எப்படி முடியும் இந்த யுத்தம்!!! : த ஜெயபாலன்

Erik_Solheim & Pirabaharan_V”தமிழ் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தம்மிடம் மிகத் தெளிவாகத் தெரிவித்து உள்ளனர்”  என நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ரொய்டர் செய்தி ஸ்தாபனத்திற்குத் தெரிவித்து உள்ளார். சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்க தயார் என்ற எல்ரிரிஈ இன் இறுதி வேண்டுகோளை இலங்கை அரசு ஏற்க மறுத்துள்ளது. எல்ரிரிஈ ஆயுதங்களை மூன்றாம் தரப்பிடம் கையளிக்க அனுமதிக்க மாட்டாது என்பதை இலங்கை அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று (மே 18 2009) அதிகாலை எல்ரிரிஈ வசம் உள்ள 250 சதுர மீற்றருக்கும் குறைவான நிலப்பரப்பிற்குள் இராணுவம் ஊடுருவ ஆரம்பித்து உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

இலங்கையின் யுத்தம் தொடர்பாக ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றது. உத்தியோக பூர்வமான அறிக்கைகளே மிகுந்த குழப்பத்துடன் வெளியிடப்பட்டு வருகிறது. அதற்கு அப்பால் இன்னும் பல ஊகங்களும் செய்திகளாகின்றன. எல்ரிரிஈ தலைவர் வே பிரபாகரன் எங்கே என்பது பல்வேறு ஊகங்களுக்கும் வதந்திகளுக்குமான பேசுபொருளாகி உள்ளது.
நேற்று (மே 17 2009) மதியம் குறிப்பிடப்படாத ஒரு பகுதியில் இருந்து எல்ரிரிஈ இன் சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தொலைபேசியூடாக செவ்வி ஒன்றை வழங்கி இருந்தார். இச்செவ்வி அமெரிக்க செய்தி நிறுவனமான சிஎன்என் தொலைக்காட்சியிலும் பிரித்தானிய செய்தி நிறுவனமான சனல் 4 இலும் காண்பிக்கப்பட்டது. அதில் எல்ரிரிஈ இன் தலைவர் வே பிரபாகரன் இன்னமும் இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்ட பகுதியிலேயே இருப்பதாகவும் அவர் ஆயுதங்களைக் கீழே போடத் தாயாராக இருப்பதாகவும் ஆனால் சரணடையப் போவதில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

”தமிழ் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தம்மிடம் மிகத் தெளிவாகத் தெரிவித்து உள்ளனர்” என இச்செவ்வி வெளியானதன் பிற்பாடு நேற்று (மே 17 2009) மாலை நோர்வே அபிவிருத்தி மற்றும் உதவி நிவாரண அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் ரொய்டர் செய்திஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார். நேற்று தமிழ் புலிகளுடன் உடன் தான் பல தடவைகள் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்து உள்ள எரிக் சொல்ஹெய்ம் அந்தப் பகுதிகளுக்குச் சென்று சுயாதீனமாக நிலைமைகளை ஆராய்வதும் காயப்பட்டவர்களை மீட்பதுமே இப்போதுள்ள முக்கிய விடயம் எனத் தெரிவித்து உள்ளார்.

எல்ரிரிஈ இன் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் செவ்வியில் குறிப்பிட்ட விடயங்களின் சாரம்:
”எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே வைக்கவும் சமாதான செயன்முறையில் ஈடுபடவும் தயாராக உள்ளது. முல்லைத்தீவுப் பகுதியில் எங்களிடம் இரண்டாயிரம் போராளிகள் உள்ளனர். நாங்கள் யுத்தத்தை நிறுத்துவதற்குத் உடன்பட்டு உள்ளோம். ஒவ்வொரு மணித்தியாலமும் நூறு பேர்வரை கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேற்றிலிருந்து இதுவரை மூவாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 25000 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இவர்கள் பொதுமக்கள்.

