கனடாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் அலைஸ் முன்றோவுக்கு இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த சிறந்த ஆங்கில இலக்கிய படைப்புக்கான புக்கர் பரிசு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ. 47 லட்சம் ரொக்க பணமும் அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு கனடாவின் அலைஸ் முன்றோ, இந்தியாவின் மகாஸ்வேதா தேவி, இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து எழுத்தாளர் வி.எஸ்.நைபால் உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
இது குறித்து நடுவர் குழுவினர் கூறுகையில், அலைஸ் முன்றோ சிறுகதை எழுத்தாளர் என்ற அளவில் தான் அனைவராலும் அறியப்பட்டுள்ளார். ஆனால், அவரது நாவல்கள் அனைத்துமே தலைசிறந்த எழுத்தாளர்களின் தலைசிறந்த எழுத்துக்களை போல் உள்ளது. அவரது புத்தகம் ஒவ்வொன்றையும் படிக்கும் போது நாம் இதுவரை அறிந்திராத புதிய விஷயம் ஒன்றை கற்றுக்கொள்ளலாம் என்றனர்.
இந்த விருது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என முன்றோ தெரிவித்துள்ளார்.