தமிழர் களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுடனும் அரசுடனும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.பி. திஸநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:
புலிகள் தோற்கடிக்கப்பட்டு யுத்தம் இப்போது முடிவுற்றுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வின் தேவை அதிகரித்துள்ளது. தமது பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அதிகாரப் பகிர்வைக் கோருகின்ற தமிழ் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமையால்தான் தமிழீழக் கோரிக்கை தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்டது.
அந்தத் தமிழீழக் கோரிக்கையை அடிப்படையாக வைத்து உருவான புலிகள் அமைப்பு இன்று முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. இருந்தாலும் தமிழரின் பிரச்சினையைத் தீர்க்கும் வழிமுறையான அரசியல் தீர்வின் தேவை இல்லாது செய்யப்படவில்லை. அரசியல் தீர்வின் தேவை இப்போதுதான் வலுவடைந்துள்ளது. இந்தத் தீர்வைப் பெறுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடனும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுடனும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். மீண்டும் பயங்கரவாதம் ஏற்படாதிருக்க வேண்டும் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது இந்தக் கோரிக்கையை ஏற்றுச் செயற்பட வேண்டும் என்றார்.