வன்னியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையில் படுகாயமடைந்து வவுனியா செட்டிகுளம் ஆஸ்பத்திரிகளிலும் பம்பைமடு மற்றும் வவுனியா திருச்சபை பாடசாலைகளில் தங்கியுள்ள நோயாளர்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்க வவுனியா கிளையின் தொண்டர்கள் 24 மணி நேரமும் உதவிப்பணிகளைச் செய்து வருகின்றனர்.
இதற்காக 240 தொண்டர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் செஞ்சிலுவைச் சின்னம் பொறிக்கப்பட்ட மேலாடைகளை அணிந்து கடமையிலிருப்பதாகவும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரி தெரிவித்தார்.
வன்னிப் பகுதியில் இடம்பெற்ற ஷெல் தாக்குதல், துப்பாக்கிச் சூடு காரணமாகவே இவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளனர். சிறு சிறு காயமடைந்தவர்கள், சத்திரசிகிச்சைக்குள்ளானவர்கள், கை, கால்கள் துண்டிக்கப்பட்டவர்கள் என பல தரப்பினரும் இவர்களில் அடங்குவார்கள்.
நலன்புரி நிலையங்களில் திடீரென சுகயீனம் ஏற்படும் நோயாளர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல செஞ்சிலுவை சங்க அம்புலன்ஸ் வாகனமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன், நலன்புரி நிலையங்களுக்கு பௌசர்கள் மூலமும் செஞ்சிலுவைச் சங்கம் நீர் விநியோகம் செய்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.