காலஞ் சென்ற நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் அமரசிறி தொடங்கொடவின் பூதவுடல் பாராளுமன்ற உறுப்பினர்களின் அஞ்சலிக்காக இன்று காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரையில் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும். சிறிது காலம் சுகயீனமுற்றிருந்த அமைச்சர் சனிக்கிழமை இரவு காலமானார். இதனையடுத்து அவரது பூதவுடல் நேற்று (31) மாலை 3.30 மணி முதல் இன்று காலை 9 மணிவரை கொழும்பு ஜயரட்ண மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.
பாராளுமன்றத்திலிருந்து இன்று காலை 11.30 மணிக்கு அமைச்சரது பூதவுடல் பொதுமக்கள் சகிதம் வாகன பவனியுடன் அவரது சொந்த ஊரான காலி கராப்பிட்டியவுக்கு எடுத்துச் செல்லப்படும். இதேவேளை, அமரசிறி தொடங்கொடவின் மரணத்தையடுத்து ஏற்பட்ட பாராளுமன்ற வெற்றிடத்துக்கு தேர்தலில் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்ற சந்திம வீரக்கொடி புதிய பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறவுள்ளார்.