யாழ்தேவி ரயில் சேவை இருபது வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக எதிர்வரும் 06ஆம் திகதி சனிக்கிழமை தாண்டிக்குளம் வரை பயணம் செய்யவிருப்பதாக போக்குவரத்து அமைச்சின் ஊடகச் செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை, அன்றைய தினமே ஓமந்தை ரயில்வே நிலையத்தின் மீள்கட்டுமானப் பணிகளும் ஆரம்பித்து வைக்கப்படுமெனவும் அவர் கூறினார். வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்தேவி ரயில் சேவையை யாழ்ப்பாணம் வரை நடத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோளாகும். அதன் ஆரம்ப கட்டமாக, வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு போகும்போது முதன் முதலாக வரும் தாண்டிக்குளம் ரயில் நிலையம் வரை எதிர்வரும் 06ஆம் திகதி யாழ்தேவி பயணம் செய்யவுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து எதிர்வரும் சனிக்கிழமை காலை 5.45 மணிக்கு புறப்படும் யாழ்தேவியில் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் தாண்டிக்குளம் வரை சென்று மீண்டும் கொழும்பு திரும்பவுள்ளனர். சேதமாக்கப்பட்ட ஓமந்தை ரயில் நிலையத்தின் கட்டுமாணப்பணிகளும் அன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்படுமெனவும் அமைச்சின் ஊடக செயலாளர் தெரிவித்தார்.