பிரபாகரனின் ‘கடைசி’ மணிநேரங்கள் – கூறுகிறார் இலங்கை ராணுவ அதிகாரி

Pirabakaran_Vவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ‘கொல்லப்பட்டபோது’ நடந்த சம்பவங்கள் குறித்து இலங்கை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அது இதோ…

பிரபாகரனின் நடமாட்டம், அவர் எங்கு செல்கிறார் என்பது அவரது மனைவி மதிவதனி தவிர மூன்றே மூன்று விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு மட்டும்தான் தெரியுமாம்.

ஒருவர் பொட்டு அம்மான், இன்னொருவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி. மூன்றாவது நபர் புலிகளின் மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் ரீகன்.

சமீபத்தில் டாக்டர் ரீகன் ராணுவத்திடம் சிக்கினார். அவரை பல நாட்கள் கடுமையாக சித்திரவதை செய்து விசாரித்துள்ளனர். முதலில் பிரபாகரன் குறித்து தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் ரீகன். ஆனால் கொடூர சித்திரவதையில் பிரபாகரன் இருப்பிடம் குறித்து கூறி விட்டார் ரீகன்.

இதன் மூலம் 16ம் தேதி நள்ளிரவுவாக்கில்தான் பிரபாகரன் இருப்பிடம் குறித்து ராணுவத்திற்கு தெளிவாகத் தெரிய வந்தது.

மேலும், பிரபாகரன் போட்டு வைத்திருந்த முழுத் திட்டமும் தெரிய வந்தது.

பிரபாகரனின் திட்டம் என்னவென்றால், ராணுவத்தின் 53வது முன்னரங்கு பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு, முல்லைத்தீவு- வெளிஓயா காடுகளுக்குச் செல்வது. பின்னர் அங்கிருந்து திரிகோணமலை வழியாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு அல்லது அம்பாரைக்கு தப்பிச் செல்வது.

ஏற்கனவே அங்கு நிலை கொண்டிருந்த கர்னல் ராம் தலைமையிலான படையினரிடம் தங்களது வருகையை முன்கூட்டியே தெரிவித்து விட்டாராம் பிரபாகரன்.

இதையடுத்து 17ம் தேதி அதிகாலையில் புலிகள் தங்களது கடைசி தாக்குதலைத் தொடங்கினர். கடல் மார்க்கமாக விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவினர் படு துணிச்சலான தாக்குதலை மேற்கொண்டு சென்றனர்.

ஏற்கனவே எச்சரித்து வைக்கப்பட்டிருந்த ராணுவப் பிரிவுகள், விடுதலைப் புலிகளை மடக்க முயன்றன. ஆனால், அதையும் மீறி 53வது பிரிவின் முன்னரங்கு பாதுகாப்பு வளையத்தை புலிகள் உடைத்துக் கொண்டு சென்றனர்.

மேலும் ராணுவத்தின் ஆம்புலன்ஸ் ஒன்றையும் பறித்துக் கொண்ட அவர்கள், 15 ராணுவ வீரர்களையும் சுட்டுக் கொன்றனர்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே ராணுவம் திருப்பித் தாக்கத் தொடங்கியது. சக்தி வாய்ந்த எறிகணை ராக்கெட்டுகளை வீசித் தாக்கியது. இதில் 200 விடுதலைப் புலி வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் 30 பேர் வரை கருகிப் போய் விட்டனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திலேயே மிகச் சிறந்த வீரர்களாக அவர்களின் உடல்கள் அந்தப் பகுதி முழுவதும் சிதறிக் கிடந்தன. விடுதலைப் புலிகள் தப்பிச் சென்ற ஆம்புலன்ஸும் தாக்குதலில் சிக்கி எரிந்து போனது.

பின்னர் ராணுவத்தினர் அந்த ஆம்புலன்ஸை நெருங்கிப் பார்த்தபோது உள்ளே பிரபாகரனைப் போன்ற உடலமைப்புடன் கூடிய உடல் உள்பட 3 உடல்கள் சிக்கின.

பிரபாகரனைப் போன்ற உடலமைப்புடன் கூடிய உடல், கருகிப் போயிருந்தது. முகத்தையோ, உடலையோ அடையாளம் காணவே முடியாத அளவுக்கு அது இருந்தது.

(முதலில் இப்படித்தான் கூறியிருந்தது இலங்கை ராணுவமும், அரசும். அந்த கருகிப் போன உடலை அடையாளம் காண முயன்று வருவதாகவும் அது கூறியிருந்தது.

ஆனால் திடீரென பிரஷ்ஷான முக அமைப்புடன் கூடிய ஒரு உடலைக் காட்டி இதுதான் பிரபாகரன், நந்திக்கடல் கழிமுகப் பகுதியில் இந்தப் பிணம் கிடந்தது என்று இலங்கை அரசும், ராணுவமும் கூறியது நினைவிருக்கலாம்.

முதலில் கருகிப் போய் அடையாளமே தெரியவில்லை என்று கூறிய ராணுவம், பின்னர் புது உடலைக் காட்டியதுதான் ராணுவத்தின் பேச்சை நம்புவதா, இல்லையா என்ற சந்தேகத்தை பலமாக எழுப்பியுள்ளது).

இருந்தாலும், அந்த உடல் பிரபாகரனுடையதாக இருக்கும் என்றே ராணுவம் உறுதியாக நம்பியது. காரணம், பிரபாகரன் தப்பிப் போக வேறு வழியே இல்லை.

சிறப்பு ராணுவப் படையினரால் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அல்லது காயமடைந்து, நந்திக்கடல் கழிமுகப் பகுதியில் போய் அவர் உயிரிழந்திருக்க வேண்டும்.

