யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு விசாவை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்க வேண்டுமென அந்நாட்டு எதிர்க்கட்சி கூறியுள்ளது.
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதை தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அகதி முகாம்களில் உள்ளனர். அவர்கள் மிகவும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக உதவி வழங்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக கவலைகொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசும் கூறியுள்ளது. ஆனால், தற்போது நடைமுறையிலுள்ள அகதிகளுக்கான நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று அவுஸ்திரேலியாவில் தமிழர்களுக்கு புகலிடம் வழங்கும் ஏதாவது திட்டம் இருக்கின்றதா என்பது தொடர்பாக தெரிவிக்க இதுவரை அவுஸ்திரேலிய அரசாங்கம் மறுத்துள்ளது.
பால்கன், கிழக்கு திமோர் நெருக்கடிகளின் போது மேற்கொண்டிருந்தமை போன்று தமிழர்களை தற்காலிகமாக பாதுகாக்க அவுஸ்திரேலியா முன்வருவது தொடர்பாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று எதிரணி குடிவரவுத்துறை பேச்சாளர் சர்மன் ஸ்ரோன் “த வேல்ட் டுடே’ க்கு கூறியுள்ளார்.
நாங்கள் அரசாங்கத்தில் இருந்தபோது 1999 மேயில் பால்கன் யுத்த நெருக்கடி தோன்றிய சமயம், 4 ஆயிரம் கொசோவோக்களை பாதுகாப்பு புகலிட விசாக்களை வழங்கி அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு வந்தோம். இந்த அரசுக்கு பல தேர்வுகள் உள்ளன. அவை குறித்து அவர்கள் பேசுவதோ சிந்திப்பதோ இல்லை. இவை தொடர்பான ஏற்பாடுகள் அவுஸ்திரேலியாவின் சட்டத்தில் உள்ளன என்றும் அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
1958 ஆம் ஆண்டு குடிவரவு சட்டத்தில் “பாதுகாப்பு புகலிட விசா’ ஏற்பாடு இருப்பதாக அவர் தெரிவித்தார். சொந்த நாட்டில் பிரச்சினை தீரும்வரை அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு இந்த விசா வழிசெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஏனைய நாடுகளிலிருந்து வந்த குடியேற்றவாசிகளை போன்றே தமிழர்களும் அவுஸ்திரேலிய சமூகத்துடன் ஒருங்கிணைந்துவிட்டனர். உலகிலுள்ள மிகவும் வெற்றிகரமான பல கலாசார மக்கள் வாழும் நாடுகளில் எமது நாடும் ஒன்று என்று அவர் கூறியுள்ளார்.
அஜீவன்
இறுதிகால யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் போல் எவருமே பாதிக்கப்பட்டதில்லை. அவர்களில் சிலருக்காவது புகலிடம் கிடைக்குமாயின் அவர்களது மனக்குறைகளும் பொருளாதாரக் குறைகளும் சற்று குறையும். உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்தால் மகிழலாம். இதை பாவித்து பலம் உள்ளவர்கள்தான் பயன் அடைவார்கள். அப்படி இல்லாது உண்மையாக வன்னி நிலப்பரப்பில் இறுதி காலத்தில் வேதனைகளை அனுபவித்தவர்கள் பயன் அடைந்தால் அதுபோல் மகிழ்ச்சி வேறில்லை.
rohan
//மனக்குறைகளும் பொருளாதாரக் குறைகளும் சற்று குறையும். உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்தால் மகிழலாம்//.
எனது கருத்தை அப்படியே எழுதியுள்ளீர்கள். பொதுவாகவே உண்மைச் சிரமங்களை அனுபவித்த பலர் வெளியே வந்த்தமை மிகக் குறைவு தான். ஆனாலும் யுஎன்எச்சிஆர் போன்ற அமைப்புகள் ஊடாக வெளியே வந்த பலரையும் நான் அறிவேன். நல்லது நடக்கும் என நம்புவோம்.
palli.
யதார்த்தமான பாராட்டபட வேண்டிய விடயம். இது நடக்குமாயின் வேறு சில நாடுகளும் இது பற்றி சிந்திப்பார்கள்.
மாயா
வீரகேசரி இணையம் 5/22/2009 11:12:17 AM – மனிதாபிமான மற்றும் அரசியல் ரீதியாக அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரும் தமிழர்களுக்கு அந்நாடு புகலிடம் வழங்கக் கூடாது என இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ், சிங்கள மக்களுக்கு இலங்கையில் பூரண பாதுகாப்பு காணப்படுவதாகவும் எந்த அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அரசியல் புகலிடம் அளிக்கப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் அவுஸ்திரேலியாவிற்கான இலங்கைத் தூதுவர் சேனக வல்கம்பாய தெரிவித்துள்ளார்.
சிவில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் அதிகளவான தமிழ் அகதிகள் அவுஸ்திரேலியாவிற்கு செல்லக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார். 2003-2004ம் ஆண்டு முதல் இதுவரையில் 1,899 பேருக்கு அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
mano
புலம்பெயர்ந்தவர்களுக்கு இது நல்ல செய்தியாகப் படலாம். நாங்கள் நினைக்கிறோம். இனியும் எமது மக்கள் தமது சொந்த நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது. அவர்கள் தமது மண்ணில் சகல உரிமைகளுடனும் வாழ வேண்டும் என்பதே. அதற்காகத் தானே போராட்டம் ஆரம்பமானது. அதைத் திசை திருப்பி வெறும் படுகொலைப் போராட்டமாக மாற்றிய ஒரு பிரபாகரனுக்காக அவர் பின்னால் அணிதிரண்டவர்களுக்காக தமிழ் மக்கள் அதிகம் இழந்திருக்கிறார்கள். அவர்களால் இழந்ததை அவர்கள் இல்லாத இடத்தில் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஆதிக்க மேலாண்மை அரசியல் சக்திகளிடம் தமிழினம் நசிபட்டுப்போக> பலமிழந்து போக நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறும்படி தூண்டுவது எம்மைப் பொறுத்தவரை தவறு. பொருளாதார நலன்களுக்கப்பால் உங்கள் ஆத்மாவின் ஏக்கம் சொந்த நாட்டில் வாழ்வதாக இருக்கும் என நினைக்கிறேன். அது உண்மையாயிருந்தால்> இனியும் எமது சந்ததியைத் தமிழராக> இலங்கையராக வாழ வழி செய்யுங்கள்.