நாளொன் றுக்கு 5 மில்லியன் லீற்றர் நீரைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் விசேட நீர் விநியோகத் திட்டமொன்று நேற்று வவுனியா நீவாரணக் கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
யுனிசெப் நிறுவனமும், மீள்குடியேற்ற அமைச்சும் இணைந்து 400 மில்லியன் ரூபா செலவில் இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளன. வவுனியா மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து பெறப்படும் நீரே நன்கு சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்கள் குடிப்பதற்கு ஏதுவானதாக விநியோகிக்கப்படுவதாகவும் அமைச்சர் ரிஷாட் கூறினார்.
மல்வத்து ஓயாவிலிருந்து நாளொன்றுக்கு விநியோகிக்கப்படும் 5 மில்லியன் லீற்றர் நீரை வவுனியாவிலுள்ள நான்கு நிவாரணக் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தமது அன்றாடத் தேவைகளுக்காகப் பெற்றுக் கொள்ள முடியும். நாளடைவில் இந்நீர்த்தேக்கத்திலிருந்து விநியோகிக்கப்படும் நீரின் அளவை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போர் அன்றாடம் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு போதுமான அளவு நீர்வசதி இல்லாமை இதுவரையில் பெரும் குறைபாடாக நிலவி வந்தது. அக்குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டே இத்திட்டத்தை அமுல் செய்திருப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.
இத்திட்டத்துக்கு மேலதிகமாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நான்கு நிவாரணக் கிராமங்களுக்கும் 150 நிலக்கீழ் குழாய்கள் மூலம் நீர் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.