தமிழ் மன்ற ஸ்தாபகர் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா காலமானார் – புன்னியாமீன்

sm.jpgஇலங் கையில் சிரேஷ்ட எழுத்தாளரும், ஊடகவியலாளரும்,  வெளியீட்டாளரும்,  பன்னூலாசிரியருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்கள் கடந்த 2009.05.29ஆம் திகதி இறையடியெய்துவிட்டார். இலங்கையில் முன்னணி தமிழ் நூல் பதிபகங்களில் ஒன்றான கல்ஹின்னை தமிழ்மன்றத்தின் ஸ்தாபகரும், உரிமையாளருமான இவர், 100க்கும் அதிகமான நூல்களை வெளியிட்டுள்ளார். அன்னாரின் மறைவுச் செய்தி மூன்று தினங்கள் கடந்தே எனக்குத் தெரியவந்தது. தலைநகரிலுள்ள எமது எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  நண்பர்கள் சிறிய சிறிய விடயங்களுக்குக்கூட கடிதம் என்றும்,  மின்னஞ்சல் என்றும்,  SMS என்றும் தொடர்புகொண்டாலும்கூட,  இது போன்ற விடயங்களை அறிவிக்காமை வேதனைக்குரிய ஒரு விடயமே.

இவ்விடத்தில் ஒரு சிறிய விடயத்தை மனந்திறந்து குறிப்பிடல் வேண்டும். ஒரு எழுத்தாளன் என்ற அடிப்படையில் இன்று நான் 150 புத்தகங்களை எழுதி வெளியிட்டாலும்கூட ஏதோ ஒரு வகையில் புத்தக வெளியீட்டில் எனக்கு உத்வேகத்தைத் தந்தவர் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்களே. 1979ஆம் ஆண்டில் என் முதல் சிறுகதைத் தொகுதி “தேவைகள்” எனும் தலைப்பில் வெளிவந்த பின்பு சுமார் ஏழாண்டுகள் எந்தவொரு புத்தகத்தையும் நான் வெளியிடவில்லை. அதற்குரிய வசதிகளும் என்னிடம் இருக்கவில்லை.

இந்நிலையில் அப்போதைய மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ.யின் செயலாளர் நாயகம் அஸ்ரப் ஹாசிம் அவர்களினால் எஸ்.எம். ஹனிபாவிடம் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். எமது முதல் அறிமுகத்துடனே எனது இரண்டாவது நூலான “நிழலின் அருமை”யை கல்ஹின்னை தமிழ்மன்றத்தின் 28ஆவது வெளியீடாக வெளியிட அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா ஒப்புக்கொண்டார். 1986 மார்ச்சில் அப்புத்தகம் வெளிவந்தது.

அவரின் சுறுசுறுப்பும்,  பழகும் சுபாவமும், விருந்தோம்பும் பண்பும்,  அவரின் தமிழ் இலக்கியப் பணிகளும் என்னை வெகுவாகக் கவர்ந்ததினால் அவரைப் பற்றிய ஒரு ஆய்வினை மேற்கொள்ள நான் முடிவெடுத்தேன். இதன் விளைவாக 1987ஆம் ஆண்டு “இலக்கிய உலா”,  “இலக்கிய விருந்து” ஆகிய இரண்டு நூல்களை நான் எழுதினேன். “இலக்கிய உலா” அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை உள்ளடக்கியது. இந்நூலின் முதலாவது பதிப்பு 1987ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்தது. சென்னை மில்லத் பப்ளிகேஷன்ஸ் இந்நூலை வெளியிட்டது. “இலக்கிய விருந்து” அதுகாலம்வரை தமிழ்மன்றம் வெளியிட்ட 30 நூல்களைப் பற்றிய ஆய்வு நூலாக அமைந்தது. இந்நூல் கல்ஹின்னை தமிழ்மன்றத்தின் 30ஆவது வெளியீடாக 1977 ஏப்ரல் மாதம் வெளிவந்தது. இதேகாலகட்டத்தில் இந்தியா அல்பாசி பப்ளிசர்ஸ் வெளியீடாக எனது “அடிவானத்து ஒளிர்வுகள்” நாவல் வெளிவரவும் பூரண ஒத்துழைப்பினை அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்களே வழங்கினார்.

