தலை மன்னாரையும் மன்னார் பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் வகையில் மூன்று கிலோ மீட்டர் நீளமான பாதையொன்றை நிர்மாணிக்க நெடுஞ்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நான்கு நிரைகளை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த பாதையில் 157.10 மீட்டர் நீளமான பாலமொன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு கூறியது.
ஜப்பான் அரசின் 190 கோடி ரூபா உதவியுடன் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தலைமன்னாரையும் மன்னார் நிலப்பரப்பையும் தொடர்புபடுத்தும் தள்ளாடி பாலமும் பிரதான பாதையும் புலி பயங்கரவாதிகளால் கடந்த காலத்தில் நாசமாக்கப்பட்டது. மன்னார் மாவட்டம் புலிகளின் பிடியில் இருந்து முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து மன்னார் மாவட்டத்தை புனரமைக்கவும் பாதைகளை செப்பனிடவும் அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, கடந்த வருட பிற்பகுதி முதல் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இங்கு முன்னெடுக்கப்பட்டன. மன்னார் – மதவாச்சி பாதையும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாதை தலைமன்னாருக்கான பாதையுடன் இணைக்கப்பட உள்ளது.
தள்ளாடி பாலத்துடன் கூடிய புதிய பாதை நிர்மாணிக்கும் பணிகள் 75 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் தலைமன்னாருக்கான பாதை திறந்து வைக்கப்படும் எனவும் நெடுஞ்சாலைகள் அமைச்சு கூறியது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுடனும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு வசந்தம் ஜனாதிபதி செயலணி தலைவருமான பசில் ராஜபக்ஷவின் ஆலோசனையுடனும் மேற்படி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, வடக்கு வசந்தம் திட்டத்துடன் இணைந்ததாக மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் கீழ் யோதவெவ அபிவிருத்தி, வாவிகளை புனரமைத்தல், நெடுஞ்சாலைகள் அமைத்தல், பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், அமைத்தல் குடிநீர் திட்டங்கள் மேற்கொள்ளுதல் என்பனவும் அடங்குவதாக அறிவிக்கப்படுகிறது.