யுத்த நிறுத்தத்திற்கு பிரபாகரன் உடன்பட்டு உள்ளார். நான் அவருடன் நான்கு மணிநேரம் உரையாடினேன். அதில் நாங்கள் அதற்கு உடன்பட்டோம். நாங்கள் இந்தச் செய்தியை இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரிவித்திருந்தோம். ஆனால் ஒருவரும் பதில் தரவில்லை. யுத்தமும் நிறுத்தப்படவில்லை.

பிரபாகரன் இன்னமும் இந்த யுத்தப் பகுதியிலேயே இருக்கின்றார். சுற்றி வளைக்கப்பட்ட இந்தப் பகுதியில் இருக்கும் போதே நான் அவருடன் கதைத்தேன். நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடவே உடன்பட்டோம். சரணடையவல்ல.

நாங்கள் பொதுமக்களை ஒரு போதும் அழைத்துச் செல்லவில்லை. அந்தப் பொது மக்கள் எங்களுடைய உறவுகள் அல்லது எங்களது குடும்பங்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் தங்களுடைய பாதுகாப்பிற்கு இலங்கை இராணுவத்தை நம்பவில்லை. அதனால் அவர்கள் எங்களுடனேயே இருந்தனர். அவர்கள் முகாம்களுக்கு செல்ல விரும்பவில்லை. இந்த முகாம்களில் சித்திரவதைகள் இடம்பெறுகிறது. பல துன்புறுத்தல்கள் இடம்பெறுகிறது. அந்த மக்கள் இலங்கை இராணுவத்திடம் செல்ல விரும்பவில்லை என்பதே நிச்சயமானது. நாங்கள் ஒரு போதும் மக்களைச் சுடவில்லை. சில சமயங்களில் இருபகுதிக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிலர் காயப்பட்டு இருக்கலாம். நாங்கள் ஏன் எங்களது மக்களைக் கொல்ல வேண்டும்.”

எல்ரிரிஈ இன் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதனுக்கு முன்னதாக கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நேற்று (மே 17 2009) ஊடகங்களுக்காக தொலைபேசியில் வெளியிட்ட வேண்டுகோளில் ”நாம் படையினருடன் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். இறுதி வரையில் நாம் அடிபணியப் போவதில்லை.” எனத் தெரிவித்து இருந்தார்.

ஆனாலும் இந்தியத் தேர்தல் முடிவுகள் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பது உறுதியானதும் மே 16 2009ல் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் செல்வராஜா பத்மநாதன் ”எதுவும் செய்யத் தயார்” எனத் தெரிவித்து இருந்தார். அது ஆயுதங்களை ஒப்படைப்பது என்பதை மிகத் தெளிவாக நேற்று (மே 17 2009) புலிகள் அறிவித்து உள்ளனர். ”இந்த மோதல் ஒரு கசப்பான முடிவுக்கு வந்துள்ளது” என்று இந்த யுத்தத்தில் தங்கள் தோல்வியை எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அறிவித்தார். ‘நாங்கள் ஆயுதங்களை மௌனமாக்க முடிவு செய்துள்ளோம். உயிரிந்தவர்களுக்காக மட்டும் நாங்கள் வேதனை அடைகின்றோம். இதற்கு மேல் எங்களால் நிற்க முடியவில்லை.’ என்றும் அவர் தெரிவித்தார்.

இன்னமும் சுற்றி வளைக்கப்பட்ட சிறு நிலப்பரப்பொன்றினுள் புலிகள் உள்ளனர். அவர்களின் தலைமை அங்குள்ளனரா அல்லது வெளியேறி விட்டனரா என்பது இன்னமும் விடைகாணப்படாத வினாவாகவே உள்ளது.

மேலும் பெரும் தொகையான காயப்பட்டோர் அங்குள்ள பதுங்கு குழிகளில் இருக்கலாம் எனவும் அவர்கள் மிகக் கடினமான ஒரு உயிர்ப் போராட்டத்தில் உள்ளதாகவும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த 72 மணிநேரத்தில் 70 000 பேர்வரை அப்பகுதியில் இருந்து வெளியேறி உள்ளதாக இராணுவச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் வெளியேறியவர்கள், காயப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் என வெளியிடப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை சர்வதேச அமைப்புகள் உறுதிப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளன. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறும் பகுதிகளுக்கு அரசு மனிதாபிமான அமைப்புகளை அனுமதிக்காமல் நிலைமையை மேலும் மேலும் மோசமாக்கி வருகின்றது.

