‘வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டும்’ ஜூன் 5ல் உலக சுற்றுச் சூழல் தினம் (World Environment Day) – புன்னியாமீன்

world-environment-day-wed-2009.jpgஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. 2009 ம் ஆண்டுக்கான உலக சுற்றுச் சூழல் தினத்தை ‘வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டும்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் உலக சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் சுற்றாடல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும்,  சுற்றுச் சூழல்லைப்  பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும்.

1972இல் சுவீடனின் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றாடலும் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின்  முக்கியத்துவம்,  இயற்கை வளங்கள், அதன் பிரயோகம் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது.  இதில் சுற்றுச் சூழலுக்கும் மனிதனுக்குமிடையே உள்ள நெருங்கிய தொடர்பினைப் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. உலகமயமாக்கல் என்ற போர்வையின் கீழ் சூழல் மாசடையச் செய்வதிலும், அதிக அளவு இயற்கை வளங்களை சர்வ நாசஞ் செய்வதிலும் ஈடுபடுவது மனிதனே! என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
முடிவில் ஜுன் 5ஆம் திகதியை உலக சுற்றுச் சூழல்  (World Environment Day)  தினமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.  இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது.

சூழல் மாசடைதலை மூன்று பிரிவுகளாக வகுக்கலாம். முதலாவது வளிமண்டலம் மாசடைதல், இரண்டாவதாக நிலம் மாசடைதல், அடுத்தாக நீர் மாசுறுதல்.

இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள்,  வனாந்திரங்கள்,  வனசீவராசிகள், வளிமண்டலம்,  பறவைகள்,  சோலைகள்,  கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம்,  விலங்கினம், பறவையினம்,  தாவரங்கள்,  கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி,  உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது.நவீன விஞ்ஞான,  தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக  சுற்றுச் சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள்,  புகை என்பன நீர் நிலைகள்,  வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது. சுற்றுச் சூழலை மனிதன் பாதூக்கவே கடமைப்பட்டவன். நினைத்தவாறு அவற்றை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டவனல்ல. சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன.

மேற்குலகில் சூழலியல் அரசியலின் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம் பெற்று பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாகுவதற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன.

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன். சுற்றாடலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றன.

புவி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்பட்ட பாரிய விளைவுகளாகும். மேலும் சுற்றுச் சூழல் தொடர்பாக காலநிலை மாற்றம், புவிக்கோளம் உஸ்ணமடைதல்,  ஓசோன் படை பாதிப்பு,  நன்னீர் வளம்,  சமுத்திரம்,  கடற்கரைப் பிரதேசங்கள், காடழிப்பு,  வனாந்திரமாக்கல்,  உயிரியல் மாறுபாடு , உயிரியல் தொழில்நுட்பம்,  சுகாதாரம்,  இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறை என்பது சில நிபுணர்கள் மாத்திரம் நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்குகளை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் என்று இன்னும் கூட பலர் நினைக்கிறார்களோ என்று வியக்கவேண்டியிருக்கிறது. சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக அண்மைய சில ஆண்டுகளாக பிறந்த சுற்றுச் சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு உணர்வு காணப்படுகின்ற போதிலும்,  அரசியல் தலைமைத்துவங்கள் இதுவிடயத்தில் போதியளவு அக்கறை காண்பிக்காததால் கணிசமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை

ENUP  இந் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி முஸ்தபா கே. டோல்பா அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதன் மூலம் இன்றைய வறுமை,  சீரழிவு என்பவற்றை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இவை இலட்சக்கணக்கான மக்களின் சுற்றாடல் பாதிப்புற காரணமாக அமைகின்றன. எனவே மக்கள் தம் வாழ்க்கை முறையை அபிவிருத்தி இலக்குகளுக்கேற்ப மாற்றியமைப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றார்.. எனவே சுற்றுசூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது மனிதன் உணர்ந்து கருமத்தை ஆற்ற வேண்டியதும் முக்கியமானதாகும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில்,  ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கேற்ப இளைஞர்களும்,  குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்,  தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும்,  சுற்றுச் சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஐக்கிய நாடுகள் அமைப்பு,  கடந்த 1974-ம் ஆண்டு முதல் ஜூன் 5ம் திகதியை பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி கொண்டாடியுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

