் நடத்துவதோ மற்றுமொரு மனித அவலத்தை உருவாக்கும். மேலும் அது சர்வதேச யுத்த விதிகளை மீறுவதாக அமையும். ஆகவே இந்த யுத்தத்தை மனிதாபிமான நோக்கில் சர்வதேச யுத்த விதிகளுக்கு அமைவாக முடிவுக்கு கொண்டுவருவதே பொருத்தமானது. இராணுவத்தரப்பில் மக்கள் அங்கில்லை என்று கூறப்பட்டாலும் அது சுயாதீனமாக ஒறுதிப்பட்ட ஒன்றல்ல. அப்பகுதி மீது தாக்குதல் நடத்துவது மற்றுமொரு மனித அவலத்தை ஏற்படுத்தும்.

இன்று புலிகள் முற்றாக முடக்கப்பட்ட நிலையில் வெறும் தற்காப்பு நடவடிக்கைகளையே அவர்கள் மேற்கொண்டு உள்ளனர். அதனால் அரசு வலிந்து தாக்குதல் நடத்தி மனித அவலத்தை ஏற்படுத்துவது அவர்கள் புலிகளாக இருந்தாலுமே பாரிய மனிதவிரோதச் செயலாகும். சுற்றி வளைக்கப்பட்டு உள்ள புலிகள் மனிதாபிமான முறையில் கௌரவமாக சரணடைவதற்கான வழிகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பதே நீண்டகால நோக்கில் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வென்றெடுப்பதற்கு வழியை ஏற்படுத்தும்.

அவர்கள் புலிகளாக இருந்தாலும் அவர்கள் போராடுவதற்கான சூழலை இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இனவாத அரசுகளே ஏற்படுத்தின. அவர்களது போராட்டமுறை பயங்கரமானதாக இருந்துள்ளது. இன்று அவர்கள் இராணுவ பலம் கொண்டு அடக்கப்பட்டு உள்ளனர். அதற்கு மேல் அவர்களைக் கொன்றொழிப்பதை எந்தத் தமிழனும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஒவ்வொரு புலியும் ஒவ்வொரு தமிழ் தாயுடைய பிள்ளைகள் சகோதரர்கள். அவர்கள் பிரதான சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பது சட்ட பூர்வமான அரசினுடைய முதற்கடமை.

தமிழ் மக்களை அரசின் மீது நம்பிக்கைகொள்ள வைப்பதற்கான மிக முக்கிய காலகட்டம் இது. சுமுகமான அரசியல் தீர்வை ஏற்படுத்தி அனைவரும் இலங்கையர் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்கும் நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லவும் உள்ள முதல் நிபந்தனை இன்று சுற்றிவளைக்கப்பட்டு உள்ள புலிகளை கௌரவமான முறையில் சரணடைய ஏற்பாடு செய்து அவர்களையும் வன்னி முகாம்களில் உள்ள மக்களையும் கௌரவமாக வாழ்வதற்கான வழியை ஏற்படுத்துவது.

இதனைவிடுத்து அவசர அவசரமாக இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு அவர்களை அழிப்பது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த வன்மத்தை ஏற்படுத்தும்.  மேலும் ஏற்கனவே எல்லைப்புறக் கிராமங்களில் பதுங்கி உள்ள புலிகள் சிங்களக் கிராமங்கள் மீதும் தாக்குதளை மேற்கொள்ளும் அபாயம் உள்ளது. இது 1983யை மீண்டும் நிகழ்த்த வழிககுக்கலாம்.

என்னதான் புலிகள் மக்களைக் கேடயங்களாக பயன்படுத்தி இருந்தாலும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு இருந்தாலும் அவர்களை அழிக்க முற்படுவது அரச பயங்கரவாதமாகவே அமையும். ஏற்கனவே ஏற்பட்ட மனித அவலங்களுக்கு அரச படைகளும் சம பொறுப்புடையவர்கள். இன்று அரசு இராணுவ நகர்வில் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதால் மற்றுமொரு மனித அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொறுப்பு அரசினுடையது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • thurai
    thurai

    தமிழ் மக்களினதும், புலியின் போராளிகளினதும் உயிர்களை புலியின் தலைமை ஒரு போதும் பெரிதுபடுத்தவுமில்லை,பாதுகாக்கவுமில்லை. இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் புலியின் புலத்து முகவர்கள். தமிழரை சிங்கள்வர்களிற்கு பகைவராக்குவதன் மூலமே புலிக்கு ஆதரவை தேடியவர்கள்.

    இவர்களின் இத்தகைய குறுகிய மன்ப்பான்மையே இன்று தமிழரின் பிரச்சினைகளை உலகத்தின் கண்களிற்கு மறைக்கின்றது. ஆயிரக்கண்க்கில் வீதியில் இறங்கி கூச்சல் போடு முன் விட்ட தவறுகளை திரும்மிப் பார்க்காவிட்டால் எந்த பயனும் வரப்போவதில்லை.

