அரசாங்கத்தின் “வடக்கின் வசந்தம்’ வேலைத் திட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 180 நாட்கள் நிகழ்ச்சித் திட்டமொன்றை செயற்படுத்த விருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற, வடக்கு மாகாண மீள் குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கென ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணியின் கூட்டத்திலேயே அதன் தலைவர் என்ற வகையில் பசில் ராஜபக்ஷ இதை தெரிவித்திருக்கிறார்.
இந்த சந்திப்பு தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
“இது, தொடர்பாக கலந்து பேசவென இரண்டு சுற்று பேச்சுகள் நடைபெற்றன. வடக்கு மாகாணத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் ஜீவனோபாய நடவடிக்கைகள் பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்களுக்கு தெளிவுபடுத்துவது, முதல் சுற்றிலும், இரண்டாவது சுற்றில், சுகாதாரம், கல்வி, பொது நிர்வாகம் மற்றும் விவசாயம் ஆகிய அமைச்சுகளின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாணத்தை மீட்டதன் பின்னர் கிழக்கின் உதயம் திட்டத்தை முன்னெடுத்தது போல், வடக்கு மாகாணத்திற்காக ‘வடக்கின் வசந்தம்’ அமுல்படுத்தப் பட்டுள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் வடக்கு மாகாணத்தின் துரித அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பொருட்டு அரசின் ஒவ்வொரு அமைச்சுகளும் யோசனைகளையும், திட்டங்களையும் கூடிய விரைவில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அந்த திட்டங்களின் முதற்கட்டத்தின் கீழ் 180 நாட்கள் கொண்ட உடனடி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமொன்றும், இரண்டாவது கட்டத்தின் கீழ் 2009, 2010 காலப் பகுதிக்குள் அமுல்படுத்தவென மத்தியகால நிகழ்ச்சித் திட்டமொன்றும் முன்வைக்கப்பட வேண்டுமென்றும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் அந்த பிரதேசங்களுக்கான பாதுகாப்பு குறித்து, அதிக முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, கூட்டுப்படைத் தளபதி எயார் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.