பேதங்களை மறக்க வேண்டுமென கேட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கு உதவி வழங்க சர்வதேச நாணய நிதியத்தை கோர வேண்டுமென அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஊடக அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்தக்கோரிக்கையை விடுத்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்;
“பேதங்களை மறந்து செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்தார். இவ்வாறு வந்தால் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். இதேநேரம், எச்.எஸ்.பி.சி. வங்கி அரசாங்கத்துக்கு கடன் கொடுத்தால் அதை நாம் பொறுப்பேற்க மாட்டோமென எதிர்க்கட்சித் தலைவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். எனவே, இலங்கைக்கு உதவ வேண்டுமென சர்வதேச நாணய நிதியத்தை எதிர்க்கட்சித் தலைவர் தற்போது கோர வேண்டும்.
நேர்மையாக உதவ முன்வந்தால் எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கத்துக்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியும்’
“இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை கூடிய விரைவில் அவரவரது சொந்த இடங்களில் மீள குடியமர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம். கிழக்கில் எதிர்பார்த்ததை விட குறுகிய காலத்தில் மீள் குடியேற்றங்களை செய்தது போல் வடக்கிலும் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் மக்கள் வெகு விரைவில் மீளகுடியமர்த்தப்படுவார்கள்.
இதேவேளை, அனைவரும் தற்போது முன்வந்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூட முன்னர் போலன்றி தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமாறு இந்தியாவில் சென்று கோரிக்கை விடுக்கின்றனர். ஏனெனில், தனி இராச்சியம் குறித்து பேச அவர்களுக்கு தற்போது சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது.
அத்துடன் இந்தியாவும் எமக்கு மில்லியன் கணக்கில் உதவியுள்ளது. அதுமட்டுமல்லாது இலங்கைக்கு இயன்ற வரை உதவ தயாராக இருப்பதாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரும் தெரிவித்திருக்கிறார். அதன் நோக்கமாகவே ஜனாதிபதியின் இந்திய விஜயமும் அமையவுள்ளது.
இதேவேளை, ஜே.ஆர்.ஜெவர்தனவின் அரசியலமைப்பின் பிரகாரம், 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட (13 ஆவது) அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் குறித்தவொரு காலப்பகுதிக்கு ஒன்றிணைக்கப்பட்டிருந்தது. எனினும் அது தவறென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே நீதிமன்ற தீர்ப்பை எமக்கு மீறி செயற்பட முடியாது.
கிழக்கில் மாகாண சபை செயற்படுத்தப்பட்டது போல, விரைவில் வடக்கிலும் மாகாணசபை செயற்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு சமாந்தரமாக உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தி கூடிய விரைவில் வடக்கிலும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமுல்படுத்தப்படும்’ என்று கூறினார்.