நீதிமன்றத் திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற மூன்று கைதிகள் மீது சிறைச்சாலை காவலர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது மூன்றாவது நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை, மோசடி சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகைச் சேர்ந்த மூவரே இவ்வாறு தப்பிச் செல்ல முயன்றவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
விசாரணைகள் முடிந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வதற்காக சிறைச்சாலை பஸ் வண்டியை அண்மித்த போது காவலர்களை தள்ளிவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். உடனடியாக அவர்களை தடுத்த சிறைக்காவலர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மோதரை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய கே. டபிள்யூ. சிசிரகுமார என்பவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். காலில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எஸ். எஸ். பி. மேலும் தெரிவித்தார்.
மாயா
ஆயுததாரிகளும், பாதாள கோஸ்டிகளும் களை எடுக்கப்படுகின்றனர்.