வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுக்கு பூரண ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்கும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரணக் கிராமங்களில் அந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாகவும் இலங்கை அரசுக்கு பாராட்டுக்களையும் ஐ.நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் விசேட ஹெலிகொப்டர் மூலம் நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்தார். இடம்பெயர்ந்துள்ள மக்களை தங்க வைத்துள்ள நிவாரணக் கிராமங்களுக்கும் சென்று பார்வையிட்டார். அவருடன் ஐ.நா. மனித உரிமைக்கான பிரதிச் செயலாளர் நாயகம் கலாநிதி ஜோன் ஹோம்ஸ், வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, ஐ.நா. செயலக தலைமை அதிகாரி விஜே நம்பியாருடனும் நிவாரணக் கிராமங்களுக்குச் சென்றார். அங்குள்ள மக்களுடனும் அவர் உரையாடினார்.
நிவாரணக் கிராமங்களில் மக்களை சுதந்திரமாக வசதியுடன் தங்க வைத்திருப்பது குறித்து செயலாளர் நாயகம் தனது திருப்தியை வெளியிட்டார். மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் ஆகியோருடன் சென்று நிவாரணக் கிராமங்களை ஐ. நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் பார்வையிட்டார்.
நிவாரணக் கிராமங்களிலிருந்து விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் புறப்பட்ட ஐ.நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் இறுதியாக மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட முல்லைத்தீவு, புதுமாத்தளன், முள்ளி வாய்க்கால், வெள்ளைமுள்ளி வாய்க்கால் பகுதிகளை பார்வையிட்டார். ஹெலிக்கொப்டரில் தாழப் பறந்தவாறு பாதுகாப்பு வலயப் பகுதி என பிரகடனப்படுத்தியிருந்த பகுதிகளையும் பாங்கீமூன் பார்வையிட்டார்.
அங்கிருந்து நேரடியாக கண்டிக்கு வந்த ஐ. நா. செயலாளர் நாயகம் நேற்று மாலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.