    புலியைச் சரணடைய்ச் சொல்லியிருக்க வேண்டியவர்கள் புலத்து புலியின் முகவர்கள். இவர்கள் முன்கூட்டியே சிந்தித்து செயற்பட்டிருந்தால் புலிகழும் தப்பியிருக்கும், வன்னித் தமிழரும் தப்பிருப்பார்கள்.

    துரை

    Reply
  • kosompo
    kosompo

    புலிகள் சரணடைவார்கள். சிலருக்கு கரணா தயாமாஸ்டர் போல் மந்திரப்பதவியும் கிடைக்கும் ஊராவீட்டுப்பிள்ளைகள் தான் சயனைட் கடிப்பர். இதுதான் புலிகளின் தத்துவம்.

    Reply
  • palli.
    palli.

    //புலியைச் சரணடைய்ச் சொல்லியிருக்க வேண்டியவர்கள் புலத்து புலியின் முகவர்கள். இவர்கள் முன்கூட்டியே சிந்தித்து செயற்பட்டிருந்தால் புலிகழும் தப்பியிருக்கும், வன்னித் தமிழரும் தப்பிருப்பார்கள்//
    இதுவே பல்லியின் கருத்தும். ஆனால் இதுவரை ஆயிரகணக்கில் மக்களையும் போராளிகளையும் பலி கொடுத்து விட்டு தலமைகளை காக்க
    எது வேண்டுமானாலும் செய்கிறோம் என KP சொல்லுவது மிக கொடூரமானது. ஆனால் அனைத்து புலிகளும் அழிய வேண்டும் என என்றுமே பல்லி விரும்பியது இல்லை. ஆனால் இவர்கள் சரனடைய வேண்டியவர்களே. அத்துடன் அரசியலில் இருந்து கட்டாய ஓய்வும் இவர்களுக்கு கொடுக்கபட வேண்டும். பாலா இருந்த போது இந்திய உளவுபடை பொட்டர் அல்லது பிரபா ரஜீவன் கொலையை ஏற்று சரன் அடைந்தால் ஈழபிரச்சனை தீர்வுக்கு வர இந்தியா உதவும் என பேசபட்டது. அதை பாலா பிரபாவிடம் பொட்ரை இந்தியாவிடம் கொடுக்கலாமா என கேட்டாராம் அதை ஒரு முறை பாலா வன்னி சென்ற போது பொட்டருக்கு முன்பே பிரபா சொல்லிவிட பொட்டருக்கு பாலாமீது பாசம் வந்து விட்டதாம். அதனால் இறுதி காலங்களில் பாலா வன்னிக்கு போக தடா போடப்பட்டது. இது பின்பு பாலா தனது விசுவாசிகளிடம் புலம்பிய செய்தி. ஆனால் துரை சொன்னது போல் இது நடந்திருந்தால் இந்த நிலை வன்னிக்கு மட்டுமல்ல புலிக்கும் வந்திராதே.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    பிரபாகரனின் பிரத்தியேக வைத்தியரும் , மேலைத் தேசங்களுக்கு தாக்குதல் விபரங்களை கொடுத்த வைத்தியர் ஒருவரும் ஓமந்தையில் வைத்து படையினர் கைது செய்துள்ளனராம்? (உறுதிப்படுத்தப்படவில்லை)

    Reply
  • மாயா
    மாயா

    ஜனாதிபதி மகிந்தவின் பேச்சு செவ்வாய்க் கிழமை இடம் பெறும். பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக ,எதிர்வரும் வெள்ளிக் கிழமையன்று விடுமுறை விடுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.

    புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்ற அமைப்புள்ள இறந்த சிலரது உடல்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இறந்துள்ளவர் பிரபாகரன்தான் என உறுதிப்படுத்துவதற்காக இந்தியாவில் உள்ள DNA தகவல்களைக் கொண்டு வந்து உறுதிப்படுத்த உள்ளதாக தெரியவருகிறது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    துரை, பல்லி மற்றும் றோகன் போன்றோரின் கடைக்கண் பார்வைக்கும்.

    புலிகளோ புலன் பெயர்ந்த புலிப்பினாமிகளோ என்றும் மக்கள் நலன் சார்ந்து சிந்தித்ததுமில்லை சிந்திக்கப் போவதுமில்லை. இப்போது கூட புலிகள் தங்களை எப்படிக் காப்பாற்றலாமென்ற சிந்தனையிலேயே கோரிக்கைகளாக ஒவ்வொரு பெயரில் காற்றில் உலா வருகின்றன. தன் குடும்பம் மற்றும் தன் மைத்துனி குடும்பத்தை பத்திரமாக பல இலட்சம் பணத்துடனும் கிலோக்கணக்கில் நகைகளுடனும் அனுப்பி விட்ட சூசையின் சிந்தனையில் 0.1 வீதம் கூட அந்த அப்பாவி மக்களைப் பற்றிய சிந்தனை வரவில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல புலித்தலைமைகளின் சிந்தனைக்கு இது ஒரு உதாரணம்…..

