“பல உயிர்களையும் சொத்துகளையும் பல கோடி ரூபா பணத்தையும் இழந்து யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டோம். ஆனால் இனிமேலாவது நிரந்தர சமாதானம் மலரவேண்டுமானால் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக சகல அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்’.
இவ்வாறு ஸ்ரீ சுமங்கல தேரர் தொடலஸ்கந்த ரிதி விகாரையில் இரு மாடிக்கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போது கூறினார்.
தொடர்ந்து பேசிய வண. சுமங்கல தேரர்;
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சகல கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்படாவிட்டால் நாமே மீண்டும் பாதிக்கப்படுவோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளை இனம் கண்டு அதற்கான தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் நாடு பழைய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிடும். அதன்பிறகு எந்தவொரு நன்மையுமே ஏற்படப்போவதில்லை என்பதை சகலரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.
நாட்டில் ஏனைய மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப்பணிகளை இடைநிறுத்தி அந்தப்பணத்தைக் கொண்டு வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுத்து அவர்களை வாழ வைக்கவேண்டும். இவற்றை எல்லாம் செய்யாமல் விட்டால் மீண்டும் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடவேண்டிய நிலைதான் ஏற்படும் என்பதை சகலரும் அறிந்துகொள்ளவேண்டும் என்றார்.