1974- ஒரே ஒரு பூமி
1975- மனித வாழ்விடம்
1976- தண்ணீர் வாழ்க்கையின் ஆதாரம்
1977- ஓசோன் படலம்,  சுற்றுச் சூழல் முக்கியத்துவம் நிலம் இழப்பு மற்றும் மண் சீர்கேடு
1978- இழப்பில்லாமல் வளர்ச்சி
1979- நம் குழந்தைகளுக்கு ஒரே எதிர்காலம் இழப்பில்லாமல் வளர்ச்சி
1980- பத்தாண்டுக்கான புதிய சவால் இழப்பில்லாமல் வளர்ச்சி
1981- நிலத்தடி நீர் மனித உணவு பழக்கத்தில் நச்சு வேதிப் பொருட்கள்
1982- பத்தாண்டுகளுக்கு பிறகு ஸ்டாக்ஹோம் (சுற்றுச் சூழல் முக்கியத்துவத்தை புதுப்பித்தல்)
1983- நச்சுக் கழிவு நிர்வாகம் மற்றும் அகற்றுதல்   இரசாயன மழை மற்றும் ஆற்றல்
1984- பாலைவன மேலாண்மை
1985- இளமை  மக்கள் தொகை மற்றும் சுற்றுச்சூழல்
1986- அமைதிக்கு ஒரு மரம்
1987- சுற்றுச் சுழல் மற்றும் வசிப்பிடம்  ஒரு கூரையையும் தாண்டி
1988- சுற்றுச் சூழல் முதலெனில் மேம்பாடு தழைக்கும்
1989- புவி வெப்பமயமாதல்,  புவி எச்சரிக்கை
1990- குழந்தைகள் மற்றும் சுற்றுச் சூழல்
1991- வானிலை மாற்றம். தேவை உலகளாவிய ஒற்றுமை
1992- ஒரே பூமி,  பராமரிப்பு மற்றும் பங்களிப்பு
1993- ஏழ்மை மற்றும் சுற்றுச் சூழல் – வளையத்தை உடைத்தல்
1994- ஒரு பூமி,  ஒரு குடும்பம்
1995- மக்களாகிய நாம் : உலக சுற்றுச் சூழலுக்கு ஒன்றுபடுவோம்
1996- நம் பூமி,  நம் வசிப்பிடம்,  நம் வீடு
1997 – பூமியில் வாழ்க்கைக்கு
1998- பூமியில் வாழ்க்கைக்காக கடல்களை பாதுகாப்போம்
1999- நம் பூமி – நம் எதிர்காலம்,  காப்போம்
2000- சுற்றுச்சூழல் நூற்றாண்டு – செயல்படும் நேரம்
2001- வாழ்க்கையை இணைப்போம்
2002- பூமிக்கு ஒரு வாய்ப்பு
2003- தண்ணீர் – அதற்காக இரண்டு மில்லியன் மக்கள் இறப்பு
2004- தேவை! கடல்கள் மற்றும் சமுத்திரங்கள் – இறப்பு அல்லது வாழ்வு?
2005- பசுமை நகரங்கள் – கிரகத்திற்காக திட்டமிடுவோம்
2006- பாலைவனங்கள் மற்றும் பாலைவனமயமாக்கல் – தரிசு நிலங்களை கைவிடாதீர்
2007- உருகும் பனி – ஒரு சுடான விஷயம்
2008- பழக்கத்தை உதருவோம் – குறைந்த கார்பன் பொருளாரத்தை நோக்கி

இந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி,  ‘வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபடுவோம்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படவுள்ளது. 2009 ஆம் ஆண்டின் செயற்திட்டத்தின் கீழ்  சூழல் சம்பந்தமான விடயங்களுக்கு மனிதநேயத்தை வழங்குதல்,  மக்களை நிலையானதும், பொறுப்பானதுமான விருத்தியின் சுறுசுறுப்பான பிரதிகளாகச் செயற்பட அதிகாரமளித்தல். சூழல் சம்பந்தமான விடயங்கள் பற்றி சமூகத்தின் மத்தியில் மனப்பான்மை மாற்றம் பற்றிய நற்புரிந்துணர்வை வளர்த்தல்,  எல்லா நாடுகளுக்கும்,  மக்களுக்கும் மகிழ்ச்சியுடனும், மிக்க பாதுகாப்புடனும் முன்னேற்றகரமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் வகையில் செயற்படல் என்ற அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது.

உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. 1987ஆம் ஆண்டு முதல் முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடங்களின் விபரம் கீழே தரப்பட்டுள்ளன.

1987 நைரோபி கென்யா
1988 பாங்கொக் தாய்லாந்து
1989 பிரசெல்ஸ் பெல்ஜியம்
1990 மெக்சிகோ நகரம் மெக்சிகோ
1991 ஸ்ட்டொக்ஹோம் சுவீடன்
1992 ரியோ டி ஜெனரோ பிரேசில்
1993 பீஜிங் சீனா
1994 இலண்டன் ஐக்கிய இராச்சியம்
1995 பிரிட்டோரியா தென்னாபிரிக்கா 
1996 இஸ்தான்புல் துருக்கி
1997 சியோல் கொரியக் குடியரசு
1998 மாஸ்கோ ரஷ்யக் கூட்டிணைப்பு
1999 டோக்கியோ ஜப்பான்
2000 அடெலைட் ஆஸ்திரேலியா
2001 தொரினோ/ஹவானா இத்தாலி/கியூபா
2002 ஷென்சென் சீனா
2003 பெய்ரூத் லெபனான்
2004 பார்சிலோனா ஸ்பெயின்
2005 சான் பிரான்சிஸ்கோ ஐக்கிய அமெரிக்கா
2006 அல்ஜீரீஸ் அல்ஜீரியா
2009 டோரொம்ஸ்சோ நோர்வே
2008 வெலிங்டன் நியூசிலாந்து

2009ல் உலக சூழல் தின முதன்மைக் கொண்டாட்டத்தை  மெக்சிக்கோவில் நடத்துவதாக ஐ.நா. சூழல் நிகழ்ச்சித்திட்ட தலைவரும் நிர்வாகப் பணிப்பாளரும், அறிவித்துள்ளார்கள். எனினும், எனினும் தற்போது வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சலின் ஆரம்பம் மெக்சிக்கோவில் இடம்பெற்றதாகக் கருதப்படுவதினால் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் சில தாக்கங்கள் உருவாகலாம் என கருதப்படுகின்றது.

இன்னும் 180 நாட்களில் கோப்பன் ஹேகனில் நடைபெறவுள்ள நெருக்கடியான சூழல் மகாநாட்டில் காலநிலை மாற்றம் பற்றியும் வறுமை ஒழிப்பு பற்றியும், காடுகளின் சிறப்பான முகாமைத்துவம் பற்றியும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வர உள்ளனர். இதனையொட்டி இவ்வருட சூழல் தினம் முக்கியத்துவம் பெறவுள்ளது.  ஐ.நா. சூழல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைய 100கோடி மரங்கள் நடத்திட்டமிடப்பட்டுள்ளன.  இதில் 25 கோடி மரங்களை நட மெக்சிக்கோ முன்வந்துள்ளது.

மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய காலகட்டத்தில் மனித சமுதாயம் எதிர் கெள்ளும் சவால்களிளொன்று சுற்றுச் சூழல் மாசடைதலாகும். இந்நடவடிக்கையானது மக்களால் தன்னிச்சையாக ஏற்படுத்தப்படுகின்ற அபாயகமரான செயற்பாடாகும் என்றும் கூறலாம். இதனால் சர்வதேசமும் அதனைச் சூழவுள்ள பிரபஞ்சமும் அதன் இயற்கை சமநிலையிலிருந்து மாற்ற மடைகின்றது. எனவே இவ்வையகத்தே வாழுகின்ற அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதும் இச்சுற்றாடல் மாசடைதல் என்பது வெள்ளிடைமலை. ஏலவே இதுபற்றிய விழிப்புணர்வை அனைவர்களுக்கும் உண்டாக்க வேண்டிய கடப்பாடு புத்திஜீவிகளையே சாரும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *