யுத்தத்துக்குப் பின்னரான சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்களை மேற்கொள்வதற்காக கட்சியின் உயர் பீடம் எதிர்வரும் 24 ஆம் திகதி கூடி ஆராயவுள்ளது. இது தொடர்பில் அதன் பொதுச் செயலாளர் ஹசன்அலி கருத்துத் தெரிவிக்கையில்:
தற்போதைய யுத்தத்துக்குப் பின்னரான சூழ்நிலையில் கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்த தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியதன் நிமித்தம் கட்சியின் உயர்பீடம் கூடவுள்ளது. இக் கூட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளது. முக்கியமாக தமிழ்முஸ்லிம் மக்களின் உறவு குறித்து ஆலோசிக்கவுள்ளோம்.
ஜனாதிபதியின் பாராளுமன்ற உரையில் நாட்டில் சிறுபான்மையினர் இல்லையென தெரிவித்துள்ளார். அதனை நாம் வரவேற்கின்றோம். யுத்தம் முடிவடைந்த நிலையில் மக்கள் ஜனநாயக வழியில் சுதந்திரமாக சிந்தித்து முடிவுகளை எடுப்பதற்கு வழிவகுக்க வேண்டும். அதாவது அவர்கள் இயற்கையான தலையீடுகளற்ற முறையில் தமது தெரிவுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
தெரிவுகள் மூலம் தமிழ், முஸ்லிம் தலைமைகள் இனம்காணப்பட்டு பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைக்கும் போது காத்திரமான முடிவேற்பட்டு இதன் மூலம் ஜனாதிபதியின் புகழ் இன்னும் மேலோங்கும். அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆயுதக் குழுக்களிடமுள்ள ஆயுதங்கள் களையப்படுவதன் மூலம் இந்த ஜனநாயக முறையிலான இயற்கை தீர்வுக்கு சந்தர்ப்பம் கிட்டுமெனத் தெரிவித்தார்.