இவ்வாறாக இரண்டாண்டுகளுக்குள் என்னுடைய நான்கு புத்தகங்கள் அச்சாவதற்கு ஒத்துழைத்ததுடன்,  அச்சீட்டுத்துறையிலும்,  வெளியீட்டுத்துறையிலும் பல்வேறுபட்ட நுணுக்கங்களை எனக்கு அவர் போதித்தமையினாலேயே பிற்காலத்தில் என்னால் சுயமாக 150 புத்தகங்களை எழுதி வெளியிடவும்,  அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றி எனது சிந்தனைவட்டத்தின் மூலம் 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிடவும் முடிந்தது.

எம்மைவிட்டுப் பிரிந்தாலும் இலங்கை தமிழ் இலக்கியத்துக்கும், இலக்கியவாதிகளுக்கும் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்களினால் வழங்கிய ஒத்துழைப்பும்,  வழிகாட்டலும் என்றும் நிலைத்திருக்கும். இச்சந்தர்ப்பத்தில் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டிக்கு அண்மையில் அமைந்துள்ள எழில் கொஞ்சும் முஸ்லிம் கிராமங்களுள் ஒன்றான கல்ஹின்னையைப் பிறப்பிடமாகக் கொண்டவரே எஸ்.எம். ஹனிபா அவர்கள். இவர் 1927ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24ஆம் திகதி செய்யது ஹாஜியார்ää சபியா உம்மா தம்பதியினரின் ஏக புதல்வராக கல்ஹின்னையில் பிறந்தார்.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால கட்டங்களிலே கிராமப் புறங்களின் கல்வி நிலை மிகவும் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. காரணம் கல்வியைப் பெற்றுக்கொள்ளக் கூடிய பாடசாலைகள் இக்கிராமங்களில் இன்மையே. பொதுவாக தமது பிள்ளைகளை உலகளாவிய கல்வியைக் கற்பதற்கு முன்பு மார்க்க அறிவினை வழங்குவதற்கு இக்காலப் பெற்றோர் கூடிய ஆர்வம் காட்டுவர். இந்த அடிப்படையில் எஸ்.எம். ஹனிபா அவர்கள் தனது நான்கரை வயதிலே திருக்குர்ஆனையும்ää மார்க்கக்கல்வியையும் கற்றுக் கொள்ளத் தூண்டப்பட்டார். இரண்டாண்டுகளுக்குள் திருக்குர்ஆனின் 30 பாகங்களையும் ஓதி முடித்ததுடன்ää மார்க்க அடிப்படை தொடர்பாகவும் கற்றுத் தேர்ந்தார்.

இந்நிலையில் 1934ஆம் ஆண்டு ஜுன் 01ஆம் திகதி கல்ஹின்னை கிராமத்தின் கமாலியா முஸ்லிம் பாடசாலை எனும் பெயரில் ஒரு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையே தற்போதைய கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலையாகும். இப்பாடசாலையின் ஆரம்ப தினத்தின் 21ஆவது மாணவராக சேர்ந்த ஹனிபா ஐந்தாம் வகுப்பு வரை இப்பாடசாலையிலேயே தமிழ்மொழி மூலமாக கற்றார். பின்பு 1939ஆம் ஆண்டில் மாத்தளை விஜய கல்லூரியில் ஆங்கிலமொழி மூலம் கற்க தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு மாத்தளை சென். தோமஸ் கல்லூரியிலும், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியர் கல்லூரியிலும்,  கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும் இவர் இடைநிலைக் கல்வி,  உயர்தரக் கல்வியைப் பெற்றார். பின்பு சட்டக் கல்லூரியில் இணைந்து சட்டத்தரணியானார்.

