வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களை தங்கவைப்பதற்கென வவுனியாவில் ஆறாவது நிவாரணக் கிராமம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த சேவை மற்றும் மீள் குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.
வலயம் -5 என்ற பெயரிலான இந்த நிவாரணக் கிராமத்தில் முதற் கட்டமாக 2500 பேர் தங்க வைக்கப்படவுள்ளனர்.
வலயம்-5 நிவாரணக் கிராமம் அமைப்பதற்கான ஆரம்பப்பணிகளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் நேற்று ஆரம்பித்து வைத்தார். குறித்த நிவாரணக் கிராமத்தை சுத்திகரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை தங்க வைப்பதற்கென ஏற்கனவே ஐந்து கிராமங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அருணாசலம் நிவாரணக் கிராமத்தில் (வலயம்- 3) 40,599 பேரும், பொன்னம்பலம் ராமநாதன் நிவாரணக் கிராமத்தில் (வலயம்- 2) 80,548 பேரும், ஆனந்தகுமாரசுவாமி (வலயம்- 1) நிவாரணக் கிராமத்தில் 14,962 பேரும் கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் (மெனிக் பாம்) 21,655 பேரும் வலயம் 4இல் 28,919 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.
இவர்களுக்கான சகல வசதிகளும் அனர்த்த நிவாரண சேவை மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.