2008ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி யாழ்ப்பாணம், வவுனியா தேர்தல்

north_.jpgயாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைக்கான தேர்தல்கள் 2008 ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படி நடத்தப்பட உள்ளதாக யாழ்., வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் நேற்று தெரிவித்தனர்.

இதன்படி யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்க ஓர் இலட்சத்து 417 பேர் தகுதி பெற்றுள்ளதோடு, வவுனியா நகர சபைத் தேர்தலில் போட்டியிட 24 ஆயிரத்து 626 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

யாழ். மாநகர சபைக்கு 11 வருடங்களின் பின்னர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தல் மூலம் 23 உறுப்பனிர்கள் யாழ். மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட உள்ளதாக யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார். யாழ். மாவட்ட 2008க்கான வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்பட்டுள்ளதோடு மே 30 ஆம் திகதி இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது. வாக்காளர்களின் பெயர்ப் பட்டியல் அடுத்த மாத முதல் வாரத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளதாகவும் உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபைத் தேர்தலையொட்டி 67 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதேவேளை, புத்தளம், வவுனியா, அனுராதபுரம் மற்றும் கொழும்பு மாவட்டங்களிலுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்கள் கோரினால் கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். மாநகர சபைக்கு 1998 ஆம் ஆண்டு இறுதியாகத் தேர்தல் நடைபெற்றது. யாழ். மாநகர சபை மேயராக எஸ். கந்தையா பணிபுரிந்தார்.

வவுனியா நகர சபை

இதேவேளை வவுனியா நகர சபைத் தேர்தல் 2008ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படியே நடத்தப்படும் எனவும் வாக்களிக்க 24 ஆயிரத்து 626 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி கூறினார். இத்தேர்தல் மூலம் இம்மாநகர சபைக்கு 12 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

வவுனியா மாநகர சபைக்கு 2000ஆம் ஆண்டு இறுதியாகத் தேர்தல் நடைபெற்றது. தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், நகர சபை மேயராக பணிபுரிந்தார்.

இதேவேளை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஜூன் 17 முதல் 24 வரை ஏற்கப்பட உள்ளதோடு தேர்தல் ஆணையாளர் இது தொடர்பான அறிவித்தலை ஜூன் 4ஆம் திகதி அறிவிக்க உள்ளார். இந்த நிலையில் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் உட்பட பல பிரதான கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றன. அவை வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இரு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட உள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *