நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து சுற்றுலாத் துறையை முன்னேற்றுவதற்கான பல திட்டங்களை செயல்படுத்த சுற்றுலாத் துறை அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஓர் அங்கமாக சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட ஈரானுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவர் இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கமிடையிலான சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.
இதேவேளை சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கையைப் பிரபல்யப்படுத்த விசேட திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அடுத்த வருடம் 15 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை வரவழைக்க எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலாத் துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்த சு10ழல் காரணமாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். இதன்பின்னர் பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வரலாம் என்றும் அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்துவதைத் தடுக்க வகை செய்ய வேண்டும் எனவும் அமைச்சின் செயலாளர் ஜோர்ஜ் மைக்கள் மேலும் தெரிவித்தார்.
கடந்த வருடங்களில் சீகிரியா மற்றும ஹிக்கடுவை போன்ற பிரதேசங்களுக்குச் செல்வதை கூடுதலான சுற்றுலாப்பயணிகள் தவிர்த்துக் கொண்டார்கள் என்றும் இதன்பின்னர் இவ்வாறான நிலை ஏற்பட இடமளிக்கக் கூடாது எனவும் அவர் கேட்டுககொண்டுள்ளார்.