தமிழர் களை இலங்கை ராணுவம் படுகொலை செய்த சதிக்கு பின்னணியில் இருந்த விஜய் நம்பியார், அவரது சகோதரர் சதீஷ் நம்பியார் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
உங்களுக்கு இருக்கும் திறமையையும் அனுபவத்தையும் கொண்டு அரசு நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும், கொள்கைகளை வகுப்பதிலும் புதிய தரத்தை ஏற்படுத்துவீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். இப்போது எங்களுக்கு இருக்கும் கவலையெல்லாம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்துதான். இலங்கையைப் பொறுத்தவரையில் நமது வெளியுறவுக் கொள்கை பெருங்கேடு விளைவித்து வருகிறது. அண்மைக் காலங்களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது இரண்டு முதன்மையான காரணங்களுக்காகக் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
வன்னிப் பகுதியில் அண்மையில் முடிவடைந்துள்ள விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு இழைத்த போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஜெர்மனியும் வேறு 16 நாடுகளும் விடுத்த வேண்டுகோளை விவாதிப்பதற்காகக் கடந்த மே 26ம் தேதி சிறப்புக் கூட்டம் ஒன்றை ஐ.நா. மனித உரிமை மன்றம் கூட்டியிருந்தது. தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அஞ்சிய இலங்கை அரசு, எதிர் நடவடிக்கை எடுத்தது. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் துணையுடன் இந்திய உள்ளிட்ட 12 நாடுகளின் ஒப்புதலுடன் தானே உருவாக்கிய தீர்மானம் ஒன்றை இலங்கை சுற்றுக்கு விட்டது.
இலங்கை அரசின் இந்தத் தீர்மானமும், ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் இந்தியத் தூதரான ஏ.கோபிநாதன் இத்தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசியதும், ஐ.நா. மனித உரிமை மன்றம் ஒரு பிற்போக்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு வழிவகுத்தது. இத்தீர்மானம் உலகம் முழுவதும் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது. இப்போது இருள்படிந்த அமைப்பாக மாறிவிட்ட ஐ.நா. அமைப்பு வரலாற்றில் மிகவும் கோட்பாடற்ற, வெட்கமற்ற முறையில் நிறைவற்றப்பட்ட ஒரு தீர்மானம் இதுவாகத்தான் இருக்கும்.
வெறுக்கத்தக்க இத்தகைய தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு அது நிறைவேற வழிவகுத்திருப்பது இந்தியாவுக்கும் அதன் வெளியுறவுக் கொள்கைக்கும் பெரும் இழிவை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியும் இப்போது ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூனின் தலைமை செயலாளராக இருப்பவருமான விஜய் நம்பியார் இந்த இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்திருக்கிறார் என்று கடுமையாகக் குற்றம் சாற்றப்பட்டுள்ளது. விஜய் நம்பியாரின் சகோதரரும், ஊதியம் வாங்கிக் கொண்டு இலங்கைப் படைக்கு கருத்துரையாளராக இருப்பவருமான ஓய்வுபெற்ற இந்தியப் படை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் நம்பியார் தான் `தமிழர்களை அழித்தொழிக்கும்’ இந்த சதி முழுவதற்கும் பின்னணி என்று கூறப்படுகிறது.
இந்த விஷயம் குறித்து உடனடியாக விசாரணைக்கு ஆணையிடுமாறு உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். அதற்கிடையே, இப்போதுள்ள முதன்மையான பொறுப்புகளில் இருந்து இந்த அதிகாரிகள் அனைவரையும் நீக்க வேண்டும். ஐ.நா.வில் பணியாற்ற விஜய் நம்பியாருக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு அங்கீகாரத்தைத் திரும்பப்பெற வேண்டும்.
இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக ஓய்வுபெற்ற லெப்டினனட் ஜெனரல் சதீஷ் நம்பியாருக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசின் ஆவணங்களில் இருந்து இந்த இழுக்கும், கறையும் அகற்றப்படாத வரையில், இந்த நாட்டு மக்களுக்கு நீங்கள் அளித்துள்ள வாக்குறுதிப்படி நல்லாட்சியை, பொறுப்பான ஆட்சியை வழங்குவது உங்களால் இயலாத ஒன்றாகிவிடும்.
இவ்வாறும். ராமதாஸ் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
பார்த்திபன்
அட சில வாரங்கள் முன்வரை உங்களால் மிகவும் கேவலமாக விமர்சிக்கப்பபட்ட பிரதமர் மன்மோகன் சிங்கிற்கா தாங்கள் வேண்டுகோள்க் கடிதம் வரைகின்றீர்கள. இது உங்களிற்கே கேவலமாக இல்லையா ராமதாஸ்??
msri
டாக்டர் கசாப்புக் கடைக்காரனிடம் சீவகாருண்ணியம் பற்றி பேசுகின்றார்!அது சரி தமிழ்மக்கள் படுகொலை+பிரபாகரன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான போரளிகளின் படுகொலைகளுக்கு> நீங்கள் குறிப்பிடும் வில்லன்கள் மட்டுமல்ல> இன்னும் கனபேர் இருக்கின்ம்! உங்கள் கூட்டாளி பத்மநாதனை மறந்து விட்டீர்களோ?