தீவிர வாதத்தின் பிடியிலிருந்து முழு நாடும் விடுவிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்ததையடுத்து நாடு பூராவும் மக்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு கொளுத்தி, தேசியக் கொடிகளை ஏந்தி அசைத்த வண்ணம் தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.
சுமார் மூன்று தசாப்த காலம் இந்நாடும், இந்நாட்டு மக்களும் தீவிரவாதத்தின் பிடியில் சிக்குண்டு அனுபவித்த துன்பங்களும், துயரங்களும் சொல்லும் தரமற்றவை. அழிவுகளும், இழப்புக்களும், சேதங்களும் கொஞ்சநஞ்சமல்ல.
இவ்வாறான கோர பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாடும், நாட்டு மக்களும் விடுவிக்கப்பட்டு அவை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதையொட்டியே மக்கள் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு மகிழ்ச்சி ஆரவாரங்களைத் தெரிவித்தனர். நாட்டின் பல பாகங்களிலும் பிரபாகரனின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன.
தீவிரவாதத்தின் பிடியில் சிக்குண்டு துண்டாடப்பட்டிருந்த நாட்டையும் நாட்டு மக்களையும் விடுவித்து, நாட்டை ஐக்கியப்படுத்தியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும், முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் மக்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், ஆசிகளையும் தெரிவித்தனர். ஜனாதிபதியின் அறிவிப்பைத் தொடர்ந்து அரச மற்றும் தனியார் கட்டடங்களிலும், வர்த்தக நிலையங்களிலும், வீடுகளிலும், வாகனங்களிலும் மக்கள் தேசியக் கொடிகளைப் பறக்கவிட்டனர். வீதிகளில் இறங்கி ஆடி, பாடி மகிழ்ந்தனர். நகரங்களில் மகிழ்ச்சி ஊர்வலங்களில் ஈடுபட்டனர்.
இதேவேளை நாட்டின் பல பிரதேசங்களில் ‘ரபான்’ அடித்தும் மக்கள் தங்கள் மகிழ்ச்சி ஆரவாரங்களை வெளிப்படுத்தினர். பாற்சோறும் வழங்கப்பட்டது.