மலேஷியாவில், தற்போது அங்குள்ள பெரும்பான்மை மலாய் இனமக்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை நடைமுறைகளை கைவிடப்போவதாக அந்நாட்டின் பிரதமர் நஜீப் ரஜாக் தெரிவித்துள்ளார். அங்கு பெரும்பான்மை மலாய் மக்களுக்கு முன்னுரிமை என்பது நவீன மலேஷியாவின் ஒரு முக்கிய விடயமாக இருந்து வருகிறது.
மலேஷியர்கள் மேலும் சமத்துவம் மிக்க ஒரு சமுதாயத்தை பலமாக ஆதரிக்கிறார்கள் என்று சிங்கப்பூர் பிஸினஸ் டைம்ஸ் தினசரிக்கு வழங்கிய ஒரு பேட்டியிலேயே இந்தக் கருத்தை நஜீப் ரஜாக் வெளியிட்டுள்ளார்.
மலாய் இன மக்களுக்கு ஒதுக்கீடு என்பது அங்கு வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மலேஷியாவில் பெரும்பான்மை இன மக்களுக்கு ஆதரவாக தனித்துவமான கொள்கை இருந்து வருகிறது என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான ஒரு நடைமுறை காலாவதியாகிப் போன ஒரு நடைமுறை என்றும், இது ஊழலுக்கு வழிவகுக்கிறது என்றும் சீன மற்றும் இந்திய சமூகத்தில் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.