இவர் 1956ஆம் ஆண்டில் கொழும்பு டென்காம் பாடசாலையில் (தற்போது மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மு.மகாவித்தியாலயம்) ஆசிரியர் சேவையில் இணைந்தார். இருப்பினும் இரண்டாண்டுக்குள் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையின் உதவியாசிரியர் பதவி கிடைத்தமையினால் ஆசிரியர் தொழிலில் இவர் நீடிக்கவில்லை. 1958ஆம் ஆண்டில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பிரதான நாழிதலான தினகரன் பத்திரிகையில் உதவியாசிரியராக சேவையில் இணைந்தார். தினகரன் உலக செய்திகள் பக்கத்தை இவரே பொறுப்பாக நின்று நடத்திவந்தார். இதைத் தொடர்ந்து தினகரன் பத்திரிகையின் திங்கள் விருந்து எனும் சஞ்சிகைப் பக்கத்தையும் பொறுப்பாக நின்று நடத்தினார்.

இக்காலகட்டத்தில் தினகரன் பிரதம ஆசிரியராக இருந்த கலாநிதி க. கைலாசபதி அவர்களின் விசுவாசத்துக்குரிய ஒருவாராகவும் காணப்பட்ட எஸ்.எம். ஹனிபா சுமார் 6 ஆண்டுகள் தினகரன் ஆசிரியர் பீடத்தில் உதவியாசிரியராகப் பணியாற்றினார். பின்பு தினகரனின் சகோதர பத்திரிகையான சிலோன் ஒப்சேவரில் துணையாசிரியர் பதவிக்கு நியமனம் பெற்று உள்நாட்டு,  வெளிநாட்டு செய்திகளை அழகுற தொகுத்தளித்தார். சுமார் 1 வருட காலத்துக்குள் சிலோன் டெய்லி நிவுஸ் பத்திரிகையில் உதவியாசிரியாராக இணைந்து 3 ஆண்டு காலம் பணியாற்றினார். இக்கட்டத்தில் தனக்கு இந்தோனேசியாவில் மார்க்கக் கல்வி கற்பதற்கான புலமைப்பரிசில் ஒன்று கிடைத்தமையினால் லேக்ஹவுஸிலிருந்து 1968 ஜுன் மாதம் இராஜினாமாச் செய்தார்.

பின்பு 1971ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தின் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பகுதியில் சிரேஷ்ட உதவியாசிரியராக நியமனம் பெற்றார். இவரின் கடமையுணர்வும்,  தொழில் நுணுக்கமும் ஒன்றிணைந்து இவரை பொறுப்பாசிரியர் பதவி உயர்வுபெற வழிவகுத்தது. 1977ஆம் ஆண்டில் தன் சுயவிருப்பின் பெயரில் இவர் இப்பதவியிலிருந்தும் இராஜினாமாச் செய்தார்.

பள்ளிப் பராயத்திலிருந்தே தமிழை நேசிக்கவும்,  தமிழை வளர்க்கவும் பழகிக் கொண்ட எஸ்.எம். ஹனிபா அவர்கள் கற்கும் காலத்திலே ஓர் இலக்கிய சஞ்சிகை, ஒரு கல்லூரி சஞ்சிகை,   இரண்டு இயக்க சஞ்சிகைகள், பல்கலைக்கழக சஞ்சிகையொன்று என மொத்தம் ஐந்து சஞ்சிகைகளில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இதே காலப் பகுதியில் வேறு மூன்று பல்கலைக்கழக சஞ்சிகைகளுக்கும் இவர் முழுப் பொறுப்பாக நின்று வெளிக்கொணர்ந்தார். இவரது 21வது வயதிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குள் இவர் ஆசிரியராக நின்று பணியாற்றிய சஞ்சிகைகளை எடுத்துநோக்குமிடத்து சமுதாயம் எனும் இலக்கிய சஞ்சிகை இவருடைய சொந்த வெளியீடாகவும் தரமான இலக்கிய சஞ்சிகையாகவும் மிளிர்ந்ததை அவதானிக்கலாம்.

100க்கணக்கான இலக்கிய ஆக்கங்களையும்,  கட்டுரைகளையும் தேசிய பத்திரிகைகளிலும்,  சஞ்சிகைகளிலும், வானொலியிலும் எழுதியுள்ள இவர்,  சுமார் 15 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலக்கிய வானில் இவரால் சமர்ப்பிக்கப்பட்ட நூல்களில் உலகம் புகழும் உத்தம தூதர்,  துஆவின் சிறப்பு,  உத்தமர் உவைஸ்,  The Great Son ஆகியன குறிப்பிடத்தக்கது. பாரதி நூற்றாண்டின்போது மகாகவி பாரதி நூலினை சிங்களத்தில் வெளியிட்டார். அதேபோல உத்தும் நபி துமானோ,  உவைஸ் சிரித்த ஆகிய நூல்களை சிங்களத்திலும் எழுதி வெளியிட்டார். இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சி எனும் நூல் அறிஞர்களால் விதந்துரைக்கப்பட்டுள்ளதாகும். இவர் கடைசியாக எழுதி வெளியிட்ட நூல் “அன்னை சோனியா காந்தி” என்பதாகும்.

