கல்முனை மாநகரசபை உருவாகியதையடுத்து, கடந்த 3 வருடங்களில் தமிழ், முஸ்லிம் நல்லுறவு மேலோங்கி வருகின்றது. இந்த நிலைமையை மாநகரசபையின் செயற்பாடுகள் மூலம் மேலும் கட்டிவளர்க்க வேண்டும். இவ்வாறு கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வில் உரையாற்றிய தமிழரசுக் கட்சி உறுப்பினர் அ.அமிர்தலிங்கம் கூறினார். மாநகர முதல்வர் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் சபா மண்டபத்தில் அமர்வு நடைபெற்றது. உறுப்பினர் அமிர்தலிங்கம் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
” இந்த மண்ணில் பல நூற்றாண்டுகளாக தமிழ், முஸ்லிம் மக்கள் இன ஒற்றுமையுடனும் அந்நியோன்னியத்துடனுமே வாழ்ந்து வந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் தனியாக உருவாகுவதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் கீழ் பாணமைப்பற்றாக இருந்த காலகட்டங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமை, சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்தனர்.
ஆனால், 1964 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் தான் இப் பிராந்தியத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே சிறு சிறு பிணக்குகள் முளைவிடத் தொடங்கி இன முறுகல் நிலைமைகள் அவ்வப்போது ஏற்பட்டுவந்தன. ஆனால், கல்முனை மாநகரசபை உருவாகி மக்கள் பிரதிநிதிகளாக இரு இனத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டு செயல்படத் தொடங்கிய பின்னர் நல்லுறவுமிக்க சௌஜன்ய நிலைமை தோற்றுவிக்கப்பட்டு அது வளர்ச்சி கண்டு வருகின்றது.
அமைதி, சமாதானம் மிளிரும் பிரதேசமாக இன்று இந்த மண் திகழ்கின்றது. இன்று பல்வேறு துறைகளிலும் கல்முனை மாநகர சபைப் பிரிவிலுள்ள தமிழ்க் கிராமங்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. நாம் புறக்கணிக்கப்படுகின்றோம் என்ற மனநிலை தமிழ் மக்கள் மத்தியில் வளரக்கூடாது.
குறிப்பாக, கரைவாகு மேற்கைச் சேர்ந்த சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, துரவந்தியமேடு போன்ற கிராமங்களின் அபிவிருத்தியில் சபை முழு அக்கறை காட்டவேண்டும். வீணான சந்தேகங்கள் எழுவதற்கு இடமளிக்காது சபைச் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். நற்பிட்டிமுனை வேம்படி வீதிக்கு கிரவலிட்டுத் தருமாறு நான் கோரியிருந்தேன். இதற்கும் ஆவனசெய்ய சபை முன்வர வேண்டும் என்றார்.