மூவின மக்களும் ஒன்றிணைந்து இந்நாட்டை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே எமது நாட்டை வளங்கொழிக்கச் செய்யமுடியுமென சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
உலக சுகாதாரப் பேரவையின் தலைவராக சுகாதார அமைச்சர் தெரிவு செய்யப்பட்டதற்காக ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் அவருக்கு கௌரவிப்பு விழாவொன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;
தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் நாட்டின் ஏனைய சமூகத்தினருக்கு நிகராக வாழக்கூடிய சூழலை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதிகள், வீதி புனரமைப்பு ஆகியவற்றின் மேம்பாடுகள் பெருந்தோட்டப் பகுதிகளில் துரிதப்படுத்தப்படும். மேலும் இந் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒரு தாய் மக்கள் போன்று வாழ வேண்டும். அதற்கான அடித்தளமும் பதுளையிலேயே ஆரம்பிக்கப்பட்டு ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படும்.
ஆரம்ப காலம் முதல் தோட்டத் தொழிலாளர்களும் கிராமவாசிகளும் மிகுந்த ஐக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். இவ்விரு சமூகங்களுக்கிடையிலும் பரஸ்பர ஒற்றுமையும் இருந்து வந்தது. ஆனால், யுத்த சூழலின் போது ஏற்பட்டிருந்த பரஸ்பர ஒற்றுமையில் இரு சமூகங்களுக்கிடையில் விரிசல்கள் ஏற்பட்டன. தற்போது யுத்தத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ் யுத்தமானது தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தம் அல்ல. பயங்கரவாதத்திற்கெதிராகவே மேற்கொள்ளப்பட்டதாகும். இனிமேல், யுத்தமோ, பயங்கரவாதமோ எமது நாட்டிற்குத் தேவையில்லை. மூவின மக்களும் ஒன்றிணைந்து இந்நாட்டினை துரிதமாக அபிவிருத்தி செய்யும் யுத்தத்தை முன்னெடுப்பதன் மூலமே இந் நாட்டை வளங்கொழிக்கச் செய்ய முடியும்.
இந்நாட்டின் அனைத்து மக்களும் சமமாக மதிக்கப்படல் வேண்டும். பாகுபாடுகள், பாரபட்சங்கள் எவ்வகையிலும் இடம்பெறக்கூடாது. பெருந்தோட்டப் பகுதி மக்களினது கல்வி, சுகாதாரம், வீதிபுனரமைப்பு, குடிநீர் விநியோக வசதிகள் என்பவற்றை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையில் புதியதோர் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான விசேட திட்டத்தினை முன்வைத்துள்ளேன். ஏனைய சமூகத்திற்கு நிகராக பெருந்தோட்ட சமூகம் இருக்கவேண்டும். இதனை பதுளை மாவட்டத்திலிருந்தே நடைமுறைப்படுத்தவுள்ளேன்.
ஊவா மாகாண மக்கள் இவ்வருடத்தின் மூன்று தேர்தலை எதிர்கொள்ள் வேண்டியுள்ளது. முதலாவதாக வருவது ஊவா மாகாணசபைத் தேர்தல், அதையடுத்து ஜனாதிபதி தேர்தல், அதன்பின்னர் நாடாளுமன்ற தேர்தல், இத்தேர்தல் அனைத்திலுமே அதிகப் பெரும்பான்மைப் பலத்துடன் ஸ்ரீ.ல.சு. கட்சியே வெற்றியடையும். ஆகையினால் அனைத்து மக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையே ஆதரிக்க முன்வந்துள்ளனர். நடைபெறும் தேர்தல்கள் அனைத்திலுமே பெருந்தோட்டத்துறை மக்கள் அனைவரும் ஸ்ரீ.ல.சு.கட்சியையே பூரணமாக ஆதரித்து அதிகப் பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றியடைய வைப்பர். இதுவிடயத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.