ஆனால் அவரது உடலை கருகிப் போன ஆம்புலன்ஸிலிருந்துதான் ராணுவம் எடுத்தது.

இந்தத் தாக்குதலின்போது உயிருடன் சிக்கிய விடுதலைப் புலிகள்  சிலரை விசாரித்தபோது, பிரபாகரன் சுடப்பட்டு இறந்ததாக தெரிவித்தனர்.

பிரபாகரன் உள்ளிட்டோரின் கருகிய உடல்களை 53வது பிரிவு வீரர்கள் மீட்டாலும் கூட, உடலை வேறு ஒரு பிரிவினர் வந்து வாங்கிச் சென்று விட்டனர்.

ராணுவம் 400 உடல்களை மீட்டது. உடல்களை மீட்கும் பணியில் 1, 2, மற்றும் 5வது சிறப்புப் படைப் பிரிவினர் ஈடுபட்டனர்.

கொல்லப்பட்ட வீரர்கள் பட்டியலில் முக்கியமான விடுதலைப் புலிகளான லாரன்ஸ், கரிகாலன், பாப்பா, இளந்திரையன் ஆகியோரைக் காணவில்லை.

அதேசமயம், பொட்டு அம்மான், பானு, சூசை ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன.

இவர்களில் சூசையும், சொர்ணமும்தான் இறுதி வரை தீரத்துடன் போராடினார்கள். மற்றவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றபோது இவர்கள் இருவரும் அவ்வாறு செய்ய முயலாமல், ராணுவத்தை எதிர்த்து கடுமையாக சண்டையிட்டனர். இருப்பினும் அவர்கள் இருவரையும் ராணுவ வீரர்கள் கொன்று விட்டனர் என்று அந்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

நன்றி;தட்ஸ் இந்தியா

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Hg
    Hg

    So the Tamil Tigers may be beaten in the audacious military guise they adopted, but Tamil nationalism is not dead, even if it is stunned by the defeat. It will not be surprising if it finds new, and probably violent, ways of expressing itself again within the next couple of years. — The Times

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தட்ஸ்தமிழும் தன் பங்கிற்கு பீலா விடுகின்றது. அதை தேசம்நெற்றும் நம்பி விட்டதா? இதே தட்ஸ்தமிழ் பிரபாகரனின் மனைவி பிள்ளைகள் உடலங்களும் இலங்கை இராணுவம் அடையாளம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளதாக பீலா விட்டுள்ளது.

    மேலும் நேற்றைய பிபிசி செய்தியில் இலங்கை இராணுவத்தளபதி பிரபாகரனைத் தாம் செவ்வாய் அதிகாலையில் தான் சுட்டுக்கொன்றதாக உத்தியோகபூர்வமாய் ஒத்துக் கொண்டுமுள்ளார். இதனை கருணா அம்மானும் உறுதி செய்தார். பின்பு இன்றைய பிபிசி காலைச் செய்தியில் விடுதலைப்புலிகள் சரணடைய வந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்களா என்ற கேள்விக்கு ஐநாவின் துணை பொதுச்செயலர் ஜான் ஹோல்ம்ஸ் அவர்கள் அளித்த பதில்கள்:

    தமிழோசை: விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், சமாதானச் செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன் உள்ளிட்டோர் இராணுவத்திடம் சரணடையும் நோக்கில் வெள்ளைக் கொடியை ஏந்தியபடி வந்தபோது, அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சில செய்திகள் உலவுகின்றன. சரணடைவது தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கும் ஐ நா உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா.

    ஜான் ஹோல்ம்ஸ்: பல்வேறு இடங்களில் இது போன்ற தகவல் வந்துள்ளது என்பதை நான் அறிவேன். நாங்கள் அவற்றை பகிர்ந்து கொண்டோம். என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை.சரண் அடைவது என்பது அவர்களது கோட்பாட்டிற்கு மாறானது என்பதால், அவர்களது தரப்பே அவர்களை சுட்டு கொன்று விட்டது என்று கூறப்படுகிறது, இதற்கு எதிர் மாறாகவும் கூறப்படுகிறது. எதையும் எங்களால் உறுதி செய்ய முடியாமல் இருக்கிறது, இவை அனைத்துமே கடைசி நேரத்தில் நடந்துள்ளதால் எதுவும் சொல்ல முடியாமல் இருக்கிறது.

    தமிழோசை: ஆனால் அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் என்ன செய்ய முன்வந்தார்கள் என்பது குறித்து உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா

    ஜான் ஹோல்ம்ஸ்: என்னால் விபரமாக கூற முடியாது. விடுதலைப்புலிகளிடம் இருந்து நேரடியாக நான் கேட்கவில்லை. ஆனால் அவர்கள் திங்கட்கிழமை மூன்றாம் தரப்பிடம் சரணடைய தயாராக இருப்பதாக ஒரு சிலர் சொன்னார்கள், கடைசி நேரத்தில் சொன்னார்கள். அது மிகவும் காலம் தாழ்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு பின்னர் என்ன நடந்தது என்பதை என்னால் சொல்ல முடியாது.

    தமிழோசை: விடுதலைப்புலிகள் சரணடைய முன் வந்தது குறித்து ஐநா இலங்கை அரசு மற்றும் புலிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதா.

    ஜான் ஹோல்ம்ஸ்: அப்படியான ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை. அந்த கோணத்தில் பேச்சுவார்த்தை நடந்ததாக நாங்கள் அறியவில்லை. சரண் அடைந்தால் தீங்கு நேராது என்று பொதுவாக அரசாங்கம் சொல்லி இருந்ததாக நாங்கள் அறிகிறோம்.

    நன்றி பிபிசி தமிழோசை

    Reply