கல்ஹின்னை தமிழ்மன்றம் எனும் முத்திரையில் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்கள் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஈழத்துத் தமிழ்த் தாயின் மடியில் தவழ விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவரது வெளியீட்டுப் பணிகளை அவதானிக்கும்போது இன, மத,பேதங்களுக்கு அப்பாட்பட்டிருப்பதை அவதானிக்கலாம். அதேநேரம், வளர்ந்த எழுத்தாளர்கள், கல்விமான்கள் என்ற வட்டத்துக்குள் தமது வெளியீட்டினைச் சுருக்கிக் கொள்ளாமல் வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கும்,  அறிமுக எழுத்தாளர்களுக்கும் களமமைத்துக் கொடுத்துள்ளதை விசேட பண்பாக சுட்டிக்காட்ட வேண்டும். இவர் மூலமாக பல எழுத்தாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை. தமிழ்மன்றம் பல நூல்களை வெளியிட்ட போதிலும்கூட,  சில நூல்களை மாத்திரம் கீழே உதாரணப்படுத்தியுள்ளேன்.

• தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு (ஆங்கிலம்). இந்நூல் 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. இந்நூலின் நூலாசிரியர் கலாநிதி எம்.எம். உவைஸ் ஆவார். இதுவே தமிழ்மன்றத்தின் முதல் நூலாகும்.

• இலக்கியத்தென்றல். (தமிழ் இலக்கிய வரலாறு) கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களினால் எழுதப்பட்ட இந்நூல் 1953ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்தது.

• தமிழர் சால்பு. (சங்ககால இலக்கியம் பற்றியது) இந்நூலினையும் கலாநிதி சு. வித்தியானந்தன் எழுதியுள்ளார். 323 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் 01ஆம் பதிப்பு 1954ஆம் ஆண்டு அக்டோபரில் வெளிவந்தது.

• துணைவேந்தர் வித்தி. இந்நூலை பேராசிரியர் கலாநிதி அ.சன்முகதாஸ் எழுதியுள்ள இந்நூலின் முதற்பகுதி 1984 மே மாதம் வெளிவந்தது.

• என் சரிதை. கவிஞர் அப்துல்காதர் லெவ்வை அவர்களினால் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள். இந்நூல் 1983 ஜனவரியில் வெளிவந்தது. இதேயாண்டு இந்தியாவில் பிரபல எழுத்தாளர் ஜே.எம். சாலியின் “சாயல்” எனும் சிறுகதைத் தொகுதியை தமிழ்மன்றம் வெளியிட்டது.

• 1984 ஜனவரியில் கவிமணி எம்.ஸி. சுபைர் அவர்களின் “எங்கள் தாய்நாடு” எனும் புத்தகத்தை வெளியிட்ட தமிழ்மன்றம் இதேயாண்டில் கவியரசு எம்.எச்.எம். ஹலீம்தீனின் “காலத்தின் கோலங்கள்” எனும் நூலினையும் வெளியிட்டது. 1985ஆம் ஆண்டு மார்ச்சில் புலவர்மணி அ.மு. சரீபுத்தீனின் “கனிந்த காதல்” நூல் வெளிவந்தது. 

எஸ்.எம். ஹனிபா அவர்கள் 1965ஆம் ஆண்டில் “நூருல் அன்பேரியா”வை தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார். தமிழன்பர் ஹனிபாவின் இலக்கிய சேவைகளை பாராட்டி பல அமைப்புகள் கௌரவம் அளித்துள்ளன. பல விருதுகளை வழங்கியுள்ளனர். ஹனிபா மறைந்தாலும் அவரால் ஆற்றப்பட்ட சேவைகள் நீண்ட காலங்களுக்கு நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *