மட்டக் களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரதேசத்தில் விடுதலைப் புலி உறுப்பினர் என சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதாகி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் நேற்று நண்பகல் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லபட்டுள்ளார்.
களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த கீர்த்தி எனப்படும் 27 வயதான ஐயாத்துரை கணேசமூர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ள இந்நபர் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிஸ்டல் குழுவின் தலைவர் என தங்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஏப்ரில் மாதம் 8 ஆம் திகதி தங்களால் கைது செய்யப்பட்ட இந்நபர் கொடுத்த தகவலையடுத்து விமானம் தாக்கும் துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக்குண்டுகள் உட்பட பல வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சவுக்கடி மயானத்தில் ஆயுதங்கள் புதைக்கப்படடிருந்த இடத்தை அடையாளம் காட்டுவதற்காக நேற்று நண்பகல் இந்நபர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும்,
அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் மூலம் பொலிஸாரை தாக்க முற்பட்ட வேளை மேற்கொள்ளப்பட்ட பதில் நடவடிக்கையிலேயே இவர் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.பொலிஸ் தகவல்களின் படி அந்த இடத்தில் ரி 56 ரக துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகள் சில கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதிபதி வினோபா இந்திரன் மரண விசாரணையின் நிமித்தம் சடலத்தையும் சம்பவம் நடந்த இடத்தையும் நேரில் பார்வையிட்டார்.பிரேத பரிசோதனையின் பின்பு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்