ஏற்கனவே வெளியேறிய 200 000 வரையான மக்கள் 20க்கும் உட்பட்ட முகாம்களில் நெருக்கடியில் உள்ள நிலையில் மேலும் 70 000 வரையானோர் அம்முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இது முகாம்களில் மிகுந்த நெருக்கடி நிலையை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மூன்றாம் தரப்பிடம் சரணடைவதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை அரசு ஏற்படுத்திக் கொடுக்காததனால் இலங்கை இராணுவத்திடம் சரணடைய மறுக்கும் புலிகள் பலர் தற்கொலை செய்து கொள்ளுவார்கள் என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. அண்மைய நாட்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் வேதனையுடன் கழிகின்றது. இவ்வாறான ஒரு கசப்பான மிக வேதனையான சூழலுக்குள் தமிழ் சமூகம் தள்ளப்பட்டு உள்ளது.

தமிழ் – சிங்கள அரசியல் தலைமைகளின் தான்தோண்றித் தனமான முடிவுகளுக்கும் குறுகிய அரசியல் லாபங்களுக்கும் மிகப் பாரிய விலையை இலங்கைச் சமூகம் கொடுத்து உள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட மனிதப் பேரவலம் சர்வதேசத்தையும் தொட்டுள்ளது. மறுமுனையில் இந்த யுத்தத்தில் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்புகளை அரசு வெற்றிகரமாக மூடி மறைத்து உள்ளது. இந்த யுத்தம் உள்ளத்திலும் உடலிலும் ஏற்படுத்திய ரணங்கள் அவ்வளவு இலகுவில் மாறிவிடாது.

இந்த கால்நூற்றாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று தெற்கில் கொண்டாடப்படுவது குறைநிலையானது. எல்ரிரிஈ மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதனாலேயே அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளனர். அதற்கான வாய்ப்பினை வழங்க அரசு தவறும்பட்சத்தில் புலிகள் மீளவும் தங்களைக் கட்டமைத்து தாக்குதல்களை நடத்தக் கூடிய வலுவுடையவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. பல நூற்றுக்கணக்கான புலிகள் ஏற்கனவே யுத்தப் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். அவர்களால் ஒரு மரபுரீதியான இராணுவமாக இயங்க முடியாமலிருக்கலாம். ஆனால் இன்னும் சில மாதங்களில் ஒரு இராணுவ முகாமை தாக்கி அழித்துவிட்டுச் செல்லும் பலம் அவர்களிடம் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. மேலும் அவர்களுடைய சர்வதேச வலைப்பின்னலில் எவ்வித குழப்பமும் இல்லை. இந்நிலையில் அவர்களையும் உள்ளகப்படுத்திய ஒரு அரசியல் தீர்விற்கு இலங்கை அரசு செல்வதன் மூலம் நிரந்தரமான ஒரு சமாதானத்தை நோக்கி இலங்கையை நகர்த்த முடியும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • thurai
    thurai

    யுத்தம் எப்போ முடியும் எனற கேள்வியை விட யுத்தத்தை நடத்தும் புலத்துத் தமிழர் எப்போது ஓய்வார்கள் என்பதே கேள்வியாகும்.

    புலிகளிற்கு பிரபாகரனே தனித்தலைவனென்பதும் புலிகளே தமிழர்களின் தலைமைத்துவம் என்பதுமே புலிகள் பயங்கரவாதிகளாக்கப்பட்டதற்கு முக்கிய காரணம்.

    இதனைப் புரியாத புலத்துத் தமிழர் புலிகளை ஆதரித்து தமிழரின் உருமையைக் காக்க புலத்தில் போராடுவ்தை யாரும் ஏற்கப்போவதில்லை.

    இவகள் இவ்வாறு தொடர்ந்து செயற்பட்டால் போரை விரும்பி, தமிழரின் அழிவில் வாழ்வை நடத்துவோராகவே இவர்கள் கருதப்படுவார்கள்.

    துரை

    Reply