புதிய அரசு அமைக்குமாறு மன்மோகன் சிங்கிற்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்முறைப்படி அழைப்பு விடுத்தார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றன. இதையடுத்து புதிய ஆட்சி அமைக்கும் பணியில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மாலை ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை, ராஷ்டிரபதி பவனில் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் நேரில் சந்தித்து ஆட்சியமைக்க அழைக்குமாறு கேட்டுக்கொண்டனர். தனிப்பெரும் கட்சியாகவும், தனிப்பெரும்பான்மை பெற்ற கூட்டணியாகவும் உள்ள தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தங்களது அரசுக்கு ஆதரவளிக்கும் 322 எம்.பி.,க்கள் பட்டியலையும் அவர்கள் அப்போது ஜனாதிபதியிடம் வழங்கினர்.
இதையடுத்து, மன்மோகன் சிங்கை அரசு அமைக்க அழைக்கும் கடிதத்தை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், மன்மோகன் சிங்கிடம் வழங்கினார். இதை ராஷ்டிரபதி பவனில் கூடியிருந்த செய்தியாளர்களிடம் மன்மோகன் சிங் தெரிவித்தார். அதன்படி, மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சி மற்றும் பெரும்பான்மை பெற்ற தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்ற முறையிலும் ஆட்சியமைக்க வருமாறு அழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.