    Reply
  • palli.
    palli.

    பார்த்திபன் என்னால் முடியாது என புலிகள் சொல்லிய பின்னும். அவர்களால் முடியவே முடியாது என நாம் உனர்ந்த பின்னும் அவர்களை தொடர்ந்தும் தாக்குவது தேவையா? ஆகவேதான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசிக்கிறோம். அடுத்து யாரும் புலியாகவோ அல்லது புழியாகவோ வந்துவிட கூடாது. அதுக்கு எமது எழுத்தும் சிறிதேனும் உதவ வேண்டும். பார்த்திபன், கழகத்தினர் 1986ம் ஆண்டென நினைக்கிறேன் ஒரு அறிக்கை விட்டார்கள். தாம்(கழகம்) தற்காலிகமாக ராணுவ நடவெடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக. ஆனால் இன்று 25 ஆண்டுகள் ஆகியும் அவர்கள் ஆயுத போராட்டம் தொடங்கவில்லை. அதேபோல் தற்போது KP தற்காலிக ஆயுத கீழே போடுதல் செய்துள்ளார். இது புலியால் ராணுவதுடன் இறுதி போர் செய்ய முடியாத காரனத்லும். தொடர்ந்தும் புலம் பெயர் தமிழரிடமும் நிதி சேகரிக்கவும் KP தெளிவான திட்டம் போட்டுள்ளார். புலம் பெயர் புலிகளின் தலைவராக இவர் இருக்க போவது தெரிகிறது. அன்று கழகத்தினர் சகோதர படுகொலை வேண்டாம். தமிழர் அழிவு வேண்டாம் என ஆயுதத்தை கை விட்டனர். இவர்களோ மக்கள் அழிந்த பின் தமது தலமைகளை பாதுகாக்க ஆயுதம் கிழே போடபடுகிறது.

    உன்மையான விடுதலைக்கு புறப்பட்ட பலர் புலம்பெயர் நாட்டில் எதையெல்லாமோ கழுவுகிறார்கள். தறுதலையாய் விடுதலைக்கு புறப்படதுகள் ஈழத்தை போராட்ட வடிவில் குட்டிசுவராக்கி விட்டனர். (இது புலிக்கு மட்டுமல்ல 37 அமைப்புக்கும்)

    Reply
  • valluvan
    valluvan

    சரணடைவதற்கு அல்லது தற்கொலை செய்வதற்கு முன்னர் சுந்தரம் பற்குணமீறாக செய்த படு கொலைகளுக்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்ளவாரானால் இருக்கிற சனமாவது கொஞ்சம் திருந்துவதற்கு வாய்ப்பாக அமையும்.

    Reply
  • santhanam
    santhanam

    பல்லி பல்லியாக வாழவேண்டும் என்பது எனது விருப்பம் உமது கருத்துகளில் கனமுள்ளது உம்மால் சிலரை திருத்தமுடியும் புலியின் மறுமுகத்தை திறக்கவும். சமூகநலன்கருதி புலத்து புண்ணாக்குகளிற்கும்.

    Reply
  • மாயா
    மாயா

    பல்லி எங்கே?

    Reply
  • பல்லி
    பல்லி

    //பல்லி பல்லியாக வாழவேண்டும் என்பது எனது விருப்பம் //
    அதுவே எனது விருப்பமும்; ஆனால் சந்தானம் நீங்கள் ஒரு வருடத்துக்கு முன்பு எழுதிய கருத்துக்கு இப்போது கருத்து எழுதுவதால் இதில் ஏதோ விடயம் இருக்கிறது புரிகிறது, ஆனால் பயமாகவும் உள்ளது, ஆனால் காலத்துக்கு காலம் கருத்துகள் மாறும் என்பது உன்மைதானே, உதாரனத்துக்கு மகிந்தாவை ஆட்சி பீடம் ஏற்றிய புலிகளே இன்று மகிந்தாவை தூக்கி போட்டு மிரிக்க சர்வதெசம் உதவவேண்டும் என தெரு தெருவாய் அலைகிறார்கள்; ஆனாலும் புலிகள் சரன் அடைய வேண்டும்; ஆம் அவர்கள் தமிழ்மக்களிடம் சரன் அடைந்து தாமும் தம்முடைய பினாமிகளும் செய்த திருவிளையாடல்களை சொல்லவேண்டும்; அப்போதும் புலிகள் காப்பாற்ற படுவார்களோ (தவறிய) தெரியவில்லை; ஆனால் தமிழ் மக்கள் தம்மை தாமே புரிந்து கொள்ள இது ஒரு முதல் உதவியாக இருக்கும்; இதுவே புலத்து புலிகளுக்கு ஒரு முள்ளி வாய்க்காலாக அமையும் சந்தானம்;
    நட்புடன் பல்லி,

    Reply