விபத்துக் குள்ளான ஏர் பிரான்ஸ் விமானத்தின் பாகங்கள் பிரேசிலுக்கு 650 கி.மீ. வட கிழக்கே அட்லாண்டிக் கடலில் கிடப்பது தெரியவந்துள்ளது. அந்தப் பகுதியில் பிரான்ஸ், பிரேசில் விமானப் படையினரும் கடற்படையினரும் நடத்திய தேடுதல் வேட்டையில் பயணிகள் யாரும் உயிர் தப்பவில்லை என்று தெரியவந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 228 பயணிகளுடன் AF 447 என்ற அந்த விமானம் இரவு 11.30 மணிக்கு பிரேசிலில் இருந்து புறப்பட்டது. ஆனால், நள்ளிரவு 2.33 மணிக்கு அந்த விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாகக் கருதப்படுகிறது.
நேற்று மாலை பிரேசிலின் பெர்னான்டோ டி நொரோன்ஹா என்ற தீவுக்கு 650 வட கிழக்கே விமானத்தின் சிதறிய பாகங்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு விமான சீட், ஒரு மிதவை, ஒரு இறக்கைத் துண்டு உள்ளிட்ட பாகங்கள் அங்கு மிதக்கின்றன. அப் பகுதியில் விமான எரிபொருளும் கசிந்து கிடக்கிறது. விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. அதை ஆய்வு செய்தால் தான் விமானம் விபத்துக்குள்ளானதற்கான சரியான காரணம் தெரியவரும்.
இப்போதைக்கு கடும் காற்றோட்டம் காரணமாக ஏற்பட்ட திடீர் அதிர்வினால் அல்லது மின்னல் தாக்கியதால் விமானத்தின் கருவிகள் செயலிழந்து விபத்துக்குளாகியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. விமானத்தில் 3 பைலட்டுகள் இருந்தும் கூட கடைசி நிமிட பிரச்சனை குறித்து தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் தரக் கூட கால அவகாசம் இல்லாத அளவுக்கு படுவேகத்தில் விபத்து நடந்து முடிந்துள்ளது.
விபத்தின்போது விமானத்தின் உள் காற்றழுத்தம் (pressure) குறைந்துவிட்டதாகவும், பல மின்சார எந்திரங்கள் செயல்படவில்லை என்றும் அதன் கம்ப்யூட்டர்கள் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் தந்தது குறிப்பிடத்தக்கது. தயாரிக்கப்பட்டு 4 வருடமே ஆன இந்த விமானத்தில் கடந்த ஏப்ரலில் வழக்கமான பராமரிப்புப் பணியும் நடந்துள்ளது.